மகிந்தவை இக்கட்டில் ஆழ்த்திய சஜித்தின் கடிதம்

breaking
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சில விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தலைக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு சவால் விடுக்கும் வகையில், கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில், பிள்ளையான், வரதராஜப்பெருமாள், கருணா அம்மான் மற்றும் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோருடனான இரகசிய கொடுக்கல் வாங்கல்கள் எவ்வாறானவை என தெளிவுபடுத்துமாறு சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். நத்தார் தினத்தில் கடவுள் முன்பாக பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினரொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் சிறையிலுள்ள பிள்ளையானின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக, அவரை விடுவிப்பதாக மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளதாகவும் இதன்போது சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கு மாகாண மக்களின் பிள்ளைகளைக் கடத்திச்சென்று ஈழத்திற்காகப் போராடுவதற்கு நிர்பந்தித்த பிள்ளையான் விடுவிக்கப்பட்ட பின்னர், கிழக்கு மாகாண மக்கள் மீண்டும் அச்சத்துடன் வாழ்வதற்கு இடமளிக்க வேண்டுமா? என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சட்டவிரோதமாக ஈழத்தை அறிவித்து, ஈழக்கொடியை ஏந்திய வரதராஜப்பெருமாளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வாறான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன எனவும் அக்கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 600 பொலிஸ் அதிகாரிகளைக் கொலை செய்த, தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதல் நடத்திய, அரந்தலாவை கொலையை செய்த கருணா அம்மானுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இரகசிய உடன்படிக்கை எவ்வாறானது என தெளிவுபடுத்துமாறும் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதியாகக் கூறப்பட்ட எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இரண்டாவது விருப்பு வாக்கை உங்கள் சகோதரரான கோத்தாவிற்கு அளிக்குமாறு கோருவதற்காக வழங்கிய இரகசிய வாக்குறுதி என்னவென தெளிவுபடுத்துமாறும் இந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. ராஜபக்ஸவின் அரசியல் கூட்டணியானது நாட்டிலுள்ள அனைத்து கடும்போக்குவாதப் பிரிவினரால் நிறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சஜித் பிரேமதாச, விவாதத்தை எதிர்கொள்வதற்கு சகோதரருக்கு தைரியமில்லை என்பதால், கேட்கப்பட்டுள்ள நான்கு கேள்விகளுக்கும் மஹிந்த ராஜபக்ஸவிடம் மக்கள் பதிலை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளமையும் முக்கிய அம்சமாகும்.