நோட்டாவை இலங்கையிலும் அறிமுகப்படுத்துங்கள் – தமிழர் தரப்பில் எழுந்துள்ள கோரிக்கை

breaking
வாக்களிக்க விரும்பாதோர் பயன்படுத்தும் வாக்களிப்பு முறையான நோட்டாவை இலங்கையிலும் அறிமுகப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரியுள்ளார். அத்துடன் கோரிக்கைகளை முன்வைத்த தமிழ் கட்சிகளை சம்பிரதாயத்திற்கு கூட அழைத்துப் பேசாதவர்களுக்கு தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டுமென அரச தரப்பு மற்றும் எதிர்க் கட்சியிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தமிழ் கட்சிகள் முன்வைத்த 13அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், மதத் தலைவர்கள், சுயாதீன அமைப்புகள் இணைந்து 5 கட்சிகளினால் கொண்டுவரப்பட்ட 13 அம்சக் கோரிக்கையானது கடந்த 70 வருட காலம் தீர்க்கப்படாதிருக்கும் முக்கியமான அம்சங்களே அவை. அவற்றில் அரசியல் தீர்வு தவிர்த்து ஏனையவை யுத்தத்திற்குப் பின்னரான நிலைமைகளாகவே உள்ளன. அதாவது, அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்குதல், அபிவிருத்தி, வேலைவாய்ப்பு ஆகியன காணப்படுகின்றன. இவை தனி நாட்டுக்கான கோரிக்கைகளல்ல. தமிழ் மக்களின் மீதான இனப் படுகொலை காரணமாக தீர்க்கப்படாதிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் வகையிலேயே 13 அம்சக் கோரிக்கைகளை வேட்பாளர்களுக்கு கையளிக்க நடவடிக்கையெடுத்தோம். ஆனால், பொதுஜன பெரமுன வேட்பாளர் வெளிப்படையாக நாங்கள் அவர்களைச் சந்திக்கத் தயாரில்லையெனக் கூறிவிட்டார். அதேபோன்று சஜித் பிரேமதாசவும் ஒரு படி மேலே சென்று எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திடப் போவதில்லை. அவர்களைச் சந்திக்கவும் தயாரில்லையெனவும் கூறியுள்ளார். இவ்வாறான நிலைமையில் நீங்கள் தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்பார்த்துக்கொண்டு எமது கோரிக்கைகளை நிராகரித்துக் கொண்டு சம்பிரதாயப்படியாவது சந்திக்கத் தயாரில்லாத நேரத்தில், தமிழ் மக்கள் உங்களுக்கு எந்த அடிப்படையில் வாக்களிக்க வேண்டுமென்பது தமிழ் மக்களிடம் இருக்கும் கேள்விகளாக இருக்கின்றன. தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லமுடியாத நிலைமையிலேயே இருக்கின்றனர். குற்றவுணர்வுடனேயே அவர்கள் செல்கின்றனர். சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே செயற்படுகின்றீர்கள். இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குப் பொறுப்புள்ளது. இவர்கள் இணங்கிய விடயங்களை எவ்வாறு செயற்படுத்தப் போகின்றார்கள் என்பதனை ஆராய வேண்டும். இந்தப் பொறுப்பைச் செய்ய வேண்டும். இதேவேளை, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தலைவர்களுக்கு வாக்களித்து எந்தத் தீர்வையும் பெற்றதில்லை. இதனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை போன்று நோட்டா என்ற முறைமையையும் தேர்தல்கள் திணைக்களம் கொண்டுவர வேண்டிய தேவையுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். சிங்கள மக்களுக்கு நீங்கள் உண்மையைக் கூறுங்கள். தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை என்பதைக் கூறுங்கள். இவ்வாறான நிலைமையில் நாங்கள் இவருக்கு வாக்களித்தால் தீர்வு கிடைக்குமென என்ன உத்தரவாதத்தை தமிழ் மக்களுக்கு வழங்குவது? இதனால் இங்கும் நோட்டா என்ற முறை இருக்குமாக இருந்தால் வடக்கு, கிழக்கில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிராகரிக்கின்றனர் என்பதைக் காட்டியிருப்பர். இதனால் எதிர்காலத்தில் இந்த நோட்டா முறைமையைக் கொண்டுவர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.