இன அழிப்பு ஶ்ரீலங்கா இராணுவத்தினால் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் சிலரது விபரங்கள் அடங்கிய நூல் வௌியீடு

breaking
இறுதி யுத்த காலத்தில் குடும்பத்தினருடன் ஶ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் சிலரது விபரங்கள் அடங்கிய நூல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சிறுவர்கள் தினத்தினை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டமொன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது இறுதி யுத்த காலத்தில் வட்டுவாகல், ஓமந்தை மற்றும் பல்வேறு இடங்களிலும் தமது தாய் தந்தையருடன் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும்போது பெற்றோர் சரணடையும்போது அவர்களுடன் இராணுவத்திடம் சரணடைந்த சிறுவர்கள் காணாமல் போயிருந்தனர். இந்த சிறுவர்கள் சிலரது தகவல்கள் அடங்கிய நூல் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது. இந் நூலினை வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தலைவி எஸ்.சரோஜினி வெளியிட்டு வைக்க பாடசாலை மாணவனொருவன் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராசா, இந்து மதகுருவான பிரபாகரக்குருக்கள் ஆகியோரும் நூலினை பெற்றுக்கொண்டனர்.