கிராம சேவகரின் குடும்பத்தாரை வெட்டித் தள்ளிய மணல் கொள்ளையர்கள், கிளிநொச்சியில் பதற்றம்

breaking
  வடதமிழீழம்: கிளிநொச்சிதட்டுவன் கொட்டி பகுதியில் வாள்வெட்டுச்சம்பவம் ஒன்றுஇடம்பெற்றுள்ளது. குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த பகுதியில் உள்ள கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கிராம சேவையாளர் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மண்ணகழ்வு தொடர்பில் தொடர்ச்சியாக மேற்கொண்ட தடுக்கும் நடவடிக்கையின் உச்ச கட்டத்திலேயே இவ்வாறு வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் 11 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் அநாமதேயமாக சுமார் ஏழுபேர் கொண்ட குழுவினர் நடமாடியுள்ளனர். சிறிது நேரத்தின் பின்னர் குறித்த வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த நபர்கள் மீது வாள்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இதன்போது கிராம சேவையாளரின் இரு சகோதரர்கள் மற்றும் சகோதரியின் கணவர் ஒன்று விட்ட சகோதரர் ஆகியோரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தட்டுவன் கொட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து குறித்த வீட்டை இலக்கு வைத்து கண்ணாடி போத்தல்களாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இதேவேளை கடந்த 08.09.2019 அன்று குறித்த கிராமசேவையாளரை தாக்கியமை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு குறித்த மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில்கடமையாற்றிய கிராமசேவையாளர் அச்சம் காரணமாக வேறு இடத்தில் கடமை செய்து வரும் அதேவேளை, பிரிதொரு இடத்தில் தங்கி கடமைகளை செய்து வருகின்றார். அப்பகுதியில் காணப்படும் தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாகவே இவ்வாறு பிரிதொரு இடத்தில் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அக்கிராமசேவையாளர் தெரிவிக்கின்றார். அங்கு நின்ற வாகனம் மீதும் தாக்குதல் இடம்பெற்றது.