முல்லைத்தீவில் 107 பேருக்கு டெங்கு தாக்கம்

breaking
  வடதமிழீழம்: முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 107 வரையான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள தாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோயின் தாக்கம் காணப்படுகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் தொடர்பில் மேற்படி சுகாதார சேவைகள் திணைக்களத்திடம் தொடர்பு கொண்டுகேட்டபோது முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்தாண்டில் இதுவரையான காலப்பகுதியில் 107 வரையான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்கள் கொழும்பு மற்றும் வெளிமாவட்டங்களுக்கு தொழில் நிமித்தம் சென்று வந்தவர்கள் அல்லது வெளிமாவட்டங்களிலிருந்து வந்தவர்களாவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளதுடன், கடந்த ஆண்டில் நூறு பேர் வரையிலும் 2017ஆம் ஆண்டில் 170 இற்கும் மேற்பட்டோர் இனங்காணப்பட்டும் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் மேற்படி பணிமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தற்போது டெங்கு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தொழில்களின் நிமித்தம் வெளிமாவட்டங்களுக்கு சென்று வருபவர்களும் வெளிமாவட்டங்களிலிருந்து தொழில்கள் கருதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தந்தவர்களுமே ஏற்கெனவே டெங்கு நோய்த்தாக்கத்திற்குள்ளாகி முல்லைத்தீவு மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுள்ளமை தொடர்பில் இதுவரை 107 பேர் வரையில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.