31-ந்தேதிக்குள் ‘பிரெக்ஸிட்’ நிறைவேறுமா?

breaking
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. இந்த பிரச்சினையால் டேவிட் கேமரூன், தெரசா மே ஆகியோர் பிரதமர் பதவியை இழந்தனர். அவர்களை தொடர்ந்து இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்று இருக்கும் போரிஸ் ஜான்சனும் ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகிறார். ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின்படி வருகிற 31-ந்தேதிக்குள் ‘பிரெக்ஸிட்’ நிறைவேறும் என அவர் உறுதிபட கூறியிருந்தார். இந்த நிலையில் ‘பிரெக்ஸிட்’ தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்த திருத்தப்பட்ட ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை எம்.பி.க்கள் வழக்கம் போல் நிராகரித்தனர். அத்துடன் ‘பிரெக்ஸிட்டு’ க்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு ஜனவரி வரை நீட்டிக்க கோரும் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 322 பேர் சட்டத்துக்கு ஆதரவாகவும், 306 பேர் சட்டத்துக்கு எதிராகவும் வாக்களித்தனர். இதனால் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களிடம் ‘பிரெக்ஸிட்டு’க்கான காலக்கெடுவை நீட்டிக்க வலியுறுத்தும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அதன்படி சட்டப்படியான கடமையை நிறைவேற்றும் வகையில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கவேண்டும் என்று கோரி ஐரோப்பிய கூட்டமைப்புக்கு போரிஸ் ஜான்சன் கடிதம் அனுப்பினார். ஆனால், அந்தக் கடிதத்தில் அவர் கையெழுத்து போடவில்லை. அந்த கடிதத்தில் அவர் ‘பிரெக்ஸிட்’டுக்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு (2020) ஜனவரி 31-ந்தேதி வரை நீட்டிக்க வேண்டுமென இங்கிலாந்தின் சட்டத்துக்குட்பட்டு கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டு உள்ளார். அதே சமயம் அவர் தனது கையெழுத்துடன் 2-வதாக ஒரு கடிதத்தை ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அனுப்பினார். அதில் அவர் முதலாவதாக அனுப்பப்பட்ட கடிதம் தன்னுடைய கடிதம் இல்லை என்றும், இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கடிதம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ‘பிரெக்ஸிட்’டை தாமதப்படுத்துவது தவறு என்று தான் தனிப்பட்ட முறையில் நினைப்பதாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கடந்த வாரம் ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களோடு எட்டப்பட்ட திருத்தப்பட்ட ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற அரசு தொடர்ந்து முயற்சிக்கும் என்றும், வருகிற 31-ந்தேதிக்குள் அதை செய்து முடிக்க முடியும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே ‘பிரெக்ஸிட்’டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரும் போரிஸ் ஜான்சனின் கடிதம் கிடைத்து இருப்பதாகவும் இதுகுறித்து சக தலைவர்களுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார். எனினும் இங்கிலாந்தின் இந்த கோரிக்கையை ஐரோப்பிய கூட்டமைப்பு நிராகரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி நிராகரிக்கப்படும் பட்சத்தில் ஒப்பந்தம் இல்லாமலேயே வருகிற 31-ந்தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.