பேருந்தை வழிமறைத்து டிக் டாக் வீடியோ.!

breaking
கடலூரில் அரசுப் பேருந்தை இடைமறித்து அதன் முன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி டிக் டாக் வீடியோ வெளியிட்ட இளைஞரை தொடர்ந்து கண்காணித்ததில் தொடர்ந்து அதேபோன்று ஆபத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தும் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டதால் அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ் ஆதனூர் பகுதியை சேர்ந்த அஜித் குமார். டிக் டாக் வீடியோ வெளியிடுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர், சாலையில் சென்ற அரசு பேருந்தை வழிமறித்து அதன்முன் அவருடைய இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அதன் மேல் படுத்துக்கொண்டு ''என்னதான் நடக்கும் நடக்கட்டுமே'' என்ற சினிமா பாடலுக்கு டிக்டாக்வீடியோ செய்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அந்த இளைஞரின் மற்ற டிக் டாக்  வீடியோக்களும் போலீசாரால் கண்காணிக்கப்பட்டது. அப்பொழுது ஒரு சிறுவனின் முன்னிலையில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போடுவது போன்று சினிமா வசனம் பேசும் டிக்டாக் வீடியோ, குழந்தையை தரையில் படுக்க வைத்து கயிற்றால் தன் உடலை கட்டிக்கொண்டு ஆபத்தை விளைவிக்கும் வகையில் கையிற்றில்  தொங்கியபடி ஜெயம் திரைப்படத்தில் வரும் ''கவிதையே தெரியுமா'' என்ற பாடலுக்கு டிக் டாக் வீடியோ செய்தது, கையைவிட்டுவிட்டு பைக்கை ஓட்டுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த வீடியோக்களை பார்க்கும் இளைஞர்கள், சிறுவர்கள் இதுபோன்று முயற்சி செய்து விபரீதம் ஆகலாம் என  காவல் கண்காணிப்பாளர் அபிநவ் சம்பந்தப்பட்ட டிக்டாக் இளைஞரான அஜித்தை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். பைக்கோடு அஜித் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ராமநத்தம் போலீசார் அந்த இளைஞரை சிறையில் அடைத்துள்ளனர். காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விட்ட டோஸில் கனத்த இதயத்துடன் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் கடலூர் திட்டக்குடி புள்ளிங்கோ அஜித்.