மட்டு. வந்தாறுமூலையில் மாற்றுத்திறனாளிகளின் கண்காட்சி

breaking
  தென்தமிழீழம்: மட்டக்களப்பு மாற்றுத்திறனாளிகள் பாடசாலைகளின் மாணவர்களின் படைப்பாக்கத்திறனை பிரதிபலிக்கும் வகையிலான கண்காட்சி இடம்பெற்றது. கிழக்குப் பல்கலைக் கழகத்தில் வந்தாறுமூலை வளாக நல்லையா மண்டபத்தில் குறித்த கண்காட்சி இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. இதன்போது, மட்டக்களப்பில் இயங்கும் 25 மாற்றுத்திறனாளிகளின் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மட்டக்களப்பு மெதடிஸ் புகலிடம் மற்றும் பாடசாலை வளாகத்துக்கு உட்படுத்தப்படாத தனியார் பாடசாலையான மட்டக்களப்பு புனித ஜோசப் விசேட கல்வி நிலையம் ஆகியவற்றிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட ஆக்கங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் பங்குகொள் ஆய்வாளர் அரங்க ஆற்றுகை வழிப்படுத்தலின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பாடல், இசை மூலமான நடனம் மற்றும் நாடக நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. கிழக்குப் பல்கலைகழக நுண்கலைத் துறையின் சிறப்புக் கற்கை நான்காம் வருட ஆய்வினை பூர்த்தி செய்யும் வகையில் நுண்கலைத் துறை இறுதிவருட மாணவி எஸ்.பாத்திமா ஷர்பினின் ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு நுண்கலைத் துறைத் தலைவர் சு.சந்திரகுமாரின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது. கிழக்கு பல்கலைகழகத்தின் கலைக் கலாசார பீடாதிபதி முனியாண்டி ரவி இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு திருமாவட்ட அவைத்தலைவர் மட்டக்களப்பு புகலிட அமைப்பின் பணிப்பாளருமாகிய அருட்சகோதரர் எஸ்.எஸ்.டெரன்ஸ், மட்டக்களப்பு சென்.ஜோசப் விசேட கல்வி நிலையத்தின் அதிகாரி எம்.ஏ.பரீஸ்கரன், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.ஜெயசங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.