கொச்சிக்கடை பயங்கரவாத தாக்குதல் குறித்த அறிக்கை கையளிப்பு!

breaking
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்த முழுமையான அறிக்கை நீதிமன்றத்திடம் கையளிக்கப்படவுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் வாரமளவில் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஏ.வெலிஅங்க தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விடுதிகள் மூன்றிலும், மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திலும், சாய்ந்தமருதில் இடம்பெற்ற வெடிச்சம்பவம் தொடர்பாகவும் முன்னெடுக்கப்பட்ட குற்ற விசாரணை அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வெடிச்சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்காக 7 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டதாகவும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஏ.வெலிஅங்க சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட 250 இற்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.