பாதுகாப்பான கண்டுபிடிப்பிற்கு சர்வதேச ரீதியில் பதக்கம் பெற்ற தமிழ் மாணவன்

breaking
சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரி மாணவன் கிருஷ்ணகுமார் முகேஷ் ராம் (17) சர்வதேச ரீதியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். வெள்ளி பதக்கம் வென்ற குறித்த மாணவனை வரவேற்கும் நிகழ்வு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் செபமாலை சந்தியாகு தலைமையில் புதன்கிழமை(16) காலை 11 மணியளவில் இடம்பெற்றது. அதிகரித்துவரும் வீதி விபத்தினால் ஏற்படும் மரணத்தை தவிர்க்கும் முகமாக இக்கண்டுபிடிப்பு அமைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் வேளை ஆள் நடமாற்றமற்ற இஇரவு வேளைகளில் ஏற்படுகின்ற விபத்தின் போது போதிய முதலுதவி இன்றி ஏற்படும் மரணத்தை கட்டுப்படுத்தும் பாதுகாப்பான தலைக்கவசத்தை(safty helmad) ஐ கண்டுபிடித்ததற்காகவே மாணவன் முகேஷ்ராம் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இவ்வாண்டு இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தா நகரில் இடம்பெற்ற 19 வயதிற்குட்பட்ட சர்வதேச புத்தாக்குனர் போட்டி கடந்த 9ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை நடைபெற்றது. சர்வதேச ரீதியில் 260 இளம் கண்டுபிடிப்பாளர்கள் தமது ஆக்கங்களுடன் பங்குபற்றினர். இலங்கையிலிருந்து 12 இளம் கண்டுபிடிப்பாளர்களும் கலந்து கொண்ட நிலையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து கலந்துகொண்ட ஒரே ஒரு மாணவன் முகேஷ் ராம் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவனின் சாதனை குறித்து கல்லூரியில் அதிபர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு கருத்து தெரிவிக்கையில், தேசிய ரீதியில் பல சாதனை நிகழ்த்தி சர்வதேச புத்தாக்குனர் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கத்தினை பெற்று எமது பாடசாலைக்கு மாத்திரமல்ல , எமது பிரதேசத்திற்கும், முழு நாட்டிற்க்குமே பெருமை தேடித் தந்துள்ளார் . மாணவனின் கண்டுபிடிப்பை கண்டு கல்லூரி அதிபராகிய நான் பெருமையடைகிறேன். இந்த கண்டு பிடிப்பானது பலருக்கு உதவிசெய்ய இருக்கின்றது. உயிரை காக்கின்ற கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க இவ் மாணவனுக்கு இறைவன் வழங்கிய கொடைக்கும் மாணவனை ஈன்றெடுத்த பெற்றோருக்கும் வழிப்படுத்திய ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்தார். 43 தேசிய விருதுகளையும் 6 சர்வதேச விருதுகளையும் 5 நாடுகளின் சிறப்பு விருதுகளையும் பெற்று இதுவரை 99 கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்துள்ள இளம் விஞ்ஞானி யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் அவர்கள் நேரில் சென்று நினைவுச்சின்னம் வழங்கி வாழ்த்தினார். இங்கு கருத்து கூறிய இளம் விஞ்ஞானி வினோஜ்குமார் சர்வதேச ரீதியில் வெள்ளி பதக்கத்தை பெற்று பாடசாலைக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த சமூகத்திற்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும், பெருமை தேடி தந்துள்ளார் அவரை பாராட்டி வாழ்த்துகின்றோம். இவரது கண்டுபிடிப்புகள் மென்மேலும் வளர வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.முகேஷ் ராமின் கண்டுபிடிப்பிற்கு உறுதுணையாய் நின்ற அதிபர் ,ஆசிரியர்கள், சகமாணவர்கள் ,கோட்டக்கல்வி , வலயக்கல்வி அலுவலர்கள் மாகாண கல்விப் பணிப்பாளர் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள் என தெரிவித்தார். உயிர்காக்கும் தலைகவசத்தை கண்டுபிடித்து வெள்ளிபதக்கத்தை வென்ற மாணவன் முகேஷ் ராம் கண்டுபிடிப்பு தொடர்பில் கூறுகையில் . இரவு வேளையில் ஆள்நடமாற்றமற்ற பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து நடைபெற்றால் இணைத்துக்கொள்ளப்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக தகவல் வழங்கி மரணத்தை தவிர்த்துக் கொள்வதற்கான தலைக் கவசத்தினை கண்டுபிடித்துள்ளேன். எனது கண்டுபிடிப்பானது விபத்துக்கள் நடைபெற்ற இடத்தினை தெரியப்படுத்தும் நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தொடுகை மென்பொருளை பயன்படுத்தி பாதிப்புக்கள் சம்பந்தமான குறுஞ்செய்தி மூலம் கைத்தொலைபேசிக்கு தகவல்கள் அறிவுறுத்தப்படும் வகையில் வடிவமைத்துள்ளேன். ஆசிய நாடுகளில் பெரும்பாலும் மோட்டார் சைக்கிள் பாவிப்போரின் எண்ணிக்கை அதிகம் அதேபோன்று மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களே கூடுதலாக விபத்தில் சிக்கி மரணிக்கின்றனர் இவற்றை தவிர்க்கும் நோக்குடன் எனது கண்டுபிடிப்பு அமைந்ததனாலே சர்வதேச ரீதியில் பங்குபற்றி வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளேன். எனக்கு சகலவிதத்திலும் உதவிய எனது பெற்றோர்,கல்லூரி அதிபர்,பிரதி அதிபர்கள். ஆசிரியர்கள்,சக மாணவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.