தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கு லெப். கேணல் குமரப்பா அவர்கள் எழுதிய கடிதத்திலிருந்து.!

breaking
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட லெப்டினன்ட் கேணல் குமரப்பா அவர்கள் 1983ம் ஆண்டு தன்னை முழுமையாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். தமிழர் தாயகப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினருக்கும், காவல்துறையினருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் பங்கெடுத்து சிறிலங்கா படையிருக்கு பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தியிருந்தார். தமிழீழத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சிறிலங்கா படையினருக்கு எதிரான தாக்குதல்களில் லெப்.கேணல் குமரப்பா அவர்கள் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. குமரப்பா அவர்களின் திறமையை அறிந்திருந்த தேசியத் தலைவர் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட தளபதியாகவும், யாழ். மாவட்டத் தளபதியாகவும் நியமித்தார். தலைவர் அவர்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை தனது செயற்பாட்டின் மூலம் குமரப்பா அவர்கள் நிருப்பித்திருந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் தளபதியாகவும். யாழ். மாவட்டத்தின் தளபதியாகவும் விளங்கிய காலத்தில் அந்தந்த மாவட்டங்களில் சிறிலங்கா படையினருக்கும், சிறிலங்கா காவல்துறையினருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் லெப்.கேணல் குமரப்பா அவர்கள் ஈடுபட்டதுடன் அந்தந்த மாவட்டங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பினை உறுதியாகக் கட்டியமைக்க அயராது உழைத்தார்.   சிறிலங்கா – இந்திய உடன்படிக்கை காலப்பகுதியில் லெப்.கேணல் குமரப்பா அவர்கள் திருகோணமலை மாவட்டத் தளபதி லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட போராளிகளுடன் தமிழீழக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு காங்கேசன்துறை படை முகாமிலும் பின்னர் பலாலி படைமுகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்குக் கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்ட சதியினை முறியடிப்பதற்காக சயனைட் உட்கொண்டு தம் இன்னுயிர்களை இவர்கள் ஈகம் செய்தனர். இந்திய சிறிலங்கா படைகளின் சதியினை அறிந்து கொண்ட லெப்.கேணல் குமரப்பா அவர்கள் தன்னை அழித்து கொள்வதற்கு முன்னர் தேசியத் தலைவர் அவர்களிற்கு எழுதிய மடல்: கனம் தலைவர் அவர்களுக்கு, குமரப்பா ஆகிய நான் 3.10.87 அன்று அதிகாலை 4.30 மணியளவில் சிறிலங்கா கடற்படையால் பருத்தித்துறை கடலுக்கு மேலாக வைத்துக் கைது செய்யப்பட்டேன். பின்பு காங்கேசன்துறை முகாமிற்கு கொண்டு வந்து, அங்கிருந்து பலாலி இராணுவ முகாமுக்கு இந்திய அமைதிப் படையினரின் கண்காணிப்பிலும், இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பிலும் இருக்கிறேன். மேலும் என்னை கொழும்பிற்குக் கொண்டு செல்ல நேரிடலாம். நான் இலங்கை அரசாங்கத்தின் சட்டங்களை அங்கீகரிக்கவில்லை. என்னைக் கொழும்பு கொண்டு செல்ல நேரும் பட்சத்தில் என்னை முழுமையாக அழித்துக் கொள்ள சித்தமாயுள்ளேன். ”புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்” இங்ஙனம் குமரப்பா (ஒப்பம்)