Take a fresh look at your lifestyle.

ஒப்பறேசன் தவளைப் பாய்ச்சல்.!

படைபலத்தை வைத்துப் பேசப்பட்ட அரசியல் பேரத்திற்குக் கொடுக்கப்பட்ட அடி!

“11ம் திகதி ஒவ்வொரு புலிவீரனுக்கும் பத்துக் கைகள் முளைத்துவிட்டன”

பூநகரி வெற்றியுடன் புலிகள் இயக்கம் பெற்றுவிட்ட பலத்தை தலைவர் பிரபாகரன் இவ்விதம் வெளிப்படுத்தினார்.

ஆனையிறவுச் சமரின் பின் சர்வதேசத்தின் கவனத்தைப் பெருமளவு ஈர்ந்த ஒரு செருக்களமாக, பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் அமைந்துவிட்டது. முன்னையதைப் போன்றே இதுவும் புலிகள் இயக்கத்தின் இராணுவத் திறனை உலகிற்குப் புலப்படுத்தியுள்ளது. ஆனாலும் பூநகரியில் சிங்களப் படைகள் சந்தித்த பேரிழப்பு, சிங்களப் பேரினவாதத்தின் போர்வெறியை முனை மழுங்கச் செய்துவிட்டது.

பலமான கடற்படைத் தளத்தையும் சக்திவாய்ந்த கவச வாகனப் படைப்பிரிவையும் கொண்டபடி, புலிகள் தாக்கப் போகின்றார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த 2000ற்கும் மேற்பட்ட சிங்களப் படைகளையும், 16 கி.மீ. நீளமும் 25 கி.மீ. சுற்றளவையும் கொண்ட பூநகரி கூட்டுத் தளத்தை அழித்தொழிப்பதென்பது, ஒரு இமாலய சாதனைதான்.

புலிவீரர்கள் அதனைச் சாதித்து பெருமளவு வெற்றியைப் பெற்றும்விட்டனர். பூநகரி கூட்டுத்தளம் மீதான தாக்குதலில் புலிகள பெற்ற பெருவெற்றியில் ஒன்றாக, அங்கிருந்து கைப்பற்றபப்ட்ட பெருமளவிலான சக்திவாய்ந்த ஆயுதங்களைக் குறிப்பிடலாம். இவை சாதாரண ஆயுதங்கள் அல்ல; போரின் போக்கை புலிவீரர்களுக்குச் சாதகமாகத் திசை திருப்பப்போகும் ஆயுதங்கள், தாங்கி, 120 மி.மீ. சுடுகலன்கள், நீருந்து விசைப்படகுகள், 50 கலிபர் துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான கனரக ஆயுதங்களும் பெருந்தொகையிலான வெடிமருந்துகளும், எமது விடுதலைப் போராட்டத்திற்குப் புத்துணர்ச்சியையும் புதிய பலத்தையும் ஊட்டியுள்ளன. பூநகரியில் சிங்களப் படைகளுக்கு ஏற்பட்ட உயிரிழப்பும் பிரதானமானது.

அதேவேளை, பெரிய நாடுகளுக்கிடையில் பெருமெடுப்பில் நடைபெறும் போர்களைத்தவிர, ஒரே தாக்குதலில் 1000 படையினர் கொல்லப்படுவதென்பது, இதுதான் முதற்சம்பவமாக இருக்கும். இந்தப் பெருநாசத்தால் சிங்கள இனமே சோகத்தில் ஆழ்ந்துபோயுள்ளது. “எல்லா இடங்களிலும் வெள்ளைக் கொடிகள் பறக்கின்றன” (துக்கத்தை வெளிப்படுத்த வெள்ளைக் கொடிகளையே சிங்கள மக்கள் பயன்படுத்துபவர்) என்று, ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை சிங்கள தேசத்தின் இழப்பைச் சுட்டிக்காட்டுகின்றது.

குடாநாட்டின் வாசலில் இருக்கும் பூநகரிப் பகுதியானது இராணுவ – அரசியல் – பூகோளரீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தக் கேந்திர வலயத்தைக் கைப்பற்றுவதன்மூலம், இரண்டாவது ஈழப் போரிற்கென்று சிங்கள அரசு தயாரித்த புதிய போர்முறைத் திட்டத்தை அமுல்படுத்த, சிங்களப் படைத்துறை முனைந்தது. அதன்படி பூநகரியில் ஒரு கூட்டுப் படைத்தளத்தை அது அமைத்துக்கொண்டது.

சிங்கள ஆளும் வர்க்கம் வரைந்த புதிய போர்முறைத் திட்டத்தின் நோக்கம் யாழ். குடாநாட்டைப் பூரணமாக முற்றுகையிடுவதுதான். இந்த இராணுவ முற்றுகைமூலம் பொது மக்களின் போராட்டம் உறுதியை உடைப்பதும், புலிகள் – மக்கள் உறவைச் சிதைத்து புலிகளைத் தனிமைப்படுத்துவதும், இறுதியில் குடாநாட்டைக் கைப்பற்றி புலிகளை அழித்துப் போராட்டத்தை நசுக்கிவிடுவதும்தான் சிங்கள அரசின் எண்ணம்.

ஆனால், சிங்கள அரசின் முற்றுகைத் திட்டத்தில் கடற்புலிகள் ஒரு ஒட்டையை

ஏற்படுத்திவிட்டார்கள். கடற்புலிகளின் எழுச்சியும் அவர்களின் பலத்துடன் நடந்த நீரேரிப் படகுப் பயணமும், சிங்கள அரசின் புதிய போர்முறைத் திட்டத்திற்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

இந்த நிலையில்தான் “பாதை திறப்பு” என்ற போர்வையில் இராஜதந்திரப் பொறியொன்றை அமைத்து, தனது போர்முறைத் திட்டத்தில் ஏற்பட்ட உடைவைச் சீராக்க சிங்கள அரசு முயன்றது.

குடாநாடுமீதான இராணுவ முற்றுகையால் எழுந்த பொது மக்களின் கஷ்டங்களை விவாதப் பொருளாக்கி, புலிகள் இயக்கத்திற்கெதிராகச் சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் அழுத்தங்களைக் கொடுத்து, புலிகளின் தலைமையைப் பணியச் செய்யும் யுக்தியை சிங்கள அரசு கடைப்பிடித்தது.

பாதை திறப்பதற்கு புலிகளைச் சம்மதிக்கச் செய்ததால் அதன்பின் பொதுமக்களின் நன்மைக்கென்று கூறி அந்தப் பகுதியை அமைதிவலயமாக்கி, பெரும் இராணுவ நன்மைகளைப் பெற்றுவிடலாம் என்று சிங்கள அரசு நினைத்திருந்தது.

பூநகரியை ‘யுத்த சூன்யப் பகுதி’ என்று புலிகளின் சம்மதத்துடன் பிரகடனம் செய்தால், அங்குள்ள படையினரிலிருந்து பெரும்பாலானோரை எடுத்து அவர்களையும் பயன்படுத்திக் குடாநாடுமீது பெரும் போர் ஒன்று தொடுக்கலாம் என்றும், அதற்கு முன் துரோகக் குழுக்களை பூநகரிக்கு அழைத்து அவர்களின் துணையுடன் உளவாளிகளை உருவாக்கி, அவர்களைக்கொண்டு பெரும் நாசவேலைகளைச் செய்துவித்துக் குழப்ப நிலையை உருவாக்கிவிட்டுப் போரைத் தொடுக்கலாம் என்றும் சிங்கள அரசு திட்டமிட்டது.

தமிழீழ மக்கள்மீது கரிசனை கொள்வதுபோல சின்னஞ்சிறு சலுகைகளைக் கொடுத்து, அவர்களின் பென்னம்பெரு இலட்சியங்களை விழுங்கி ஏப்பம்விடுவது, சிங்களப் பேரினவாதத்தின் வழமையான வேலை ஆனால் விழிப்புணர்வுடன் செயற்படும் புலிகளிடம் அது எடுபடாமல் போய் விடுகின்றது.

பாதைதிறப்பு விவகாரத்தில் புலிகளின் விட்டுக்கொடாப் போக்கிற்குக் காரணம் கிளாலிக் கடல் நீரேரியில் கடற்புலிகள் வைத்திருந்த அசைவியக்க சக்திதான் (Mobility) என்று எண்ணிய சிங்களப் படைத்துறைத் தலைமை, கிளாலியைக் கைப்பற்றுவதன்மூலம் கடற்புலிகளின் அசைவியக்கத்தை நிறுத்தி, புலிகள் இயக்கத்தைத் தனது காலடியில் வீழ்த்த முயற்சி செய்தது.

ஆனால், சிங்களப் படைகள் மேற்கொண்ட அந்த இராணுவ நடவடிக்கை (யாழ்தேவி) ‘ஆப்பிழுத்த குரங்கின் கதைபோலவே’ தோல்விகண்டுவிட்டது.

சிங்கள அரசின் இராணுவ அழுத்தங்களுக்கு அடிபணித்து அல்லது தனது இராணுவ நன்மைகளுக்காக சிங்களப் பேரினவாதம் அமைத்த இராஜதந்திர சூழ்ச்சிப் பொறிக்குள் சிக்கி, பாதை திறப்பிற்குப் புலிகள் இயக்கம் சம்மதித்திருந்தால், 1994ம் ஆண்டின் முற்பகுதியிலே, தான் வரைந்த போர்முறைத் திட்டத்தில் சிங்கள அரசு ஒரு பாரிய வெற்றியைப் பெற்றிருக்கும்; அதாவது குடாநாட்டைப் பெரும் நாசத்துக்குள்ளாக்கியிருக்கும். இதை மனதில் வைத்தபடி தான், 1994 மார்ச் மாதத்திற்கு முன் புலிகளை அழித்துவிடுவோம் என்று பூநகரித் தாக்குதலுடன் ‘முன்னாள் லெப். ஜெனரலாகி விட்ட’ சிசில் கூறியிருந்தார்.

ஆனால் ஆக்கிரமிப்பாளர்களின் சவால்களுக்கே சவால்விடும் தலைவரின் தனிப்பண்பும், புலிவீரர்களின் போர்த்திறனில் அவர் வைத்திருந்த பெரு நம்பிக்கையும் ஒன்று சேர்ந்து, “தவளை இராணுவ நடவடிக்கை” என்ற வடிவம் எடுத்தது. இது சிங்களப் படைத்துறை செயற்படுத்திவந்த போர்முறைத் திட்டத்தின் முதுகெலும்பையே முறித்து விட்டது.

பூநகரி கூட்டுத்தளத்தின் படைபலத்தைவைத்து ஒரு அரசியல் ரூபத்தின்மூலம் புலிகளுக்கெதிராகக் காய்நகர்த்த முயன்ற சிங்கள அரசு, இறுதியில் தோற்றுவிட்டது.

சிங்கள அரசின் சூழ்ச்சிகர அரசியல் காய்நகர்த்தலுக்கேற்றாற்போல், தலைவர் பிரபாகரன் அவர்கள் புலிகளின் தரப்பிலும் காய்களை நகர்த்தச் செய்தார். அதேவேளை கூட்டுத்தளத்தின்மீது புலி வீரர்களை நகர்த்தி, படை பலத்தை வைத்து சிங்கள அரசு செய்த அரசியல் பேரத்தைப் படைபலத்தைப் பயன்படுத்தியே வெற்றிகொள்ள முயன்றார்; இறுதியில் வெற்றியும் பெற்றுவிட்டார். இந்த வெற்றி விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வழங்கிவிட்டது.

பூநகரி தாக்குதலில் புலிகள் இயக்கம் பெற்ற வெற்றி காரணமாகவும் அங்கிருந்து அவர்கள் கைப்பற்றிசசென்ற ஆயுத தளபாடங்களின் ஆற்றல்கள் காரணமாகவும், வாடா தமிழீழத்திலுள்ள சிங்களப் படைமுகாம்கள் அனைத்துமே “அடுத்த தாக்குதல் தம்மீதுதான்” என்று அரண்டபடியுள்ளன.

சிங்கள தேசத்தின் பத்திரிகைகளும் அடுத்தது முல்லைத்தீவா..? மண்டைதீவா என்று ஊகித்து அஞ்சுமளவுக்கு, சிங்கள தேசத்தில் ஒரு பீதிநிலை காணப்படுகின்றது.

இந்தப் பீதிக்குக் காரணம், சிங்களப் படைகள்மீதான அவ நம்பிக்கையேதான். இவ்விதம், தமது படையினர்மீதே சிங்கள மக்கள் பெரியளவில் அவநம்பிக்கைகொண்டது இதுதான் முதற்தடவை என்று கூறலாம்.

இந்த அவநம்பிக்கை நாளடைவில் இராணுவரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பல்வேறு நெருக்கடிகளையும் குழப்பங்களையும் சிங்கள அரசிக்குக் கொடுக்கும்.

இது ஒருபுறமிருக்க, புலோப்பளைச் சமரிலும் பூநகரிப் பெருந் தாக்குதலிலும் சிங்களப் படை, சக்திவாய்ந்த “T 55” ரக ராங்கிகளில் நான்கை இழந்துவிட்டது அத்துடன் சில கவசவாகனங்களையும் இழந்துள்ளது சிங்களப் படையின் கவசவாகனப் பிரிவு சந்தித்த இந்தப் பேரிழப்பு, தரைப்படையின் நகர்த்திறனைக் கணிசமாகப் பாதித்துவிட்டது எனலாம். இதேவேளை, நாகதேவன்த்துறையிலிருந்து கடற்புலிகள் கைப்பற்றிய நீருந்து விடைப்படகுகள், கடற்புலிகளின் நகர்த்திறனை அதிகரிக்கச் செய்துள்ளன.

இவ்விதம் பூநகரிப் பெருந் தாக்குதலுடன் சிங்களப் படைகள், தரையிலும் கடலிலும் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துள்ளன.

இந்த இராணுவ நெருக்கடிகளுக்கு சிங்கள அரசு எப்படி முகங்கொடுக்கப் போகிறது…?

இந்த உண்மை நிலையைப் புரிந்துகொண்ட புலிகளின் கரத்தைப் பலப்படுத்துவதற்காக, எமது இளம் பரம்பரை எவ்வாறு செயற்படப் போகின்றது என்பவற்றில்தான், அடுத்த திருப்புமுனை தங்கியுள்ளது.

விடுதலைப்புலிகள் (மார்கழி – தை 1994)

%d bloggers like this: