தற்கொலைதாரியின் உடற்பாகங்களை பொரளை பொது மயானத்தில் அடக்கம் செய்யுமாறு உத்தரவு!

breaking
கொழும்பு – கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரியின் உடற்பாகங்களை பொரளை பொதுமயானத்தில் அடக்கம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு இன்றைய தினம்(புதன்கிழமை) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது தற்கொலைதாரியான மொஹமட் முபாரக்கின் உறவினர்கள் உடற்பாகங்களை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்தே குறித்த சடலத்தின் பாகங்களை பொரளை பொதுமயானத்தில் அடக்கம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த தற்கொலைதாரியின் சடலத்தின் பாகங்களை புதைத்த பின்னர் அது தொடர்பான அறிக்கையொன்றை நீதிமன்றில் முன்வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளடங்களாக 250 இற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அதேபோன்று தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதிகளின் உடற்பாகங்கள் வைத்தியசாலைகளின் பிண அறைகளில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் உடற்பாகங்களை பெற்றுக்கொள்ள உறவினர்கள் தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.