சஜித் கோத்தாவினால் தோற்கவில்லை: உண்மையை வெளிப்படுத்திய நளின் பண்டார

breaking
ஐ.தே.கவிலுள்ள சிலரே சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு காரணமாக இருந்தார்கள் என போட்டுடைத்துள்ளார் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார. சஜித் பிரேமதாசவை தோல்வியடையச் செய்வதற்காக எமது தரப்பில் இருந்தபடியே செயற்பட்ட சிலரே, தற்போது மஹிந்த ராஜபக்ஷ தரப்பைக் காப்பாற்றிக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் தமது அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள உலக வர்த்தக மையத்தில் இன்று (19) நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1994 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்ததும், சற்றும் தாமதிக்காமல் சூட்கேஸுடன் வெளியேறினார். அவ்வாறு செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது என்ன செய்கின்றார்? பிரதமர் என்ற வகையில் தற்போதைய அரசாங்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான உரிமை அவருக்கில்லை. அரசியல் இராஜதந்திரம் என்ற அடிப்படையில் செயற்பட வேண்டுமாயின், உடனடியாக மஹிந்த தரப்பிடம் அரசாங்கத்தைக் கையளித்து சுமார் 120 நாட்கள் அவர்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற இடமளித்து, அதனூடாகக் கிடைக்கக்கூடிய அரசியல் ஆதாயத்தை பெறுவதே ரணில் விக்கிரமசிங்க செய்ய வேண்டியதாகும். எதிரணியினர் எதிர்நோக்கத்தக்க நெருக்கடிக்கு இடமளிக்காமல் நேரடியாகப் பொதுத்தேர்தலுக்குச் செல்லும் நோக்கில் செயற்படும் வஜிர அபேவர்தன போன்ற கொந்தராத்துக்காரர்கள் சிலர் எமது தரப்பில் இருக்கின்றார்கள். அவர்களே பிரதமருடன் இணைந்து இந்த நெருக்கடியைக் கடப்பதற்கு மஹிந்த தரப்பிற்கு உதவுகின்றார்கள். எமது தரப்பில் இருந்துகொண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை தோல்வியடையச் செய்வதற்காக செயற்பட்ட சிலரே, தற்போது மஹிந்த ராஜபக்ஷ தரப்பைக் காப்பாற்றிக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் தமது அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சிக்கின்றார்கள். அரசாங்கத்தைக் கையளிப்பது தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷ தரப்புடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். இதுவிடயத்தில் அவர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியமில்லை. எம்முடனேயே கலந்தாலோசிக்க வேண்டும். ஆனால் எதிரணியுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்திவிட்டார் என்றே தோன்றுகிறது. நேற்று அநுராதபுரத்திற்கும் சென்றிருந்ததைப் பார்த்தோம். எனவே நாளை பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறுவது முற்றிலும் பொய்யாகும். அவர் தொடர்ந்தும் கட்சியின் தலைமைத்துவத்தில் இருப்பதற்கே எதிர்பார்க்கின்றார். ஆனால் நான் தற்போது மேற்கொண்டுள்ள தீர்மானத்தை ஒத்த நிலைப்பாட்டிலேயே கட்சியில் பெரும்பான்மையானோர் இருக்கின்றனர் என்றார்.