வீதியில் இருந்த மாவீரரின் பெயரை மாற்றிய பிரதேசசபை

breaking
  வடதமிழீழம்: கிளிநொச்சியில் உள்ள வீதியொன்றிற்கு இதுவரை இருந்த மாவீரர் ஒருவரின் பெயரை நீக்கி விட்டு, உயிரோடுள்ள அரசியல்வாதியொருவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபைக்குட்பட்ட திருநகர் வடக்கில் உள்ள வீதி ஒன்றுக்கே இவ்வாறு பெயர் மாற்றப்பட்டது. ஏற்கனவே இருந்து பெயரை நீக்கிவிட்டு உயிரோடுள்ள அரசியல்வாதியான முன்னாள் வடமாகாணசபை உறு ஒருவரின் பெயரினை வைத்து தங்களுக்கு ஆவணங்கள் அனுப்பியமைக்கு பிரதேச பொது மக்கள் ஆட்சேபணை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக கரைச்சி பிரதேச சபையிடம் வினவிய போது, சோலை வரி விதிப்பதற்காக ஆதனங்களை இலகுவாக இனம் காணும் பொருட்டு சட்டத்திற்கு முரணாக பெயர் வைக்கப்பட்டுள்ளது எனபது தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருநகர் வடக்கு கிராமத்தில் உள்ள ஒரு வீதியான இதுவரை காலமும் கமல் வீதி என அழைக்கப்பட்டு வந்தது. 1991 ஆம் ஆண்டு கொக்காவில் இராணுவ முகாம் தகர்ப்பின்போது, விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த கமல் (சதானந்தம் உபயசேகரம்) மரணமடைந்தார். அதன்பின்னர் அந்த வீதிக்கு கமல் வீதி என பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்த வீதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னிருந்து பசுபதிபிள்ளை வீதி என பெயர் மாற்றப்பட்டு கரைச்சி பிரதேச சபையினால் குறித்த வீதியிலுள்ள பொது மக்களுக்கு ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது பொது மக்கள் மத்தியில் கண்டனத்திற்குரியதாக மாறியுள்ளது. ஒரு வீதிக்கு பெயர் வைப்பதான இருந்தால் கிராம மட்ட அமைப்புகளின் கோரிக்கை பெறப்பட்டு சபையின் அனுமதிக்கு விடப்பட்டு சபைத் தீர்மானம் பெறப்பட்டே பெயர் சூட்டப்படல் வேண்டும். அதுவும் பெயர் இல்லாத ஒரு வீதிக்கு. இதனை தவிர உயிரோடுள்ள ஒருவரின் பெயர் வீதிக்கு வைக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கரைச்சி பிரதேச சபையின் இச் செயற்பாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே கரைச்சி பிரதேச சபை உடனயடியாக உயிரோடுள்ள அரசியல்வாதியின் பெயரை நீக்கிவிட்டு மீண்டும் பழைய பெயரை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரியுள்ளனர். இதேவேளை, கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்ல ஏற்பாடுகளிற்காக அமைக்கப்பட்ட பணிக்குழுவின் தலைவராகவும் பசுபதிப்பிள்ளை இருப்பது குறிப்பிடத்தக்கது.