சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பாளர் களமிறக்காதமைக்கு காரணம் கோட்டா – திலங்க சுமதிபால.!

breaking
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவினை வழங்குவதற்காகவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் களமிறங்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார். கொழும்பில்  நேற்று  (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “இன்று ஜனாதிபதித் தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாச – கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளார்கள். இலங்கையின் தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது, நாம் கோட்டாபய ராஜபக்ஷவுக்குத்தான் எமது ஆதரவினை வழங்குவோம். அவர் போன்ற ஒருவரின் தேவை இன்று நாட்டுக்குத் தேவைப்படுகிறார். அரசியல்வாதியாக அன்றி, நிர்வாகத் திறமையுள்ள ஒருவர்தான் எமது நாட்டுக்குத் தேவைப்படுகிறார். அந்தவகையில், கோட்டபய ராஜபக்ஷவின் தெரிவு சரியானது என்றே எமக்குத் தெரிகிறது. எனவே, அவரது வெற்றிக்காக நாம் உழைப்பதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஒரே நிலைப்பாட்டுக்கு இந்த விடயத்தில் வரவேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். எவ்வாறாயினும், சுதந்திரக் கட்சி அவருக்கான ஆதரவினை வழங்கும் என்றே தெரிகிறது. இதனால்தான், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நாம் களமிறக்கவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமையானது, ஆசியாவின் அரசியலிலேயே முக்கியமான ஒன்றாகத்தான் கருதப்படுகிறது. அதற்கிணங்க, இந்த விடயத்திலும் சிறப்பானதொரு தீர்மானம் எடுக்கப்படும்” என கூறினார்.