மோசமான பாதிப்புகள் ஏற்படும்- 11 ஆயிரம் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!

breaking
  உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் அவசர நிலை ஏற்பட்டு இருப்பதாக 11 ஆயிரம் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பருவநிலை மாற்றத்தால் மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்படும்- 11 ஆயிரம் விஞ்ஞானிகள் எச்சரிக்கை பருவநிலை மாற்றம் (கோப்புப்படம்) உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் அவசர நிலை ஏற்பட்டுள்ளது. மாசுவை அதிகப்படுத்தும் மனிதர்களின் செயல்பாடுகளில் மாற்றம் வர வேண்டும். பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுக்க ஆக்கப்பூர்வமாக நடவடிக்கையை எடுக்க வேண்டும். புதுடெல்லி: பருவநிலை மாற்றம் தொடர்பாக சில ஆண்டுகளாகவே விவாதம் நடந்து வருகிறது. பூமி வெப்பமயமாகுதல், பனிபாறைகள் உருகுதல், காடுகள் அழிப்பு உள்ளிட்டவற்றால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு பாதிப்புகள் உண்டாகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து வருகிறார்கள். பருவநிலை மாற்றம் தொடர்பாக பல்வேறு கட்ட ஆய்வுகளில் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் அவசர நிலை ஏற்பட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பயோ-சயின்ஸ் இதழில் பருவநிலை குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை 153 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்து 258 விஞ்ஞானிகள் ஏற்று கொண்டு கையெழுத்திட்டு உள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த 69 பேரும் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் நிகழ்ந்த எரிபொருள் பயன்பாடு, காடுகள் அழிப்பு, கார்பன் வெளியேற்றம், மக்கள் தொகை அதிகரிப்பு, பூமி வெப்பமயமாகுதல், பனி பாறைகள் உருகுதல், கடல் மட்டம் உயர்வு, மொத்த உள்நாட்டு உற்பத்தி, பிறப்பு விகிதம் உள்ளிட்டவற்றை வைத்து ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதன் முடிவில் தற்போது உலகம் முழுவதும் பருவ நிலை நெருக்கடி ஏற்பட்டு உள்ளது என்றும், நாம் அவசர நிலையில் இருக்கிறோம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் தாமஸ் நியூசம் கூறியதாவது:- நாம் கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவில்லை என்றாலும், எரிபொருள் தேவைக்காக நிலங்களை அழிப்பதை நிறுத்தவில்லை என்றாலும் இப்போது உள்ள நிலைமையை விட மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்படும். பூமியின் சில பகுதிகள் மக்கள் வாழ தகுதியற்றதாகவே மாறி விடும் என்றார். இந்த எச்சரிக்கை குறித்து விஞ்ஞானிகள் கூறும்போது, இயற்கை நமக்கு வழங்கிய வளங்களை நாம் மோசமாக சேதப்படுத்தி இருக்கிறோம். உலகில் உள்ள அரசாங்கங்கள் பருவ நிலை அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றன. பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுக்க ஆக்கப்பூர்வமாக நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கற்பனை செய்ய முடியாத, சொல்ல முடியாத பாதிப்புகளை மக்கள் சந்திக்க நேரிடும். பருவநிலை பாதிப்புகளின் தீவிரத்தை உலகுக்கு சொல்லுவது விஞ்ஞானிகளின் கடமை. அதை ஆய்வறிக்கை மூலம் செய்து இருக்கிறோம். பருவநிலை மாற்றத்தை தடுக்க மாசுவை அதிகப்படுத்தும் மனிதர்களின் செயல்பாடுகளில் மாற்றம் வர வேண்டும். இல்லையென்றால் வருங்காலத்தில் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டியதிருக்கும். ஆனால் பலமுறை எச்சரிக்கை விடுத்தாலும் புவிவெப்பமயம், பசுமை இல்லாத வாயுக்கள் வெளியேற்றம் உள்ளிட்டவைகளின் அளவு அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது என்றனர். இந்த ஆய்வறிக்கையில் பருவ நிலை மாற்றத்தை தடுக்க சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதில், புதை படிவ எரிபொருள் பயன்பாட்டை தடுக்க வேண்டும். புதுப்பிக்க தக்க எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும். மேய்ச்சல் நிலங்கள் மற்றும் சதுப்பு நில காடுகளை அழிவில் இருந்து காக்க வேண்டும். காடுகளை அழித்து பண்ணைகளை உருவாக்கி அவற்றில் மாமிச உணவுத் தேவைக்காக விலங்குகள் வளர்ப்பதை குறைக்க வேண்டும். புதை படிவ ஆற்றலை சார்ந்திருக்காமல் பொருளாதாரத்தை மாற்ற வேண்டும். மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வறட்சி, காற்று மாசு, பனி பாறைகள் உருகுதல் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் அடிக்கடி எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருந்தனர். இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு உலக நாடுகள் இணைந்து பாரிசில் பருவ நிலை மாற்ற பாதிப்புகளை தடுக்கும் வகையில் மிக முக்கிய ஒப்பந்தம் மேற்கொண்டன. ஆனால் இதில் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை பல நாடுகள் நடைமுறைப்படுத்தவில்லை. இந்த நிலையில்தான் உலகம் முழுவதும் பருவ நிலை நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.