

இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் ஒன்றாக மன்னார் மாவட்டம் விளங்குகின்றது. தேர்தல் தொகுதிகளில் வன்னிமாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளிலொன்றாகவும் இது இடம்பெறுகின்றது. இம்மாவட்டத்தில் மன்னார் பட்டினம், மாந்தை மேற்கு, மடு, நானாட்டான், முசலி ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளும் இயங்கி வருகின்றன. அதேபோல் மன்னார் மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் மன்னார் மற்றும் மடு ஆகிய இரு கல்வி வலயங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றில் மன்னார் கல்வி வலயத்திலுள்ள சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி, புனித சவேரியார் ஆண்கள் பாடசாலை, புனித சவேரியார் பெண்கள் பாடசாலை ஆகிய மூன்று தமிழ்ப் பாடசாலைகளும் மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்திலுள்ள தேசிய பாடசாலைகளாகும்.
வரலாற்று ரீதியாக நோக்கும்போது இப்பிரதேசம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்துத் தமிழர்களின் பண்டைய இருப்பை, சிறப்பை, ஆளுமையை, வளத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. விஜயன் இந்தியாவிலிருந்து இலங்கையில் கரையொதுங்கிய இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்திய காலத்தில் இங்கு இந்துக்களின் புனிதமிகு வழிபாட்டுத் தலமான திருக்கேதீஸ்வரம் இருந்தமையை மகாவம்சம் போன்ற சிங்கள காவிய நூல்கள் மூலம் அறிய முடிவதுடன், சேர் போல் ஈ. பீரிஸ், சூசைப்பிள்ளை தொம்மானுப்பிள்ளை போன்ற வரலாற்று ஆய்வாளர்களும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். ஆறாம் நூற்றாண்டு காலப்பகுதியிலும், அடுத்த நூற்றாண்டிலும் தேவார முதலிகள் என்று போற்றப்படும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் முறையே “விருதுகுன்றமா மேருவில்” என்று தொடங்கும் தேவாரத் திருப்பதிகத்தையும் “நத்தார்படை ஞானன்” என்று தொடங்கும் தேவாரத் திருப்பதிகத்தையும் பாடியுள்ளனர்.
அதாவது புத்த பெருமானும், இயேசு பெருமானும், நபி பெருமானும் இப்பூமியில் பிறக்குமுன்பே சிவபெருமானின் திருக்கோயிலான கேதீஸ்வரம் சிறப்புடன் இருந்தமை வரலாற்றின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது.
மன்னார் பிரதேசம் போர்த்துக்கேயரால் பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கைப்பற்றப்படும் வரை நல்லூரைத் தலைநகரமாகக் கொண்டிருந்த யாழ்ப்பாணத் தமிழ் அரசின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது. இது வரலாறு எடுத்துக் கூறும் யதார்த்தமான உண்மையாகும். இன்று இம்மாவட்டத்தில் இந்துத் தமிழர்களும் கத்தோலிக்கத் தமிழரும் இஸ்லாமியத் தமிழரும் வாழ்ந்து வருகின்றனர்.
கடற்றொழில், கமத்தொழில், கால்நடை வளர்ப்பு இம்மாவட்ட மக்களின் பாரம்பரிய தொழில்களாக விளங்கி வருகின்றன. மூன்று மதத்தவர்கள் இம்மாவட்டத்தில் வாழ்ந்து வந்தபோதிலும் அரசாங்கத்தால் வழங்கப்படும் வளங்கள் அனைத்து சமூகங்களுக்கும் சமமாகப் பகிரப்படுவதில்லை. வசதிகளும் அவ்வாறே சமத்துவமாக வழங்கப்படுவதில்லை. பாரபட்சம் நிலவுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டே வருகின்றன. ஆனால், இவற்றைப் பொறுப்புடன் எவரும் கவனத்தில் கொள்வதில்லையென்றும் கூறப்படுகின்றது.
தமிழ் மக்கள் குறிப்பாக இந்துக்கள் வாழும் கிராமங்கள் சகல வழிகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருவதை ஆய்வுகள், மதிப்பீடுகள் மூலம் அறிய முடிகின்றது. கடந்தகால யுத்த சூழ்நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களில் இம்மாவட்ட தமிழ் மக்கள் உள்ளனர். வாழ்விடங்களையும், சொத்து சுகங்களையும், உறவுகளையும் இவ்வாறு பல இழப்புகளையும் இழந்தவர்களாக இவர்கள் உள்ளனர்.
யுத்தம் முடிவுற்ற பின் வடக்கின் வசந்தம் என்று கூறி வடமாகாணத்தில் பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது. மக்கள் தமது சொந்தக்காணிகளில் மீளவும் குடியேற்றப்படுவதாகவும், வீட்டு வசதிகள் உள்ளிட்ட சகல அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றிக் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. யுத்தம் நிறைவு பெற்று பத்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் மன்னார் மாவட்ட தமிழ்க் கிராமங்களை எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் எட்டியும் பார்க்காத நிலையே காணப்படுகின்றது.
சில தீய சக்திகள் மக்களின் அன்றாட மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டு இந்துத் தமிழர்களையும், கத்தோலிக்கத் தமிழரையும் மோத விட்டு இலாபம் பெறும் கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதையும் காணக்கூடியதாயுள்ளது. குறித்த இருமதத்தவரும் ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கும் கொண்டாட்டம் என்ற முதுமொழியை உணர்ந்தவர்களாயில்லாமையே வேதனை தருகின்றது.
மன்னார் மாவட்டத்திலுள்ள பொதுவாகவே அனைத்து தமிழ்க் கிராமங்களும் உள்கட்டமைப்பு வசதிகளற்றவையாகவே காணப்படுகின்றன. தமிழ்க் கிராமங்களில் வீதி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கவில்லை. வீதிகள் அநேகமாக குன்றும் குழியுமாகவிருப்பதுடன் அனைத்துமே மண்ணாலான வீதிகளாகவேயுள்ளன. வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் பிரதான வீதியும், தமிழ்க் கிராமங்களை ஊடறுத்துச் செல்லும் வீதிகளும் இதற்குத் தக்க சான்றாக விளங்குகின்றன.
தமிழ்க் கிராமங்களில் மக்கள் அநேகமாகத் தற்காலிகக் கொட்டகைகளிலேயே வாழ்கின்றனர். குடிநீர்வசதி, பாடசாலை வசதி, அஞ்சல் வசதி, வைத்தியசாலை வசதி, போக்குவரத்து வசதி என்பன இன்னும் பொதுவாகவே பட்டியலிடக் கூடிய குறைபாடுகளாகும். இந்திய அரசாங்கத்தால் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென தீர்மானித்து வழங்கப்பட்ட வீடுகள் உரியபடி வழங்கப்படாது, தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு பிறமாவட்டங்களில் வாழும் பிற சமூகத்தவர்களுக்கு அரசியல் அதிகாரத்தின் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதான குற்றச்சாட்டு இதுவரை உரியபடி ஆய்வு செய்யப்பட்டு நியாயம் வழங்கப்படவில்லை என்பது பொது மக்களின் குற்றச்சாட்டாயுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கென நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்ட வீடுகள் பல எவரும் குடியேறாததால் பூட்டி வைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை சூழ காடுகள் வளர்ந்துமுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
பாடசாலைகளைப் பொறுத்தவரை பெருமளவு ஆசிரிய பற்றாக்குறை தமிழ்ப் பாடசாலைகளில் நிலவுவதும் குறிப்பாக இந்து சமயம், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரிய வெற்றிடங்கள் நிரப்பப்படாமலுள்ளமையும் தெரிய வருகின்றது. பல பாடசாலைகளில் பௌதீக வளப்பற்றாக்குறைகளும் காணப்படுகின்றன.
தமிழ்ப் பாடசாலைகள் பலவற்றில் சுற்றுமதிலோ வேலியோ அற்ற நிலையால் பாதுகாப்புப் பிரச்சினை நிலவுகின்றது. அத்துடன் மலசலகூட வசதிகள், குடிநீர் வசதிகள் போன்றவை இன்மையும் காணப்படும் குறைபாடுகளில் முக்கியமானவையாகும்.
பாரம்பரிய விவசாய நிலங்களில் பல காரணங்கள் காட்டப்பட்டு அவற்றில் விவசாயம் செய்வதும், வேற்று சமூகங்களால் ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருப்பதும் தமிழ் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் அடங்குகின்றன. கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலமின்மை, நீர்வசதியின்மை என்பன கால்நடை வளர்ப்புக்குத் தடையாகவுள்ளன. மீள்குடியேற்றப்பட்ட தமிழ் மக்கள் வாழும் கிராமங்களில் முறையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது யார் என்ற வினா எழுகின்றது. அரசியல் அதிகாரத்தை அநாகரிகமான முறையில் சிலர் செயற்படுத்தியதன் விளைவே தமிழ்க்கிராமங்கள் புறக்கணிப்புக்கான காரணமென்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.
மாவட்டத்தின் தமிழ்ப் பிரதிநிதிகளோ, மாகாணசபையிலிருந்த தமிழ்ப் பிரதிநிதிகளோ, உள்ளூராட்சி சபைகளிலுள்ளோரோ மன்னார் மாவட்ட தமிழ் மக்களின் நலனில் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதில் உரியபடி போதிய அக்கறை காட்டவில்லை, செயற்படவில்லையென்ற குற்றச்சாட்டை மறுக்க முடியாது. உண்மை நிலை, யதார்த்த நிலை அதுவாகவேயுள்ளது.
இது மட்டுமல்ல அரசியல் அதிகாரத்துடன் வழங்கப்படும் அரச வேலைவாய்ப்புகளிலும் மன்னார் மாவட்டத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர் அல்லாதோர் பெருமளவு இணைக்கப்படுவதன் மூலம் தகைமையிருந்தும் தமிழர்கள் வேலைவாய்ப்பு இன்றிப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில்வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படும் தமிழர்கள் தொடர்பில் எவரும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.
இரத்தினபுரி மாவட்டத்தில் எங்கு நிலத்தை அகழ்ந்தாலும் மாணிக்கக்கல் கிடைப்பது போல மன்னார் மாவட்டத்தில் அகழும் போது மண்டை ஓடுகளும், மனித எலும்புக் கூடுகளும் கிடைக்கும் என்று கூறத்தக்கதாக அண்மையில் இரு இடங்களில் காணப்பட்ட மனித எச்சங்கள் உள்ளன. மன்னார் மாவட்ட தமிழ் மக்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். தொடர் புறக்கணிப்பிலிருந்து மீட்கப்படவேண்டும். அவர் சகல வளங்களும் பெற்று நிம்மதியாக வாழும்நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.