அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு குறைவு – காலக்கெடு விதித்தது வடகொரியா

breaking
  அணு ஆயுத கைவிடல் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பு குறைவு என வடகொரியா திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் வடகொரியாவின் வெளியுறவு அமைச்சக உயரதிகாரி ஜோ சோல் ஸூ கலந்து கொண்டு உரையாற்றிய போதே ந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “அமெரிக்காவுக்கு நாங்கள் நிறைய அவகாசம் கொடுத்து விட்டோம். அவர்களிடம் இருந்து பதில் வர இந்த ஆண்டு இறுதி வரை காத்திருப்போம். ஆனாலும், அந்த நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். வடகொரியா மீதான பொருளாதார தடைகள் ஏற்க முடியாத அவமதிப்பு. அவை நீக்கப்பட வேண்டும். அதைச் செய்யாமல் பேசுவதற்காக சந்திப்பு நடத்துவதில் நாங்கள் உறுதியான முடிவை எதிர்பார்க்க முடியாது” என்று கூறினார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜொன் உன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி சிங்கப்பூரில் சந்தித்து முதன்முதலாக பேச்சு வார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதியும், 28ஆம் திகதியும் வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில் சந்தித்து பேசினர். ஆனால் இது இணக்கமாக நடைபெறாமல் பாதியிலேயே முடிந்தது. மீண்டும் கொரிய எல்லையில் ஜூன் 30ஆம் திகதி இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். அப்போது கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது பற்றி தொடர்ந்து பேசுவது என ஒப்புக்கொண்டனர். ஆனாலும் பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.