சிகிரியாவில் சுற்றுலா நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த யானை பலி

breaking
ஶ்ரீலங்கா: சிகிரியாவில் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக ஈடுப்படுத்தப்பட்டிருந்த யானை ஒன்று நேற்று திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த யானை நேற்று மாத்திரம் மூன்று முறை சுற்றுலா நடவடிக்கைகளுக் குப் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், நான்காவது பயணத்திற்காகச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற போதே உயிரிழந்துள்ளது. யானை நோய்வாய்ப்பட்டிருந்ததை அறிந்திருந்தும் யானைப் பாகன் சுற்றுலாப் பயணிகளை அதன் மேல் ஏற்றி அனுப்பியதாகவும், சுற்றுலாப் பயணிகள் யானையை விட்டு இறங்கிய சிறிது நேரத்திலேயே குறித்த யானை உயிரிழந்தாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிகிரியாவில் சுற்றுலா நடவடிக்கையில் ஈடுபடும் பியசேன கமகே என்பவரால் நடத்திச் செல்லப்படும் இந்த யானையின் உரிமையாளர் இரத்தினபுரி பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் வாசனா என்ற 18 வயதான யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் மூன்று முறை சுற்றுலா நடவடிக்கைகளில் குறித்த யானை ஈடுபட்டதாகவும் நான்காவது பயணத்தை ஆரம்பித்து சிறுது தூரம் கடக்கையில் யானையால் நடக்க முடியாது போனதாக யானைப் பாகன் தெரிவித்துள்ளார். இந்த யானை சுமார் 4 வருடங்களாகச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதாகவும் ஆனால் நேற்று ஏதேனும் உடல் நலக்குறைவு காரணமாகவே அது உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகச் சவாரி நடவடிக்கைக்குப் பொறுப்பானவர் தெரிவித்துள்ளார். எனினும் இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் கூறும் போது, கடந்த சில நாட்களாகச் சுற்றுலா நடவடிக்கைகளிலிருந்து குறித்த யானையை விலக்கி அதன் பின்னர் திடீரென ஈடுப்படுத்தியமை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.