சிறிலங்காவின் அதிபர் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமா?- கோபி இரத்தினம்

breaking

வரும் நொவெம்பர் பதினாறாம் திகதி நடைபெறவிருக்கிற சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில்  தமிழ்தரப்புகளிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. அதுபோல் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற  கருத்தும் சில தரப்புகளால் முன்வைக்கப்படுகிறது. அணமையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைச் சந்தித்த சில தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் தேர்தலைப் புறக்கணிக்குமாறு முன்னணி தமிழ் மக்களிடம் வலியுறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாகத் தெரியவருகிறது.

இத்தேர்தலில் வெற்றியானது தனித்து சிங்கள மக்களின் வாக்குகளால் தீர்மானிக்கப்பட முடியாதது, தமிழர் தேசத்தினதும், இதர தேசிய சிறுபான்மையினங்களினதும்வாக்குகள் இத்தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக அமைந்துள்ளது. தெரிவு செய்யப்படும் அதிபர் முழுநாட்டினையும் அதிகாரம் செலுத்துவார் என்றமையால் யாரைத் தெரிவு செய்வது என்பது ஒவ்வொரு வாக்காளருக்கும் முக்கியமானது. ஆகவே தேர்தல் புறக்கணிப்பு என்பது விரும்பத்தகாத முடிவுகளுக்கு இட்டுச் சென்றுவிடும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மக்கள எத்தகைய முடிவினை எடுக்க வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுவதில் ஆச்சரியமில்லை. இத் தேர்தலில் யார் வெற்றி பெறுவது என்பதனைத்தீர்மானிக்கும் வாக்குகளாக தமிழ் மக்களின் வாக்குகள் அமையக் கூடும் என்றாலும், போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் இரண்டு இடங்களுக்கு வருபவர்களுடனேயே இத்தெரிவு மட்டுப்படுத்தப்படுகிறது.  ஆதலால் தேர்தலில் போட்டியிடுபவர்களில் யாரை வெற்றிபெற வைப்பது என்பது தமிழ் மக்களின் கைகளில்  தங்கியிருக்கவில்லை. போட்டியிடுபவர்களில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் வேட்பாளர்கள் தமது தெரிவிற்கு ஏற்றவர்கள் இல்லை என்ற நிலையிருப்பின் தமிழ் மக்களின் வாக்குப் பலம் அவர்களுக்குச் சாதகமான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உதவப் போவதில்லை. ஆகவே தமிழ் மக்கள் தமது வாக்குப்பலத்தால் King Makers என்ற நிலையில் இருப்பதாகக் கூறப்படுவது வெகுவாக மிகைப்படுத்தப் பட்ட கூற்றாக அமைந்துள்ளது.

இலங்கைத் தீவில் கடந்த எழுபதாண்டுகளாக நடைபெற்றுவரும் தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கும் வழக்கத்தை அவதானிக்கும்போது தேர்தல் புறக்கணிப்பு என்பது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடைமுறையாக அமையவில்லை என்பதனை நாம் அறிந்து கொள்ளலாம். 2005ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுதலைப்புலிகள் விடுத்த வேண்டுகோளை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இப்போது அவர்கள் இல்லாத நிலையில் தேர்தலைப் புறக்கணிக்குமாறு வேறு தமிழ்த் தேசியத் தரப்புகள் கோருவனை மக்கள் கவனத்திற் கொள்வார்களா என்பதனை உறுதியிட்டுக் கூற முடியதுள்ளது. இந்தியத் தேர்தல்களில் காணப்படும்நோட்டா யாருக்குமில்லை (None Of The Above) என்ற தெரிவு சிறிலங்காவின் தேர்தல் முறையில் வழங்கப்படுவதில்லை. ஆதலால் தேர்தல் புறக்கணிப்பு நடைபெறுமாயின் தமது வாக்குகள் கள்ளவாக்குகளாக அளிக்கப்படும்  அபாயம் இருப்பதனையும் மக்கள் அறிவார்கள்.

இத்தேர்தலில் முதன்மை வேட்பாளர்கள் என அறிவிக்கப்பட்டவர்களாக பொதுசன முன்னணியின் வேட்பாளர் கோத்தாபாய இராஜபக்சவையும், ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரான சஜித் பிரேமதாசவையும் மாத்திரம் கருதமுடியும். இவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் ஐந்து சதவீத வாக்குகளைப் பெறுவதே கடினமாக இருக்கும். மேற்குறித்த இருவரும் ஏறத்தாள ஒரே அரசியற்கொள்கைகளுடனேயே தமது பரப்புரையை ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைளுக்கு தீர்வு விடயத்தில் இருவரும் ஒரே கொள்கைகையே கொண்டிருக்கின்றனர். இன்னமும் தெளிவாகச் சொல்வதானால் தமிழ் மக்களுக்கு அரசியற் பிரச்சனைகள் இருக்கின்றன என்பதைக்கூட இவ்விருவரும்ஏற்றுக்கொள்ளவில்லை.

கடந்த தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிரிசேன தாரண்மைவாத கொள்கைகளின் அடிப்படையில் சில வாக்குறுதிகளை முன்வைத்துப் போட்டியிட்டார். புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கிஅதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்போவதாகவும் வாக்குறுதியளித்திருந்தார். இதனை வைத்து தமிழ் மக்களின் அரசியற்கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தீர்வு ஏற்படப்போவதாகவும், தாங்கள் சிரிசேன – இரணிலுடன் இதயங்களுகிடையிலான ஒப்பந்தம் செய்துள்ளோம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரப்புரை செய்து தமிழ் மக்களின் வாக்குகளைஅவருக்குப் பெற்றுக் கொடுத்தது. இத் தேர்தலில் இரண்டு முதன்மை வேட்பாளரகளும் ஒற்றையாட்சியை வெளிப்படையாகவே வலியுறுத்தும் நிலையில், யாருக்கு வாக்களிப்பது என்பதனை கூட்டமைப்பினால்  முடிவுசெய்ய முடியாதுள்ளது. இதனிடையே முதன்மை வேட்பாளர்கள் இருவரும் எழுத்து மூலமான உறுதிமொழியினை வழங்காதவிடத்து தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தினை தமிழரசுக்கட்சியின் பிரமுகர்கள் இருவர் வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு தமிழரசுக்கட்சியின் பிரமுகர்கள் தேர்தல் புறக்கணிப்பினைப் பற்றிப் பேசியிருந்தாலும், தமிழரசுக்கட்சியும் அதன் பங்காளிக் கட்சிகளும் ஒரு போதும் தேர்தல் புறக்கணிப்பினைக் கோரப்போவதில்லை. மாறாக மேற்குலக நாடுகளும் இந்தியாவும் குறிக்காட்டுகிற ஒரு வேட்பாளரையே அவை ஆதரிக்கும். அவ்வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபடும். இங்கு அவரகள் எதிரநோக்கப்போகும் சிக்கல் இதுதான். சிங்கள பௌத்த மேலாதிக்க நிலையில் தேசியவாதம் பேசுகிற இரண்டுதரப்பும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் இல்லை என்ற வகையில் இனவாதக் கருத்துகளை முன்வைத்துப் பரப்புரைகளை மேற்கொள்வார்களாயின் அவர்களில் ஒருவரை ஆதரிக்குமாறு கோரப்போகும் கூட்டமைப்பு  தமிழ் மக்களின் கண்டனத்திற்கு உள்ளாகும். இது அடுத்த நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் வாக்கு வங்கியைப் பெருமளவில் பாதிக்கும் என கூட்டமைப்பினர் அச்சப்படுவது தெரிகிறது.

போட்டியிடும் முதன்மை வேட்பாளர்கள் இருவரும் மோசமானவர்களாக இருந்தாலும் அவர்களில் குறைந்தளவு பாதிப்பினை ஏற்படுத்துபவருக்கு ஆதரவு வழங்கலாம் என்ற அதன் பழைய நிலைப்பாட்டையே கூட்டமைப்பு முன்வைக்கவிருக்கிறது. இதனடிப்படையில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரை ஆதரிக்குமாறு கூட்மைப்பு தமிழ் மக்களைக்கோரும் என எதிர்பார்க்கலாம். செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஆகியோருடைய தலைமையில் தமிழரசுக்கட்சி செயற்பட்ட காலத்திலிருந்து அக்கட்சி ஐக்கிய தேசியக்கட்சியுடன் உறவினைப் பேணிவந்தது. அது போலவே இப்போதும் நடந்துகொள்கிறது. 2005-2015ம் ஆண்டுகாலப் பகுதியில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவிருந்த கோத்தபாய இராஜபக்சவின் நெறிப்படுத்தலிலேயே பல மோசமான மனிதவுரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனைக் காரணங்காட்டி அவர் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் முன்னரைப் போலவே இராணுவ நெருக்குவாரம் அதிகரிக்கும் என்ற அச்சத்தை உருவாக்கி, அவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காது தடுக்கும் உத்தியினை கூட்டமைப்பு கையாளும். அதே காரணங்களை முனவைத்து  தேர்தல் புறக்கணிப்பினைத் தடுக்கவும் கூட்டமைப்பினர் முற்படுவர்.

மனிதவுரிமை மீறல்களில், மானிடத்திற்கு எதிரான குற்றச் செயல்களில், இனவழிப்பில் கோத்தாபாய ஈடுபட்டது உண்மையே. எனினும் இவ்வாறாக அவர் நடந்துகொண்டபோது சர்வதேச சமூகம் பாராமுகமாக நடந்துகொண்டமையையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். இன்னமும் விளக்கமாகச் சொல்வதானால், இந்தியாவினதும் மேற்குலகத்தினதும் மறைமுகமான உடன்பாட்டுடனேயே இவ்வாறான குற்றங்கள் இழைக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் எவ்விதத்திலும் அழிக்கப்படவேண்டும் என்பதில் முப்பதுக்கு மேற்பட்ட நாடுகள் சிறிலங்காவிற்கு உதவியமையை இவ்விடத்தில் நாம் நினைவிற்கொள்ள வேண்டும். மகிந்த இராஜபக்ச மேற்குலகத்துடன் முரண்பட்டபோது, போர்க்குற்ற விசாரணை பற்றிப் பேசப்பட்டதே தவிர இனவழிப்பு பற்றிப் பேசுவதனை மேற்குலகம் இன்றளவும் தவிர்த்து வருகிறது. கோத்தபாய இராஜபக்ச சிறிலங்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் முன்னரைப் போல நடந்துகொள்ள மாட்டார் எனக் கூறுவது அவர் தி்ருந்தி நல்ல மனிதராக மாறிவிட்டார் என்ற அர்த்தத்தில் அல்ல. மாறாக முன்னரைப்போல் நடந்துகொள்வதற்கான வாய்ப்பான சூழ்நிலை இன்று அவர் முன் இல்லை என்பதேஅதற்கான காரணமாக அமைகிறது. அதுபோன்று தேர்தலை பெருமளவிலான தமிழ்வாக்காளர்கள் புறக்கணித்தால் அது ஒரு பூதத்தை ஆட்சிக்கு கொண்டு வந்துவிடும் என்று பயங்காட்டுபவர்களுக்கு பதிலளிப்பதற்காக இவ்வாறு கூறப்படுகிறதே தவிர, கோத்தாபாயவிற்கு வாக்களிக்குமாறோ அல்லது மற்றைய வேட்பாளர்களை விட அவர் சிறந்தவர் என்றோ இங்கு குறிப்பிடப்படவில்லை என்பதனைக் கவனத்தில் எடுக்கவும்.

இத்தேர்தலில் பெருமளவிலான தமிழ் மக்கள் வாக்களிக்காது விட்டால் அதனை சர்வதேச மட்டத்தில எவ்வாறு பார்க்கப்படும் என்பதனையிட்டும் நாம் கரிசனை கொள்ள வேண்டும். எந்தவொரு தேர்தல் பற்றிய அவதானங்களும் வெறுமனே யார் வெல்கிறார்கள் தோற்கிறார்கள் என்பதுடன் மட்டுப்படுத்தபடுவதில்லை. மாறாக வாக்களிப்புத் தொடர்பான எல்லா விடயங்களும் கவனத்திலெடுக்கப்பட்டு முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஆகவே இத்தேர்தலை தமிழ் வாக்காளர்கள் புறக்கணித்தால், சிறிலங்காவின் தேர்தல் முறையிலான சனநாயக முறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்ற செய்தி வெளிப்படும். அதுபோன்று தமது அரசியல் உரிமைகள் விடயத்தில் சிறிலங்காவின் அதிபரை அவர்கள் நம்பியிருக்கவில்லை என்பதும் தெரியவரும். கடந்த நான்கரை வருடகால அரசாங்கத்தின் நல்லிணக்கமுயற்சிகள் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தவில்லை என்பதும் புலனாகும். இன்றைய சூழலில் சிறிலங்காவின் தேர்தல்முறையை தமிழ் மக்கள் நிராகரிப்பதனை மேற்குலகமோ அல்லது இந்தியாவோ விரும்பப் போவதில்லை. அது இன்னொரு ஆயுதப் போராட்டத்திற்கு வித்திடுவதில் வந்து முடியும் என அவர்கள் அச்சப்படலாம். மூலோபாய முக்கியத்தும் அதிகரித்துவரும் இம்ந்தோ பசிபிக் பிராந்தியத்தின் அமைதி நிலமையை குழம்புவதற்கு இச்சக்திகள் இடமளிக்கப்போவதில்லை. ஆகவே தேர்தல் புறக்கணிப்பினைத் தடுப்பதற்கு தம்மாலான முயற்சிகளை அவர்கள் எடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம். இவ்விடயத்தில் உதவ இத்தரப்புகளின் முகவர் அமைப்புகள் போன்று செயற்படும் தமிழ்க்கட்சிகள் களத்தில் இறக்கப்படும். தேர்தல் புற்க்கணிப்பின் முக்கியத்துவத்தினை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்வார்களேயானால் அந்த ஒன்றைத் தவிர இத்தேர்தலில் வேறு தெரிவுகள் இல்லை என்பதனை அவர்கள் உணர்ந்துகொண்டு செயற்படுவர் என எதிர்பார்க்கலாம்.