கோத்தாபாயவை எதிர்கொள்ளத் தயாராகும் வெளித்தரப்புகள்! – கோபி இரத்தினம்

breaking

சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு வாரங்களே இருக்கின்றன.  நாளை (ஒக்ரோபர் 31ம் திகதி ) அஞ்சல் வழியான வாக்களிப்பு ஆரம்பிக்கிறது. இந்நிலையில் இத்தேர்தல் ஒரே ஒரு வேடபாளரை மையப்படுத்தியதாகவே அமைந்திருப்பது தெரிகிறது.  அவ்வேட்பாளர் வேறு யாருமல்ல பொதுசன முன்னணியின் வேட்பாளரும், தமிழின அழிப்புக் குற்றவாளிகளில் ஒருவருமான கோத்தாபாய இராஜபக்சவே இவ்வாறு கவனத்தைப் பெறுபவராக இருக்கிறார். வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்றில் அவரை ஆதரிக்கிறார்கள் அல்லது அவருக்கு எதிராக வாக்களிக்கக் காத்திருக்கிறார்கள். கோத்தாபாயவுக்கு அடுத்தபடியாகத் தேர்தலில் நிற்கும் சஜித் பிரேமதாசவைப் பொறுத்தவரை அவருக்கு ஆதரவாகக் கிடைக்கும் வாக்குகளைக் காட்டிலும் கோத்தாபாயவிற்கு எதிரானவர்களின் வாக்குகளையே அவர் பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கலாம்.

தமிழ்மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதனைத் தீர்மானிப்பதற்கென கூடி அறிக்கை வெளியிட்ட ஐந்து கட்சிகள் இதுவரை யாருக்கு ஆதரவளிப்பது என்பதனை அறிவிக்கவில்லை. இக்கட்சிகளால் வெளியிடப்பட்ட  கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்ட 13 கோரிக்கைகளை முன்னணி வேட்பாளர்கள் கவனத்தில் எடுக்கத் தவறியது மட்டுமல்ல அவற்றை நிராகரிப்பதாகவும் கூறியுள்ளார்கள். இந்நிலையில் இக்கட்சிகள் இதுவரை தமது முடிவை கூட்டாக அறிவிக்கவில்லை. ஆனால் இக்கட்சிகளில் ஒன்றின் தலைவரான விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் தமக்கு விரும்பிய யாருக்காவது வாக்களிக்கலாம் என இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தெரிவிப்பதற்கு ஒரு அரசியற்கட்சியின் தலைவராக இருக்க வேண்டியதில்லை என்பது ஒருபுறமிருக்க, ஐந்து கட்சியின் கூட்டறிக்கை என்பது அது பிரசுரிக்கப்பட்ட காகிதத்தின் பெறுமதிக்குகூட  வராது என்பதனையே அவர் தனது அறிக்கையின்மூலம் நிருபித்திருக்கிறார்.

கூட்டறிக்கையில் கையொப்பமிட்ட ஏனைய கட்சிகளில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் ஆகியவை சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவினை ஒக்ரோபர் 31ம் திகதி வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.  தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து அவர்கள் இம்முடிவிற்கு வந்திருந்தாலும் அதனை அறிவிக்காது தவிர்த்து வந்தனர்.  ஐந்து கட்சிக் கூட்டணி என்று மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் இறங்கியிருந்த இக்கட்சிகள் கோத்தாபாயவை எதிர்க்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே சஜித்திற்கு ஆதரவு வழங்குவதாக தமது முடிவை நியாயப்படுத்தவிருக்கின்றன.  சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிடமும் எந்தத் தெரிவும் கிடையாது. ஒன்றில் விக்னேஸ்வரன் கூறியதுபோன்று, விரும்பிய யாருக்காவது வாக்களியுங்கள் என்று குறிப்பிட வேண்டும் அல்லது சஜித்திற்கு ஆதரவு வழங்குமாறு கூறவேண்டும். தன்னை கூட்டமைப்பிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதென்றால் விக்னேஸ்வரனின் வழியையே சுரேசும் பின்பற்றவேணடியிருக்கும்.

கோத்தாபாய வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதனை உணர்ந்து கொண்ட வெளிச்சக்திகள் அதனை எதிர்கொள்வது தொடர்பான மூலோபாய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. கோத்தாபாய வெற்றிபெறுமிடத்து அவர் சீனாவின் பக்கம் சாய்ந்துவிடாமல் தடுப்பதற்கும். அவ்வாறு சாய்ந்துவிடும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வது போன்ற விடயங்களில் முன்னேற்பாடான தயாரிப்பு நடவடிக்கைகளில் அவை இறங்கியுள்ளன.  கோத்தாபாயவை எதிர்கொள்வதற்கு தமிழ் அரசியலை பயன்படுத்துவதற்கும் அவை ஆயத்தமாக உள்ளதாகத் தெரிகிறது. இம்மாதம் 18,19, 20 ஆகிய தினங்களில் சூரிக்  நகரத்தில் சுவிற்ஸலாந்தின் வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இத்தகைய தயார்ப்படுத்திலின் ஒரு அங்கமாகவே பார்க்க வேண்டியுள்ளது. இக்கலந்துரையாடல் அமர்வுகளில் சிறிலங்காவின் தேர்தல் பற்றியோ, கோத்தாபாயவைப் பற்றியோ எதுவும் பேசப்படவில்லை எனத் தெரியவருகிறது. இருப்பினும், கடந்த ஐந்து வருடங்களில் இவ்வாறான நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை என்பதனைக் கவனத்திலெடுத்தால், திரும்பவும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளைப் பாவித்து  சிறிலங்காவிற்கு அழுத்தம் கொடுப்பதற்கான முன்னேற்பாடாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

இவ்விடயத்தில் இரணில் அரசாங்கமும் தன்பங்கிற்கு மேற்குலகத்திற்கு உதவும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.  ஐக்கிய அமெரிக்காவின் மலேனியம் சாலன்ஜ் கோர்ப்பரேசன் (Millennium Challenge Corporation) வழங்கவிருக்கும் 480 மில்லியன் டொலர் நிதியுதவியை பெற்றுக்கொள்வது என்ற முடிவினை சிறிலங்காவின் அமைச்சரவை கூடி முடிவெடுத்துள்ளது. ஐந்து வருடத்திற்கான அபிவிருத்தி நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அமெரிக்க அரசாங்கத்தின் நிபந்தனைக்களுக்கு கட்டுப்படவேண்டிருக்கும் என இந்நிதியுதவியினைப் பெறுவதற்கு  ஜனாதிபதி சிறிசேனவும் எதிர்க்கட்சிகளும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வந்த நிலையில், இரணிலின் அமைச்சரவை இம்முடிவிற்கு வந்துள்ளது.  கோத்தாபாய ஜனாதிபதியாகும் பட்சத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகள் அமெரிக்க நிபந்தனைக்களுக்கு அவர் கட்டுப்படவேண்டியிருக்கும் அல்லது அமெரிக்காவுடன் முரண்படவேண்டியிருக்கும் என்பதனை கருத்திற்கொண்டே இம்முடிவிற்கு ரணில் அரசாங்கம் வந்துள்ளதாகக் கருதுவதற்கு இடமுண்டு.

அதிபர் தேர்தலில் கோத்தாபாய வெற்றிபெற்றாலும்  மேற்கு – இந்தியா – சீன என்ற பூகோளப் போட்டியில் சிக்கித் தவிக்கவேண்டியிருக்கும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.