ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பைப் பேணிய இலங்கையர்களின் வலையமைப்பின் முக்கிய நபர் கட்டாரில் கைது

breaking
  ஐ.எஸ். ஐ.எஸ். எனும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணிய இலங்கையர்களின் வலையமைப்பின் பிரதான நபராக கருதப்படும் ஒருவரை, 21/4 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து கட்டார் பொலிஸார் கைது செய்து தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர். மொஹம்மட் அன்வர் மொஹம்மட் இன்சாப் எனும் சந்தேக நபரே இவ்வாறு கட்டார் பொலிஸ் நிலையம் ஒன்றால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது சி.ஐ.டி. பொறுப்பில் விசாரிக்கப்பட்டுவரும் தேசிய தெளஹீத் ஜமா அத் முக்கிய உறுப்பினர் பஸ்ஹுல் சஹ்ரானும் குறித்த சந்தேக நபரும் கட்டாரில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி பேணியுள்ளதாகவும் விசாரணைகளில் வெளிபப்டுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனயவுப் பிரிவினர் (சி.ஐ.டி.) கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். கட்டாரில் தற்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொஹம்மட் அன்வர் மொஹம்மட் இன்சாப்புடன் தங்கியிருந்ததாக கூறப்படும் மாவனெல்லையைச் சேர்ந்த சமத் மொஹம்மட் றியாஸ் என்பவர் கட்டார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இரண்டரை மாதம் தடுப்புக் காவல் விசாரணைகளின் பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 16 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டுள்ள குறித்த நபரை சி.ஐ.டி. விமான நிலையத்தில் வைத்து கைது செய்து தற்போது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.