காட்டுயானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி

breaking
  தென்தமிழீழம்: வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள குடாமுனைக்கல் எனும் பிரதேசத்தில் காட்டு யானையால் தாக்கப்பட்ட வயோதிபர் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் குடாமுனைக்கல் கிராமத்தைச் சேர்ந்த சீனித்தம்பி கனகசூரியம் (வயது 59) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வயோதிப மீனவர் காட்டுப் பகுதியூடாக அப்பகுதியிலுள்ள குளத்தில் மீன்பிடிப்பதற்காகச் சென்றபோது காட்டுக்குள் உலாவித் திரிந்த யானை மீனவரைத் தாக்கி குளத்தில் வீசியுள்ளது. இச்சம்பவத்தை அவதானித்த உறவினரான மற்றைய மீனவர் காட்டு யானையால் தாக்கப்பட்ட மீனவரை மீட்டெடுத்து கரைசேர்த்தபோது அவர் மூர்ச்சையாகி மயங்கிக் கிடந்துள்ளார். இதையடுத்து படுகாயமடைந்த மீனவர் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்து பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்தபோது சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை மரணமாகியுள்ளார். வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஹபீப் றிபானின் கட்டளைக்கு அமைய பிரதேச மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேல் ஆனந்தன் உடற்கூறாய்வுப் பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கை செய்த பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.