சர்வதேச போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற சேலம் மாவட்ட முச்சக்கரவண்டி சாரதியின் மகள்

breaking
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நகரில் நடந்த சர்வதேச அளவிலான ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டியில், தமிழகத்தின் சேலம் மாவட்ட முச்சக்கரவண்டி சாரதியின் மகள் சுப்ரஜா என்பவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் சேலம் மாவட்டம் அழகாபுரத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி பெருமாள். இவரது மனைவி பார்வதி. இவர்களின் மகள் சுப்ரஜா (17). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்து வருகிறார். ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டியில் தேசிய அளவில் பதக்கங்களை வென்றுள்ள தாய் பார்வதி, மகள் சுப்ரஜாவும் அதில் சாதனை படைக்க பயிற்சி அளித்துள்ளார். இதையடுத்து, 8-ம் வகுப்பில் இருந்தே ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டிக்கு சுப்ரஜா தயாராகி வந்துள்ளார். இதனிடையே, மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்த சுப்ரஜா, தேசிய அளவிலான போட்டிகளிலும் மகுடம் சூடியுள்ளார். இந்நிலையில், கடந்த 1-ம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நகரில் நடந்த சர்வதேச அளவிலான ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டியில், பல்வேறு நாடுகளில் இருந்து 1,500 பேர் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து 8 பேர் கலந்துகொண்டனர்; அதில், சுப்ரஜாவும் ஒருவர். இதில், தனிநபர் ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து, சுப்ரஜா வெள்ளிப் பதக்கம் வென்று தாயகம் திரும்பினார். இதுகுறித்து சுப்ரஜா கூறும்போது, ‘‘சர்வதேச அளவிலான போட்டியில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற ஆசையில், மாஸ்கோவில் நடந்த ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டியில் பங்கேற்றேன். 1.47 நிமிடங்களில் இசைக்கு தக்கவாறு உடலை வளைத்து, நடனமாடி வெற்றிக்கனி பறித்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.