பாலியல் தொடர்பு மூலமும் டெங்கு வைரஸ் பரவும்.?

breaking
டெங்கு வைரஸ் ஆனது கொசுக்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த வைரஸால் தாக்கப்படும் மனிதர்கள் கடும் காய்ச்சலால் அவதிப்படுவார்கள். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் டெங்கு தாக்கி, பல உயிர்கள் பலியாகியுள்ளன.
கொசுக்கள் மூலமாகவே டெங்கு வைரஸ் பரவும் என்று கருதப்பட்ட நிலையில், வேறு வழியிலும் பரவலாம் என்பதற்கான ஒரு சம்பவம் ஸ்பெயினில் நடந்துள்ளது.
பாலியல் தொடர்பு மூலம் டெங்கு வைரஸ் பரவிய முதல் வழக்கை ஸ்பெயினில் உள்ள மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரைச் சேர்ந்த 41 வயதுடைய ஒரு ஆண் கடந்த செப்டம்பர் மாதம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். ஆனால், அவர் வசித்த இடம் டெங்கு பாதிப்பு இல்லாத பகுதி என்பதால், எப்படி பரவியது என்பதை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை
டெங்கு பாதிப்பு உள்ள பகுதிகளின் வழியாக அவர் பயணம் மேற்கொண்டதால் பரவியிருக்கலாம் என என ஒரு சில கூற்றுக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் மருத்துவக்குழு அதனை நிராகரித்தது. அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய ஆண் துணையுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. ஆண் துணை சமீபத்தில் கியூபா உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.
அப்போது அவரை டெங்கு வைரஸ் தாக்கியுள்ளது. அதற்கான தாக்கங்கள் அவரது ரத்த மாதிரியில் இருந்துள்ளது. இதனால், பாலியல் உறவு மூலமாகவும் டெங்கு பரவும் என்பதை உறுதி செய்து மாட்ரிட் பொதுசுகாதாரத் துறையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய வெக்டர் பரவும் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் (என்விபிடிசிபி) இயக்குநரகம் ஆதாரங்களின் படி  இந்தியாவில்  13 அக்டோபர் 2019 வரை 67,000க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.  கர்நாடக மாநிலத்தில் சுமார் 12,756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.