ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டம் – வன்முறைக்கு ஒருவர் பலி..!!!

breaking
உலகிலேயே பெட்ரோல் விலை குறைவாக இருக்கும் நாடுகளில் ஈரானும் ஒன்று. இதற்கு முக்கிய காரணம் அங்கு அதிகளவில் பெட்ரோல் உற்பத்தி செய்யப்படுவதால் அதற்கான மானியமும் அதிகமாக வழங்கப்படுவது தான். இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதற்கு பின், ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்ததால் அந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் பெட்ரோல் மீதான மானியத்தை ஈரான் அரசு நீக்கி உள்ளது. இதனால் பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அரசின் புதிய அறிவிப்பின்படி இனி, ஒரு மாதத்துக்கு 60 லிட்டர் பெட்ரோல் மட்டுமே 15 ஆயிரம் ரியால்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.33) என்ற விலையில் கிடைக்கும். அதற்கு மேல் வாங்கப்படும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்குமான விலை 30 ஆயிரம் ரியால்கள் (ரூ.65) ஆகும். மானியம் நீக்கி விற்கப்படும் பெட்ரோலில் இருந்து வரும் வருமானம் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அரசு கூறுகிறது. இது பற்றி அதிபர் ஹசன் ருஹானி கூறுகையில், “75 சதவீத ஈரானியர்கள் கஷ்டத்தில் உள்ளனர். இந்த கூடுதல் வருமானமானது அவர்கள் நலனுக்காகச் செலவு செய்யப்படும்” என்றார். எனினும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் டெஹ்ரான் உள்பட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மத்திய மாகாணமான சிர்ஜானில் உள்ள பெட்ரோல் கிடங்குகளை போராட்டக்காரர்கள் சூறையாடினர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். ஆனால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் போராட்டத்தின்போது பல நபர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி போராட்டக்காரர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் கோபமடைந்த போராட்டக்காரர்கள் மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். ஷிராஸ், டோரூட், கார்ம்சார், கோர்கன், இலம், கராஜ், கோரமாபாத், மெஹ்திஷாஹர், காஸ்வின், கோம், சனந்தாஜ், ஷாஹ்ரூட் மற்றும் ராஸ் ஆகிய நகரங்களிலும் போராட்டம் வெடித்தது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் மேற்கூறிய நகரங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து போக்குவரத்தை முடக்கினர். மேலும் வாகனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இந்த போராட்டத்தால் ஈரான் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் பெட்ரோல் விலை தொடர்பான அரசின் முடிவை நியாயப்படுத்தி உள்ள அந்நாட்டின் உச்ச அதிகாரம் படைத்த தலைவர் அயதுல்லா அலி காமேனி, நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் எதிரி நாடுகளின் திட்டமிட்ட சதி என்று குற்றம் சாட்டி உள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், “இந்த முடிவால் சிலர் கவலைப்படுகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நாசவேலை மற்றும் கலவரம் செய்யப்படுவது நம் மக்களால் அல்ல. ஈரானின் எதிரிகளும் எப்போதுமே நாசவேலை மற்றும் பாதுகாப்பு மீறல்களை ஆதரித்து வருகின்றனர்” என்றார். மேலும் அவர், போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்புபடையினர் தங்களது பணிகளை தொடங்க வேண்டுமென வலியுறுத்தினார். இதற்கிடையே போராட்டம் குறித்து தேவையற்ற வதந்திகள் பரவுவதை தவிர்க்க நாடு முழுவதும் இணைய தள சேவையை முடக்க அரசு ஆலோசித்து வருகிறது