ஆதரவு இருக்கோ இல்லயோ சவால் சவால்தான்: கூட்மைப்பினரை துவைச்சு காயப்போடும் சிவாஜிலிங்கம்

breaking
  இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் வைத்தியசாலையை பசில் ராஜபக்சதான் திறந்து வைத்தார். சிவமோகன் உள்ளிட்ட கூட்டமைப்பினர் தமது சொத்து விபரத்தை பகிரங்கப்படுத்தி, தன்னுடன் விவாதத்திற்கு வரத் தயாரா என்று சவால் விடுத்துள்ளார் சுயேட்சை வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம். நேற்று (9) வவுனியாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். சஜித் தோல்வியடைந்தால் அதற்கு காரணம் சிவாஜிலிங்கம்தான், அவர் போட்டியிடுவதற்கு பின்னணியுண்டு என சிவமோகன் தெரிவித்திருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, இதனை தெரிவித்தார். “சிவாஜிலிங்கம் அவ்வளவு பெரிய ரம்போ, பற்றாலியன் வைத்திருக்கிறாரா? நான் கேட்டு சில நூறு வாக்குகள் கிடைத்தால் நீங்கள் ஏன் பயப்பிடுகிறீர்கள்? சஜித் மயிரிழையில்தான் தோற்கப் போகிறாரா? ஜனநாயக சூழலில் நாம் போட்டியிடுகிறோம். உங்கள் கூட்டத்திற்குள் புகுந்து குழப்பினோமா?. வவுனியாவில் இன்று பெரிய கூட்டம் நடத்துகிறீர்கள். (சம்பந்தன் கலந்துகொண்ட கூட்டம்) 70 பேர்தான் வந்திருக்கிறார்கள். கூட்டத்திற்கு போனால் ஆட்களை பிடித்து, கடத்தி, சுடுவோம் என்றா சொன்னோம்? உங்களின் இயலாமைக்கு மக்கள் உங்கள் தலையில் மண்ணள்ளி போடுவார்கள். சிவமோகனின் அபிசா வைத்தியசாலையை பசில் ராஜபக்சதான் திறந்து வைத்தவர். இவர் மாகாணசபை உறுப்பினரான பின்னர் என்னென்ன செய்தார் என்பது எமக்கு தெரியும். இதற்கு தனியான விவாதத்திற்கு வரச் சொல்லுங்கள். ஜனநாயக சூழல் கெட்டதா இல்லையா? யார் யார் எவ்வளவு சொத்துக்கள் சேர்த்தீர்கள்? சொத்து பிரகடனத்தை நீங்களும் கொடுங்கள், நானும் கொடுக்கிறேன். 2010ம் ஆண்டில் நான் சொத்து பிரகடனத்தை கொடுத்தபோது, மஹிந்த தேசப்பிரிய கையெடுத்து கும்பிட்டுவிட்டு, தெற்கில் இப்படி ஆட்கள் இருந்தால் பிரச்சனையில்லையென்றார். எனக்கு சொந்தமான வீடில்லை, வங்கியில் பணமில்லை. வாகனமில்லை. நேரமில்லாததால் இன்னும் இந்தமுறை சொத்துப்பிரகடனம் சமர்ப்பிக்கவில்லை. தேர்தல் முடிந்து நான்கைந்து நாட்களிற்குள் கொடுத்து விடுவேன். அப்போது சிவமோகனும் சொத்து விபரத்தை வெளியிடட்டும். நானும் வெளியிடுகிறேன். நான் சவால் விடுகிறேன், எல்லாத் தலைவர்களும் உங்கள் சொத்து விபரத்தை வெளியிடுங்கள் என்றார்.