மாவீரர் யாரோ என்றால்.........!

breaking

தமிழர்தாயகத்தின் தலைநகரில் மூதூர்ப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவன் அவன். மிகவும் எளிமையான குடும்பத்தில் அவன் நடுப்பிள்ளை.

வயல்களும் ஆற்றங்கரையும் அன்புநிறைந்த மனிதர்களுமாய் நிறைந்துகிடந்த கிராமத்தில் தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியவல்லை.... திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் அவனது பிரதேசத்தை விழுங்கத் தொடங்கியிருந்தன.... தமிழ்மக்கள் தம் வாழ்விடங்களில் வாழமுடியாமல் தவித்தார்கள். வயல்நிலங்கள் கருகிப்போயின... பிள்ளைகளின் கல்வி தடைப்பட்டுப்போனது...சனங்கள் காடையர்களுக்கு அஞ்சி காடுகரம்பைகளில் உறைந்தார்கள்....

அவனை படிக்கவைத்து உயர்நிலையில் வைத்துப்பார்க்கவே அவனுடைய அம்மா விரும்பியிருந்தாள்... கல்விகற்றல் என்பது அவனுக்கும் எட்டாக்கனி ஆகியது....

அவனோ... தன் மனிதர்களின் அவலங்களைத் தாங்கிக்கொள்ள முடியாதவனாக உருகினான்..... தமிழர்களுக்குச் சொந்தமான நிலம் பறிக்கப்படுவது அவனை உருவேற்றியது...

அவன் முகத்தில் இப்போதுதான் மீசை அரும்பியிருந்தது... அவனுடைய மனதில் வயதிற்கே உரிய ஆசைகளுக்குப் பதிலாகத் தன் மக்களின் அவலங்களைத் துடைத்தெறியவேண்டும் என்கின்ற உணர்வே மேலோங்கியது...

அப்போதுதான் அவனுக்கு விடுதலைப்போராளிகளின் அறிமுகம் கிடைத்தது. அவன் தன்மக்களைத் துயரங்களில் இருந்து விடுவிப்பதற்காக தானும் விடுதலைப் போராளியானான்....

ஈச்சிலம்பற்றையில்... கட்டைப்பறிச்சானில்... பாலம்பட்டாற்றில்... களவாஞ்சிக்குடியில்... திருக்கோயிலில் என அவனுடைய விடுதலைப் பணிகள் தொடர்ந்தன...

ஒருநாள்... தன் தோழர்களுடன் அவன் பெரியபாலத்தடியில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டான்... அவனும் அவன் தோழர்களும் படையினரை எதிர்கொண்டு போராடினார்கள்... அவன் தன் தோழர்களை ஒவ்வொருவராக சுற்றிவளைப்பிலிருந்து வெளியேறவைத்தான்...

தானும் வெளியேறுவதற்காகப் போராடினான். ஆனால் அன்று... எவருமே எதிர்பாராதபடி அவனுடைய வீரச்சாவு நிகழ்ந்தது.

வாய்ப்புகள் இருந்தும் வாழ்வுதனை ஒறுத்துத் தன் மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடி மாவீரனானான் அவன்.

***                              ****                               ****

அவனுக்கு அப்பாதான் எல்லாம். எப்போதும் அப்பாவின் கால்களையே சுற்றிச் சுற்றி வருவான்.

மாலைவேளைகளில் முற்றத்தில் சாய்வுநாற்காலியில் படுத்திருக்கும் அப்பாவின்மேல் ஏறி விளையாடுவான் அவன். அப்பாவுக்கு தொந்தரவு கொடுப்பதாக அவனை அம்மா கடிந்துகொள்ளும் பொழுதுகளில் அப்பா மென்மையான புன்னகையோடு அவனை நெஞ்சில் அணைத்துக்கொள்வார்.

அப்பாவின் விரல்பிடித்து  தெருவில் நடக்கும் வேளைகளில் மனது மகிழ்;ச்சிக் கடலில் துள்ளிவிளையாடும். ஊhத்திருவிழாவில் அப்பா  அவனைத் தோளில் சுமந்து செல்வார்.

அப்பாவை இந்திய அமைதிப்படையினர்தான் கொன்றார்கள்

 ' இவர் ஒரு கண்டறியாத அப்பாச் செல்லம்... ' அம்மம்மா சலித்துக்கொள்வாள்.

அப்பாவை விட்டுப்பிரிந்திருக்க அவனுக்கு இயலாது. அப்பா வீட்டுக்கு வரத்தாமதமானால் அவன் பெரிதாக அழத்தொடங்கிவிடுவான்...

இப்படி மகிழ்ந்திருந்த காலத்தில் தான்..... இந்திய அமைதிப்படை வந்திறங்கியது. இராணுவ உடையுடனும் கையில் நீண்டிருக்கும் ஆயுதங்களுடனும் அவர்களைக் காணும்போதெல்லாம் அவன் அப்பாவை இறுக அணைத்துக்கொள்வான்....

இந்திய அமைதிப்படையினரின் போர்க்காலம்..... எறிகணைகளும் துப்பாக்கிகளின் வேட்டொலிகளுமாக ஊரெல்லாம் கதிகலங்கித் துடித்தது. இரைந்துகொண்டு வந்துவிழும் எறிகணைகளில் சனங்கள் செத்தக்கொண்டிருந்தார்கள்...

அவர்களின் வீட்டுவளவுக்குள்ளும் சில எறிகணைகள் விழுந்தன.... எறிகணையின் சிதறல் ஒன்று அப்பாவின் நெஞ்சில் பாய்ந்தது. சத்தமே இல்லாமல் அப்பா சாய்ந்தார்....

அவனுக்குப் பதினேழுவயதாகியது.... இன்னமும் போர் நடந்துகொண்டிருந்தது. இப்போது அரசபடையினரின் விமானங்கள் குண்டுகளை வீசத்தொடங்கியிருந்தன...

அவனைப்போலவே பல பிள்ளைகள் அப்பாவை இழந்தார்கள்... அம்மாவை இழந்தார்கள்....

அவனுக்கு இந்த அவலத்தைப் போக்க ஒருவழிதான் தெரிந்தது. அவன் விடுதலைப் போராளியானான்.... சண்டையணியில் அவனும் ஒருவன்.... அப்பா அவனுக்குள்ளிருந்து அவனை ஆசீர்வதித்தார்....

' என்னைப்போல இனிவரும் பிள்ளையள் அப்பாவை இழக்கக்கூடாது... ' இதுதான் அவனின் குறிக்கோளாகியது...

சண்டை... ஓய்வற்ற சண்டைக்களங்கள்.... ஒவ்வொரு சண்டைக்குச் செல்லும்போதும் அப்பாவின் இழப்பு அவனுக்குள் வலிக்கும்.

விடுதலைதான் தமிழினத்தை வாழவைக்கும் என வாழ்ந்தவன் களமுனையொன்றில் விழிமடல் மூடிப்போனான் மாவீரனாக....

***                              ****                               ****

' கெதியா ஓடுங்கோ பிள்ளையள்... ஆமிக்காறங்கள் கிட்ட வந்திட்டான்களாம்.... முதியவர் ஒருவர் அவளை விலத்திக்கொண்டு ஓடினார்.

அவசரத்தில் எடுத்துக்கொண்டு ஓடிவந்த உடுப்புப்பையின்  கைபிடி அறுந்துவிட்டது. அம்மா பின்னால் மெதுவாக வந்துகொண்டிருந்தாள் அவள். தம்பிகள் இருவரும் முன்னால் போய்க்கொண்டிருந்தார்கள்...

வானத்தில் உலங்குவானூர்தி ஒன்று வட்டமிட்டு வட்டமிட்டு ஓடுகின்ற சனங்களைச் சுட்டுக்கொண்டிருந்தது. இரண்டொரு உடுப்புகளைத் தவிர எதையும் எடுத்துவர முடியவில்லை...

தொடர்ந்து நடக்கமுடியாமல் தவித்த அம்மாவுக்கு கொடுக்க தண்ணீர்கூட இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் உயிர்களைக் காக்க ஓடிக்கொண்டிருந்தனர்....

யாழ்ப்பாணம் வடமராட்சிநெல்லியடியில் பிறந்த அவள்... ஓடிக்கொண்டிருந்தாள்....

ஓடிஓடி..... மருதனார்மடத்தடிக்கு வந்தபோதுதான்  தெரிந்தது அண்ணா வரவில்லை என்பது....

பின்னால் வந்த சனங்களிடமெல்லாம் அண்ணாவைப்பற்றிக் கேட்டார்கள்.... எவருக்கும் விபரம் தெரியவில்லை.....

' ஊர்ப்பெடியள் கனபேரை பிடிச்சுக்கொண்டு போறாங்கள் பிள்ளை... நான் செத்தசவம் மாதிரிக்கிடந்து தான் தப்பிவாறன் பிள்ளை.... „

இடப்பெயர்வு தந்த அவலங்களும் அவமானங்களும் உயிருக்கிணையான அண்ணனின் பிரிவும் அவளை போராடவேண்டும் என உந்தின.....

அவள் எப்படியோ போராட்டத்தில் இணைந்துகொண்டாள்.... தொடக்க காலங்களில் சமுகப்பணி.... முதலுவிப்பணி.... பரப்புரை என இவளின் நாட்கள் கடந்தன...

இந்திய அமைதிப்படையினரின் ஆக்கிரப்பு காலகட்டத்தில்தான் அவளும் பயிற்சிகள் பெற்றுக்கொண்டாள்...

பல களங்கள் அவளை எதிர்கொண்டன.... 1991 இல் ஆகாய கடல் வெளிச் சண்டையில் அவளும் ஓர் அணித்தலைவியாகப் பங்கேற்றாள்.....

1993 இல் பூநகரி தவளையென்ற ... ஈரூடகத் தாக்குதல்....

1995 இல்.... புலிப்பாய்ச்சல்.... என இவளின் போர்ப்பரணி தொடந்தது......

பின்னர்... யாழ்ப்பாண இடப்பெயர்வு....

அவளுடைய படையணியும் வன்னிப்பெருநிலப் பரப்பின் புதுக்குடியிருப்புக்கு இடம்மாறியது. சிலகாலம் முகாமை ஒழுங்குபடுத்தும் பணியில் அவளுடைய நாட்கள் கடந்துபோயின.

வன்னிப்பெருநிலப் பரப்பில் ஒருவெற்றுக்காணிக்குள் குடிசைபோட்டு அம்மாவும் உடன்பிறப்புகளும் இருப்பதாக அறிந்து>  பார்க்கப்போனாள்....

எல்லாத்துயரங்களினாலும் பாதிக்கப்பட்ட அம்மா நோயாளியாக இருந்தாள்.

இடப்பெயர்வுக்குள்ளான சனங்களின் துயரங்கள் வருத்த... அவள் மனது பெரும்பாரமாகிக் கனத்தது....

சில காலத்தில்..... ஜெயசிக்குறு இராணுவநடவடிக்கைக்கு எதிரான சண்டை.....

அதிலும் அவள்..... தோழிகளுடன் இணைந்து நின்றாள்....

அப்போது ஒருபொழுதில்தான் அந்தத் துயரம் நிகழ்ந்தது..... எதிரியின் திடீர்த் தாக்குதலில் விழுப்புண்ணடைந்தவள்.... தன்மானத்தோடு குப்பியைச் சுவைத்து வீரப்பெண்ணாக விழி மூடுகிறாள்.......

***                              ****                               ****

அவன் இயக்கத்தில் இணைந்து பல ஆண்டுகளாகிவிட்டது.... பல களங்களில் சளைக்காது  போராடியவன்....

அவனை அரசியற்றுறைப் பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல் கிடைத்தது. புதிய போராளிகளை இணைக்கும் பரப்புரைப் பணியில் அவனும்....

இரவிரவாக பரப்புரைக் கூட்டங்களும் கலைநிகழ்ச்சிகளும் நடக்கும். நிகழ்ச்சிகளை ஒன்றிணைணத்து எல்லாவற்றையும் சரிப்படுத்தும் பணியில் பொறுப்பாளருடன் இணைந்து செயற்பட்டுவந்தான் அவன்...

இதனிடையே... அவனுக்கும் மனதுக்குள் காதல் துளிர்த்தது.... அவளும் ஒரு மாவீரனின் தங்கைதான்.... காதலை மேலிடத்துக்கு தெரிவித்து அனுமதி பெற்றுக்கொண்டான்..

குறிப்பிட்ட நண்பர்களின் குடும்பங்களை மட்டும் அழைத்து எளிமையான திருமணம்....

அவன் ஒரு பெண்குழந்தைக்கு அப்பாவானான்.... அவனுக்கு குழந்தையின்மேல் பாசம் அதிகம்... ஆனால் அருகிருந்து தன் குழந்தையின் அசைவுகளை பார்க்க முடியாதளவு கடமைகள்...

எல்லா நாட்களிலும் அவனால் வீட்டிற்கு வரமுடியாது.... வருகின்ற நாளிற்கூட குழந்தை உறக்கத்தில் இருக்கும்.... காலையில் கடமைகள் அவனை அழைக்கும்...

இப்படியான ஒருகால ஓட்டத்தில்தான்.... பூநகரி ஏரியினூடாக யாழப்பாணத்திற்கான ஒரு தரையிறக்கம்.... அவனும் பங்கேற்கவேண்டிய சூழல்.... களமுனைக்குச் செல்ல வேண்டும் என்கின்ற பேரவா அவனுக்குள்ளும் இருந்தது.

தகவல்கள் ஏதும் வெளியே கசிந்துவிடக்கூடாது... தன் குழந்தையை ஒருதடவை பார்த்துவிட்டு, தான் திரும்பிவர இரண்டுமூன்று நாட்களாகும் எனத் தன்னவளிடம் தெரிவித்து விடைபெற்றுக்கொண்டான்.

போர்க்களத்தில் எதுவும் நிகழலாம் என்பது அவனுக்குத் தெரியும்.... அவன் தன் குடும்ப நினைவுகளை ஒறுத்து... தோழர்களுடன் இணைந்துகொண்டான்....

எல்லோரும் எதிர்பார்த்தபடி அந்த தரையிறக்க முயற்சி நடந்தது.... கடலில் எதிரியின் சரமாரியான துப்பாக்கிச் சூடு....

ஆம்.... அந்த துப்பாக்கிக் குண்டொன்று அவனுக்குள் நுழைந்தது... அவன் வாயிலிருந்து அவர்களுடைய தாரகமந்திரம் மெதுவாக ஒலித்தது... அவனுடல் சாய்ந்தது.

மாவீரனாக அவனின் வித்துடல் வந்துசேர்ந்தது....

இப்படியாகத்தான் தாயக மண்மீட்புப் போராட்டத்தில் உயரீந்த அத்தனை மாவீரர்களுக்கும் ஒவ்வொரு வரலாற்று வாழ்வியற்கதை இருந்தது.

பாசம், பற்று, குடும்பம், உறவுகள், ஆசைகள் என எல்லாவற்றையும் தியாகம் செய்தவர்கள்தான் எம் மாவீரர்கள்..... இவர்கள் மரணத்தை வென்று வாழ்பவர்கள். இவர்களின் ஒப்பற்ற உயிர்க்கொடைகள் தான் எமது இனத்தை வாழவைத்துக்கொண்டிருக்கிறது.........

-    தாரகம் இணையத்திற்க்காக  - எழுத்துருவாக்கம்; - முக்கண்ணி