மனைவிகள் பிள்ளைகளிற்காக 100 கணக்கில் கார்களை வாங்கிக் குவித்த ஆபிரிக்க நாட்டை சேர்ந்த மன்னர்

breaking
      தனது மனைவியர், பிள்ளைகள் பயன்படுத்துவதற்காக 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் மற்றும் 120 பிஎம்டபிள்யூ கார்களை வாங்கி உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த மன்னர் மூன்றாம் ஸ்வதிஅவருக்கு 15 மனைவிகள், 23 குழந்தைகள்.   நாட்டு மக்கள்  பஞ்சத்தில் தவித்து வரும் வேளையில், மன்னர் ஸ்வதி 24.4 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை கார்களுக்காக செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.   ஆப்பிரிக்காவிலுள்ள ஸ்வாடினி நாட்டின் மன்னராக இருந்து வருகிறார் இவர். அந்த நாடு முன்பு ஸ்வாஸிலாந்து என்று அழைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா மற்றும் மொசாம்பிக் நாடுகளுக்கு இடையே உள்ளது ஸ்வாடினி நாடு. இது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது.   அந்நாட்டில் 63% மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். பெரும்பாலான மக்கள் பசி, பட்டினியால் தவித்து வருகின்றனர்.மேலும், மோசமான பொருளாதார நிலை காரணமாக, ஆங்காங்கே அரசுக்கு எதிராக போராட்டங்களும் நடந்து வருகிறது. அரசு அலுவலகங்கள் செயல்பட முடியாமல் முடங்கி உள்ளன.   மன்னரின் ஒவ்வொரு மனைவியும் விரும்பியவாறு பல்வேறு கூடுதல் வசதிகளுடம் இந்த கார்களில் இடம்பெற்றுள்ளன. தனது பயன்பாட்டுக்காக அவர் வாங்கிய ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் சொகுசு எஸ்யூவியில், விருப்பம்போல மாற்றங்களைச் செய்து வாங்கி இருக்கிறார் அவர்.   அத்துடன், தனது பிள்ளைகள், ஸ்வாஸி அரச பம்பரையினரின் பயன்பாட்டிற்காக 120 புதிய பிஎம்டபிள்யூ சொகுசு செடான், எஸ்யூவி ரக கார்களையும் வாங்க ஏற்பாடுகள் செய்துள்ளாராம்.   இந்தப் புதிய கார்கள் தவிர, மன்னர் மூன்றாம் ஸ்வதியிடம் ஏற்கெனவே 20 மெர்சிடிஸ் மேபக் புல்மேன் கார்களும், ஒரு மேபக் 62 கார், சில பிஎம்டபிள்யூ எக்ஸ் கார்கள் உள்ளனவாம். சொந்த பயன்பாட்டிற்காக சில விமானங்களையும் வைத்திருக்கிறார் இவர்.   வாகனங்களை மன்னரிடம் சேர்ப்பதற்காக தனி டிரக்கில் 19 ரோல்ஸ்ராய்ஸ் செடான் கார்களும், ஒரு ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவியும் எடுத்துச் செல்லப்பட்டதைக் காட்டும் படங்கள் இணையத்தில் வெளியாகின.   டிரக்கில் இருந்து இறக்கப்பட்ட கார்கள் மன்னரின் இருப்பிடத்திற்கு ஒன்றன்பின் ஒன்றாகச் செல்லும் காணொளியும் வெளியாகி இருக்கிறது. ஒரே நேரத்தில் பல வண்ணங்களில் சாலையில் ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் ரதம் போல செல்லும் காட்சிகள் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.   இதனிடையே, மன்னர் இவ்வளவு கார்களை வாங்கிய விவகாரத்தை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.   ஆனால், இந்த விவகாரத்தை அந்நாட்டு பிரதமர் அம்புரோஸ் நியாயப்படுத்தி உள்ளார்.       அதாவது, மன்னரின் பழைய கார்கள் 5 ஆண்டுகள் பழமையாகிவிட்டதால்,  நாட்டின் அரசு விதிகளின்படியே மன்னருக்குப் புதிய வாகனங்கள் வாங்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.   1986ஆம் ஆண்டு 18 வயது மட்டுமே நிரம்பியிருந்த மூன்றாம் ஸ்வதி மன்னரானார் என்பது குறிப்பிடத்தக்கது.   https://twitter.com/i/status/1189514111664697344