கோப் குழுவின் முன் விசாரணைக்கு செல்லாமல் வெளிநாடு சென்ற ஹிஸ்புல்லாவின் மகன்

breaking
  தென்தமிழீழம்: மட்டக்களப்பு பல்கலைகழகம் மற்றும் இலங்கை ஹிரா அறக்கட்டளையின் இயக்குநர்கள் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும் அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாவும் பொது நிறுவனங்களுக்கான குழுவின் (கோப்) விசாரணைக்கு முன்னிலையாகவில்லை. மட்டக்களப்பு பல்கலைகழகம் தொடர்பான 14 கணக்குகள் திறக்கப்பட்டு நிதிப்பரிமாற்றம் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பான விசாரணைக்கு முன்னிலையாகும்படி, மட்டக்களப்பு பல்கலைகழகம், இலங்கை ஹிரா அறக்கட்டளை, உயர் கல்வி அமைச்சு மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றிற்கு கோப்குழு அறிவித்திருந்தது. எனினும், நேற்று (17) நடந்த விசாரணையில் உயர்கல்வி அமைச்சு, மற்று இலங்கை வங்கி அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர். கோப் குழவின் அறிவித்தல் தொடர்பாக மட்டக்களப்பு பல்கலைகழகம் மற்றும் இலங்கை ஹிரா அறக்கட்டளை அதிகாரிகளுக்கு அமைச்சகம் அறிவித்ததாக உயர்கல்வி அமைச்சின் தலைமை கணக்காளர் தெரிவித்தார். இருப்பினும், அவர்கள் முன்பே திட்டமிட்ட வெளிநாட்டு பயணத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். தலைமை கணக்காளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் ஏன் விசாரணையில் கலந்து கொள்ளத் தவறிவிட்டார்கள் என்ற கேள்வியை கோப் எழுப்பியது. “இந்த இரண்டு நிறுவனங்களின் அதிகாரிகளும் ஹிஸ்புல்லாவுடன் வெளிநாடு சென்றிருந்தார்களா?” என்று கோப் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி கேள்வி எழுப்பினார். இதற்கு திருப்திகரமான பதில் வழங்கப்படாததால், இரு நிறுவனங்களின் அனைத்து அதிகாரிகளையும் ஒக்டோபர் 9ம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு குழு முன் ஆஜராகுமாறு உயர் கல்வி அமைச்சகத்திற்கு உத்தரவிட்டார். அவர்கள் ஏன் விசாரணைக்கு வரவில்லை என்று எழுத்துப்பூர்வ அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது. அத்துடன், ஹிஸ்புல்லாவும், அவரது மகனும் முன்பே திட்டமிடப்பட்ட வெளிநாட்டு பயணம் பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஹந்துன்நெத்தி உத்தரவிட்டார். அந்த நேரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது மட்டக்களப்பு பல்கலைகழகம் தொடர்பாக, இலங்கை நாடாளுமன்றத்தின் கடிதத் தலைப்பில் ஹிஸ்புல்லா சமர்ப்பித்த முன்மொழிவை ஏன் ஏற்றுக்கொண்டது என்ற ஹந்துன்நெத்தியின் கேள்விக்கு உயர் கல்வி அமைச்சக அதிகாரிகள் திருப்திகரமான பதிலை வழங்கத் தவறிவிட்டனர்.