அன்னத்திற்கு வாக்களிப்பதே சுதந்திரக் கட்சி அழிவதைத் தடுப்பதற்கான ஒரேவழி : ஹெக்டர் அப்புஹாமி

breaking
ஶ்ரீலங்கா: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேசசபை, நகரசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பலரும் சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க வேண்டுமெனில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவே வெற்றிபெற வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்திருக்கிறார்கள். மிகச்சிறந்த கொள்கையுடைய பாரம்பரிய கட்சியாக விளங்கிய சுதந்திரக் கட்சி தற்போது அழிவடைந்த நிலையிலேயே உள்ளது. அது முற்றுமுழுதாக அழிந்து இல்லாமல் போவதைத் தடுப்பதற்கு அன்னம் சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டும். அதற்கான சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறியிருக்கும் தரப்பினர் எதிர்காலத்தில் பாரிய மாற்றமொன்றை உருவாக்குவார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நிலையில் பல்வேறு பொய்யான தகவல்கள் பரப்பப்படும். அதேவேளை நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவதற்கு ஒருதரப்பினர் முயற்சிப்பார்கள். அண்மையில் பலாலியில் திறந்துவைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தின் பெயர்ப்பலகையில் விமானநிலையத்தின் பெயர் முதலாவதாக தமிழ்மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றுகூறி விமல்வீரவன்ச சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றார். ஆனால் யாழில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தின் பெயர்ப்பலகையிலும் முதலில் தமிழ்மொழியிலேயே பெயரிடப்பட்டிருக்கிறது. எனவே இவர்கள் வடக்கில் ஒருகதையையும், தெற்கில் வேறொரு கதையையும் கூறி நாட்டுமக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டி பிரிவினையை ஏற்படுத்துவதற்கே முயற்சிக்கின்றார்கள். ஆகவே இவ்வாறு செயற்படுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்தார்