5 கட்சி கூட்டம்: விக்கி தரப்பு கலந்து கொள்ளாது?

breaking

5 தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு இன்று (30) யாழில் இடம்பெறவுள்ளது. 5 கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. இன்றைய சந்திப்பில் 5 கட்சிகளும் கலந்துகொள்ள வாய்ப்பில்லையென்றே தெரிகிறது.

ஒருவேளை, ஐந்து கட்சிகளும் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டாலும், எந்த முடிவெடுக்கப்படவும் வாய்ப்பில்லையென்றே தெரிகிறது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் பொதுக் கோரிக்கைகளை முன்வைக்க கட்சிகளிடம் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஐந்து கட்சிகள் இணக்கப்பாட்டிற்கு வந்தன. தமிழ் அரசுக்கட்சி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி என்பன இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தன.

இந்த கோரிக்கைகளை எந்த பிரதான வேட்பாளரும் ஏற்காத நிலையில், அடுத்து என்ன செய்வதென்பதில் 5 கட்சிகளிற்குள்ளும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. நேற்று முன்தினம் (28) நடந்த கூட்டத்தின் பின்னர், 5 கட்சி இணக்கப்பாடு முடிவிற்கு வருகிறது, இரண்டு வேறுபட்ட அறிக்கைகள் வருகின்றன.

இதன்படி, 5 கட்சிகளிற்குள் இணக்கப்பாடு எட்டப்பட முன்னரே நேற்று தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாட்டு அறிக்கை வெளியாகியது. மக்கள் விரும்பியவர்களிற்கு வாக்களிக்கலாமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5 கட்சிகள் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு முன்னரே விக்னேஸ்வரன் தரப்பு தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளதால், இன்றைய கூட்டத்திற்கு அவர்கள் வருவதற்கான வாய்ப்பில்லையென்றே தெரிகிறது. விக்னேஸ்வரன் தற்போது கொழும்பில் தங்கியிருக்கிறார்.

தமிழ் மக்கள் கூட்டணி 5 கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லையென தெரியவருகிறது.

ஏனைய 4 கட்சிகளும் கலந்துரையாடலில் பங்குபற்றவுள்ளதாக தெரிவித்துள்ளன.

இதேவேளை, எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு முதல் வாக்கை இடலாம், பிரதான வேட்பாளர்களை ஆதரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளது. ஆனால் இதற்கு நேர்மாறான நிலைப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 3 கட்சிகளும் உள்ளன. ரெலோவின் ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளான ஒருவரை ஆதரிக்க முடியாதென்பது அந்த கட்சிகளின் நிலைப்பாடு.

இதனால் இன்று இணக்கப்பாடு எதுவும் எட்டப்படாது என்றே தெரிகிறது.

5 கட்சி கூட்டத்தில் இணக்கப்பாடு ஏற்படாத பட்சத்தில் இரண்டு வேறுபட்ட அறிக்கை வரலாமென ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். தற்போதைய நிலையில் மூன்று வேறுபட்ட அறிக்கை வெளியாகவும் சாத்தியமுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆதரிக்க வாய்ப்பில்லாத நிலையில், இரண்டு வாய்ப்புக்கள் உள்ளன. விக்னேஸ்வரன் தரப்பில் நிலைபாட்டை ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆதரிக்கலாம். அல்லது தனித்து அறிக்கை விடலாம்.

இன்றைய கூட்டம் மாலை 4 மணிக்கு இடம்பெறும்.