“அமெரிக்காவுடன் போருக்கு தயார்” ஈரான் எச்சரிக்கை.!

breaking
சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையான அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயல் மீது கடந்த சனிக்கிழமை அதிகாலை ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய இந்த தாக்குதலில் சுமார் 50 லட்சம் பீப்பாய் எண்ணெய் எரிந்து நாசமானது. இதனால் சவுதியில் ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி அதாவது, நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி நிறுத்தம் இன்னும் பல வாரங்களுக்கு தொடரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உற்பத்தி பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 10 சதவீதம் அதிகரித்தது. அமெரிக்காவின் நியூயார்க் பரிமாற்றச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 5.61 டாலர் அளவுக்கு உயர்ந்து, 60.46 டாலராக அதிகரித்தது. பிரன்ட் கச்சா எண்ணெய் 11.77 சதவீதம் விலை உயர்ந்து 67.31 டாலராக அதிகரித்தது. இனிவரும் காலங்களிலும் இந்தவிலை அதிகரிக்கும் என தெரிகிறது. இதையடுத்து, அமெரிக்காவின் பெட்ரோலிய கச்சா எண்ணெய் கையிருப்பில் இருந்து கச்சா எண்ணெயை பயன்படுத்திக்கொள்ள அரசுக்கு ஜனாதிபதி டிரம்ப் அனுமதியளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில், “சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதல் கச்சா எண்ணெய் விலை உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே அமெரிக்காவின் பெட்ரோலிய கச்சா எண்ணெய் கையிருப்பில் இருந்து அரசு எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கிறேன். சர்வதேச சந்தையில் நிலை சீரடையும் வரை கையிருப்பை பயன்படுத்தலாம்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்றொரு டுவிட்டர் பதிவில் அவர், “சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது தாக்குதல் நடத்தியது யார் என்பதை நாங்கள் அறிவோம். குற்றவாளிகளுக்கு பாடம் புகட்ட தயாராக இருக்கிறோம். அத்துமீறிய இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற எங்கள் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. எனினும் தாக்குதலுக்கு யார் காரணம் என்பது குறித்து சவுதி அரேபியா கூறும் வரை காத்திருப்போம்” என குறிப்பிட்டு உள்ளார். முன்னதாக சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஈரான்தான் தாக்குதல் நடத்தியது என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இது அடிப்படை ஆதரமாற்ற குற்றச்சாட்டு என கூறி ஈரான் மறுத்தது. இந்த சூழலில் ஈரான்தான் தாக்குதல் நடத்தியது என்பதற்கு ஆதாரமாக செயற்கைக்கோள் படம் ஒன்றை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. மேலும் தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருப்பதை அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளும் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டை மறுத்து வரும் ஈரான், இதுபோன்ற பொய் குற்றச்சாட்டுகள் தொடருமாயின் அது அமெரிக்காவின் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு வழிவகுக்கும் என கடுமையாக எச்சரித்துள்ளது. இது குறித்து ஈரான் புரட்சிகர படையின் தளபதி அமிராலி ஹாஜிசாதே கூறுகையில், “அமெரிக்காவுடன் முழுமையான போருக்கு ஈரான் தயாராக உள்ளது. ஈரானை சுற்றி 2000 கி.மீ தூரத்தில் உள்ள அனைத்து அமெரிக்க தளங்களும், அவற்றின் விமானம் தாங்கிகளும் ஈரானின் ஏவுகணைகளின் எல்லைக்குள் உள்ளன என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்” என கூறினார்.