இந்தியாவுடன் நதி நீரை பகிர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவன் படுகொலை.!

breaking
இந்தியாவுடனான நதி நீரை பங்கிடும் உடன்படிக்கைக்கு எதிராக  முகப்புத்தகத்தில் பதிவு செய்த மாணவன்  ஆளும் கட்சி ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராக பங்களாதேசில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மூண்டுள்ளன. ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பினால் பல்கலைகழக மாணவன் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பங்களாதேசில் மாணவர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். இந்தியாவுடன் பெனி ஆற்றின் நீரை பங்கிடும் பங்களாதேஸ் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்ட பங்களாதேசின் பொறியியல் தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் மாணவர் அப்ரார் பகாட்டே கொலை செய்யப்ட்டுள்ளார். சனிக்கிழமை பங்களாதேசும் இந்தியாவும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. பங்களாதேஸ் உடன் நீரை பங்கிடும் உடன்படிக்கையி;ல் கைச்சாத்திடுவதற்கு இந்தியா பல வருடங்களாக முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது. இந்த உடன்படிக்கை இந்தியாவிற்கு சாதகமானது என்ற கருத்து பங்களாதேசில் காணப்படுகின்றது. அப்ராரின் முகநூல் பதிவிற்காகவே அவர் கொல்லப்பட்டார் இது அர்த்தமற்ற நடவடிக்கை என சக மாணவர் ஒருவர் அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார். ஆளும்கட்சியின் மாணவர் பிரிவின் காடையர்களே அவரை கொன்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனது மகன் அப்பாவி ஆனால் அவர் உறுதியான கருத்துக்களை கொண்டிருந்தார் அதற்காகவே அவர் கொல்லப்பட்டார் என அப்ராரின் தந்தை தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களும் ஆளும்கட்சியின் மாணவர் பிரிவினர் மீதே குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். விக்கெட் , மூங்கில் தடி போன்ற கூரான ஆயுதங்களால் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள் காரணமாக மாணவனிற்கு மரணம் ஏற்பட்டது என மருத்துவ அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இதேவேளை இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் தலைநகர் உட்பட பல நகரங்களில் மாணவர்கள் வீதி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.