100 மேற்பட்ட அடிகள் ஆழம்வரை கற்பாறைகள் அகழ்வு: உயிர் அச்சத்துடன் மக்கள்

breaking
வடதமிழீழம்: வவுனியா வாரிக்குட்டியூர் கிராமத்தில் கடந்த 6 வருடங்களாக கல் அகழ்வு பணி நடைபெற்று வருவதால் அதற்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் உயிர் அச்சுற்றுத்தல்களை சந்தித்து வருவதாக குற்றசாட்டுகின்றனர். வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாரிகுட்டியூர் கிராமத்திற்கருகில் உள்ள மலையில் கல் அகழ்வு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சுமார் 100 அடி ஆழம் வரை கற்பாறைகள் உடைக்கபட்டு கற்கள் அகழப்பட்டு வருகின்றன. பாறைகளை உடைப்பதற்காக சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் பயன் படுத்தப்படுகின்றன. இதனால் வெடித்து சிதறும் கருங்கற்கள் அருகில் அமைந்துள்ள கலைமகள் கிராமத்தில் வசிக்கும் மக்களின் வீடுகளிற்குள் வந்து விழுகின்றது. தொடர்ச்சியாக இவ்வாறு இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் மாத்திரம் 15 பேரது காணிகளிற்குள் பெரியளவிலான கற்கள் வந்து விழுந்துள்ளதுடன், நான்கு வீடுகளின் கூரை தகடுகளும் சேதமடைந்துள்ளது. இதேவேளை நிலமட்டத்தில் இருந்து 100 அடிக்கும் ஆளமான பகுதிகளில் கற்கள் உடைக்கபடுவதால் அண்மையில் உள்ள கிராமத்தின் கிணறுகள், குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மிகவும் கடுமையாக பாதிக்கபட்டுள்ளதுடன் அருகிலுள்ள கிணறுகளில் சுத்தமாக நீர் இல்லாத நிலமை ஏற்பட்டுள்ளதுடன் வெடிச்சத்தம் காரணமாக குழந்தைகளிற்கு செவிட்டுதன்மை குறைபாடு ஏற்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். குறித்த பகுதியில் பல வருடமாக வசித்து வருகின்ற மக்கள் தற்காலிக கொட்டில்களில் இருந்த நிலையில் வீடமைப்பு அதிகார சபையால் வழங்கபட்ட மாதிரி வீட்டுத்திட்டம் பூர்த்தி செய்யபட்டு முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவால் கடந்த மாதமளவில் திறந்து வைக்கபட்டிருந்தது. தற்போது அந்த புதிய வீடுகளின் கூரைதகடுகளே கற்கள் விழுந்து சேதமடைந்துள்ளதுடன், அதிஸ்ரவசமாக குழந்தைகள், மற்றும் பொதுமக்களிற்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. குறித்த கல் அகழ்வு பணி நடைபெறும் “றங்கெத்கம” என்ற பகுதி வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை எல்லைக்குள் வருவதுடன் பாதிக்கப்பட்டுள்ள கிராமம் செட்டிகுளம் பிரதேச சபை எல்லைக்குள் வருகின்ற தமிழ் கிராமமாக உள்ளது. இதனால் இவ்விடயம் தொடர்பாக எங்கு சென்று முறையிடுவது என்பதில் குழப்ப நிலை காணப்படுவதாக கிராம மக்கள் கவலை தெரிவிப்பதுடன் அனைத்து தரப்புகளிற்கும் கடிதம் மூலம் தமது பிரச்சினைகளை பலமுறை தெரிவித்துள்ளதாகவும் யாரும் நிரந்தர தீர்வை பெற்றுதரவில்லை என்று விசனம் தெரிவிக்கின்றனர். எனவே கிராமத்தின் இருப்பை பாதுகாக்கும் வகையில் உரிய அதிகாரிகள் ஆக்கபுர்வமான நடவடிக்கைகளை எடுப்பதுடன் குறித்த செயற்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இதேவேளை பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக சிலவேளைகளில் குறித்த கல் அகழ்வு பணி இடை நிறுத்தப்படுவதும் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கபடுவதும் வாடிக்கையாக மாறிவிட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபை செயலாளரிடம் கேட்டபோது குறித்த கல் அகழ்வு பணிக்கான வியாபார அனுமதி இந்த வருடம் எமது பிரதேச சபையால் கொடுக்கபட்டுள்ளது. இது தொடர்பாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் அதனை ஆராய்வதாக தெரிவித்தார் .