சீக்கிய உறவுகளோடு சேர்ந்து குரல் கொடுப்பது ஏன்?” - டெல்லி பேரணியில் சீமான்

breaking
`ஜம்மு - காஷ்மீர் மக்கள் இழந்த உரிமைகளை மீட்க குரல் கொடுப்போம்' என்கிற முழக்கத்தை முன் வைத்து டெல்லி ராகப் கஞ்ச் குருத்வாராவிலிருந்து ஜந்தர் மந்தர் வரை நாம் தமிழர் கட்சி மற்றும் தல் கால்சா, அகாலி தல் (அம்ரிட்ஸர்) ஆகிய சீக்கிய அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் தேசிய பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பேரணிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் பேரணி இடையில் போலீஸாரால் தடுக்கப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தின் அருகில் உள்ள பன்டிட் பந்த் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய சீமான், ``எங்கள் கண்முன்னே எங்களின் இனவிடுதலைப் போராட்டம் அடித்து நாசமாக்கப்பட்டது. வலிதாங்கிய மக்கள் நாங்கள். எங்களுக்குத்தான் பிற ஒரு தேசிய இனத்தின் வலியை உணர முடியும். எங்கள் கண்முன்னே காஷ்மீர் மக்கள் துன்பப்படுவதைக் கண்டு வேடிக்கை பார்க்கின்ற மக்களாக நாங்கள் இல்லாததால், சீக்கிய உறவுகளோடு சேர்ந்து குரல் கொடுக்கிறோம். தேசிய இனங்கள் எங்கெல்லாம் உரிமை இழந்து ஒடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அவர்களுக்காக தமிழர்களும் சீக்கியர்களும் ஒற்றுமையாக குரல் கொடுப்போம்" என்றார். தொடர்ந்து, போலீஸார் கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை அறிவிப்பு விடுத்ததால் சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரபுவிடம் பேசினோம், ``ஊர்வலத்துக்கான அனுமதி முதலில் அளிக்கப்பட்டு, பிறகு புதன்கிழமை இரவு சட்டம் - ஒழுங்கைக் காரணம் காட்டி ரத்து செய்தனர்” என்றார்.