லசந்த கொலையில் அதிர்ச்சி  தகவலை அம்பலப்படுத்திய சி.ஐ.டி 

breaking
  ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையை திசைதிருப்ப, வவுனியாவில் இரண்டு வர்த்தகர்கள் கொல்லப்பட்டிருந்த அதிர்ச்சி தகவலை சி.ஐ.டி நேற்று நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியது. வர்த்தகர்களை கொன்றுவிட்டு, அவர்களின் மோட்டார்சைக்கிளை லசந்த கொல்லப்பட்ட இடத்தில் போட்டு, அந்த கொலையை புலிகளின் கணக்கில் சேர்க்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் சி.ஐ.டி அம்பலப்படுத்தியுள்ளது. லசந்த கொலை விவகாரம் தொடர்பாக அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று சி.ஐ.டி தாக்கல் செய்த அறிக்கையிலேயே இந்த அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன. லசந்த விக்கிரமதுங்க கொலையை விடுதலைப்புலிகளின் கணக்கில் சேர்க்க சாட்சிகள் சோடிக்கப்பட்டிருந்தன. லசந்த கொலை நடந்த இடத்திற்கு அருகில் அட்டிட்டிய கால்வாய்க்கருகில் மோட்டார்சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டதாகவும், கொலையாளிகள் பாவித்த மோட்டார்சைக்கிள் என்றும் வழக்கில் பொலிசாரால் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், வழக்கை திசைதிருப்ப இந்த மோட்டார்சைக்கிள் அங்கு போடப்பட்டுள்ளது. நகை வர்த்தகர்கள் இருவர் செட்டிக்குளத்தில் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டு, அவர்களின் மோட்டார்சைக்கிளே அங்கு போடப்பட்டிருந்தது என சி.ஐ.டி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.