விடுதலை புலிகளை முன்வைத்து சோனியாவுக்கு பாதுகாப்பு கேட்பது நாகரீகமா.?

breaking
தமிழீழ விடுதலைப் புலிகளை முன்வைத்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு பாதுகாப்பு கேட்பது நியாயம்தானா? என திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு கண்டனம் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் சோனியாவின் கறுப்பு பூனை படை வாபஸ் குறித்து திமுகவின் எம்.பி. டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார். அப்போது, விடுதலைப் புலிகளால் சோனியாவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்கிற நிலையில் அவருக்கான பாதுகாப்பு ஏன் வாபஸ் பெறப்பட்டது என கேள்வி எழுப்பினார். இது தமிழகத்தில் கடும் சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், திமுகவின் இந்த பேச்சு இனத்துரோகம் என சாடியிருந்தார். தற்போது திமுக -காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தமது ட்விட்டர் பக்கத்தில், விடுதலைப்புலிகள் தேசத்தின் காவலர்கள்.சிங்கள பவுத்த பயங்கரவாதத்துக்கு எதிராக தம் மக்களை காப்பாற்றிய மக்கள் இயக்கமே விடுதலைப்புலிகள். அப்படிப்பட்ட புலிகளை அழித்து விட்டதாக அறிவித்த பிறகும், விடுதலைப்புலிகளை வைத்து பாதுகாப்பு கேட்பது நாகரீகமா? என பதிவிட்டுள்ளார்.