பிரான்சில் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019.!

breaking
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் ஆண்டு தோறும் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் மூன்று தினங்கள் இடம்பெற்று முடிந்துள்ளன. கடந்த 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 09.11.2019 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு பரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பிரதேசத்தில் தெரிவுப் போட்டிகளாக இடம்பெற்றிருந்தன. இறுதிப் போட்டிகள் கடந்த 10.11.2019 ஞாயிற்றுக்கிழமை பொண்டி தமிழ்ச் சோலை மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு பேச்சு மற்றும்  13.00 மணிக்கு பாட்டு ஆகிய போட்டிகள் இறுதிப் போட்டிகளாக இடம்பெற்றிருந்தன. இந்நிகழ்வில் மாவீரர் திருஉருவப்படத்திற்கான ஈகைச் சுடரினை 20.06.1999 அன்று யாழ்.கோண்டாவில் பகுதியில் வீரச்சாவடைந்த மேஜர் இன்பன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தியிருந்தார். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டிகள் விறுவிறுப்பாக ஆரம்பமாகியிருந்தன. இப்போட்டிகளில் துறைசார்ந்த நடுவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஓவியப்போட்டிகள் தமிழ்ச்சோலைப் பள்ளிமட்டத்தில் இடம்பெற்றிருந்தன. அனைத்துப் போட்டிகளிலும் மாணவர்கள் போட்டிகளில் மிகவும் ஆர்வத்தோடு பங்குபற்றியிருந்தமையைக்காணமுடிந்தது. அனைத்துப் போட்டிகளின் முடிவுகளும் பின்னர் அறியத்தரப்படும் எனப் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.