பிரிட்டனை நோக்கி பயணம் செய்த கப்பலில் இருந்த குளிரூட்டப்பட்ட கொள்லனில் மீட்கப்பட்ட 25 பேர்

breaking
  பிரிட்டனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு கப்பலில் இருந்த குளிரூட்டப்பட்ட கொள்கலனில் 25 சட்டவிரோத குடியேறிகள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிரிட்டனுக்குள் கள்ளத்தனமாக நுழையத் திட்டமிட்டிருந்த இவர்கள், நேற்று (நவம்பர் 19) கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கப்பல் உடனடியாக நெதர்லாந்து துறைமுகத்திற்கு வலுக்கட்டாயமாகத் திருப்பப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது என்று நெதர்லாந்து மீட்புக் குழு தெரிவித்தது. யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும் இருவரின் உடல்நிலை சற்று மோசமாக இருந்ததால் சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 23 பேரும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் கடத்தப்பட இருந்த இவர்கள் எந்த நாட்டினர் என்ற தகவல் இதுவரை உறுதியாகக் கூறப்படவில்லை. கடந்த மாதம், லாரி ஒன்றிலிருந்த குளிரூட்டப்பட்ட கொள்கலனில் 39 வியட்நாமியர்களின் உயிரிழந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாறு ஐரோப்பாவிற்குள் கள்ளத்தனமாகக் குடியேறும் முயற்சிகளில் ஈடுபடுவோர், தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அத்துடன், ஆட்கடத்தல் கும்பல்கள் வறுமையில் வாடுவோரை ஆசை காட்டி வேறு நாடுகளுக்குக் கடினமாக வேலைகளுக்காக கடத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது.