30 ஆவது ஆண்டு நிறைவு நாளோடு தமிழீழ காவல்துறை

breaking

30 ஆவது ஆண்டு நிறைவு நாளோடு தமிழீழ காவல்துறை


தமிழன் தலை நிமிர்ந்து வாழவேண்டுமென்று தனித்துவமான சிந்தனையோடு தமிழர்களுக்கான ஒரு தனி நாடு வேண்டும் என்ற இலச்சிய நோக்கோடு, எம் நாட்டை பாதுகாக்க இராணுவரீதியில் என்னென்ன கட்டமைப்புக்கள் தேவை என தெரிந்து உருவாக்கிய எம் தலைவர் எமது தாயகப் பகுதிக்குள் எம்மை நம்பி வாழுகின்ற மக்களுக்கான தேவைகளையும் கட்டமைப்புக்களையும் நிறுவுவதற்கு தவறவில்லை. அந்தவகையில் தான் மக்களுக்கான பொது நிர்வாக அமைப்பொன்றை தமிழீழ காவல்துறை என்ற பொது நிர்வாக அலகை 19.11.1991 அன்று உருவாக்கினார்.


காவல்துறை தமிழீழத் தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டு பொறுப்பாளர் பா. நடேசன் அவர்களின் வழிநடத்தலில் சம உரிமை, சம நீதி, ஏற்றத்தாழ்வு இல்லாமல் சமூக மேம்பாட்டிற்குமான முறையில் காவல்துறையை வழிநடத்திக்கொண்டு வந்தார்.

காவல்துறை உறுப்பினர்கள் ஆரம்ப காலத்தில் தமது கடமைகளை சிலவேளைகளில் நடந்தும் ஈருருளிகளிலும் சென்று மக்களுக்கான கடமைகளை மேற்கொண்டு வந்தனர். அவ்வேளைகளில் மக்களின் போதிய ஒத்துழைப்புக்களும் இருந்தது.
தனிநாடு வேண்டி இலங்கை ஏகாதிபத்திய அரசினது வன்முறைகளிலிருந்தும் அழிவுகளிலிருந்தும் மலரப்போகும் எமது ஈழத்தில் எதிர்கால சந்ததிகளை பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கிலும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடின்றி அதிகாரமற்ற, ஆணவமற்ற, அடக்குமுறையற்ற ஒரு மக்களுக்கான நிர்வாகமாக செயற்பட வேண்டுமென்ற காரணங்களை உள்ளடக்கி எமது தலைவர் தமிழீழ காவல்துறையை வளர்த்தெடுத்தார்.உலக அரங்கிலே தமிழீழ விடுதலைப் புலிகளின் சுதந்திர விடுதலைக்கான போராட்டத்தைப் பற்றியும் அதனது போரியல் யுக்திகள் பற்றியும் எத்தனை மலைபோல் எதிரி திரண்டுவந்தாலும் தனி ஒரு சிறு படையாக இத்தனை வருட போராட்டக் களங்களையும் அந்த மோதல்களுக்குள் வாழுகின்ற மக்களையும் மனிதாபிமான நோக்கோடும் அம்மக்களுக்கான சமூக அந்தஸ்களோடும் சரிவர வழிநடாத்தி ஆயுதப்போரட்டம் மௌனிக்கும் வரையும் தமிழீழ காவல்துறையைத் திறம்பட்டு செயல்பட வைப்பதற்கு எவ்வாறு முடிந்ததென பின்னாளில் பல உலக அரசியல் நிபுணர்கள் ஆராய்ந்து அதைப் பற்றி அறிந்துகொள்ளமுடியாமல் வியந்துள்ளதை ஊடகம் வாயிலாக நாம் அறிந்திருக்கின்றோம்.


எமது தலைவர் எத்துறையை உருவாக்கினாலும் அதனது நீள அகல ஆழங்களைப்பற்றியும் விளைவுகளைப் பற்றி தனித்திருந்து விழிந்திருந்து பசித்திருந்து நன்கு ஆராய்ந்த பின்பே அதை செயற்படுத்துவார். அவ்வாறான தூரநோக்கும் சீரிய சிந்தையும் உள்ள எம் தலைவரின் நகர்வுகளை அறிந்துகொள்ள அவராலே மட்டும் முடியுமே தவிர எந்த வல்லாதிக்க சக்தியாலும் அணுவளவும் முயன்றாலும் முடியாது. 

தமிழீழ காவல்துறையானது ஆரம்பத்தில் தலைவரின் கண்காணிப்பின்கீழ் பயிற்சியளிக்கபட்டு மக்கள் மத்தியில் எவ்வாறு தமது சேவையை வழங்கவேண்டுமென்று தானே வழிநடத்தி சேவைக்காக வழியனுப்பிவைத்தார். தலைவரின் கையால் புடம்போட்டப்பட்ட நேர்மையாக மக்களுக்குச் சேவையாற்றக்கூடிய உறுப்பினர்களை வெளியேற்றி இவர்களுக்குள் மக்கள் தொடர்பகப் பிரிவு, குற்றத்தடுப்புப் பிரிவு, நீதிமன்ற பிரிவு, போக்குவரத்துப் பிரிவு, சிறுவர், பெண்கள், முதியோர், நலிவுற்றோருக்கான புனர்வாழ்வுப் பிரிவு, பொது நிர்வாகப் பிரிவு, அனர்த்த கால கண்காணிப்புப் பிரிவு போன்ற பல்வேறுபட்ட பிரிவுகளை உள்ளடக்கி இறுதிவரை உறுதியோடு பணியாற்றினார்கள்.
2002 இலங்கையரசுக்கும் தமிழீழ விடுதபை; புலிகளுக்கிடையிலான சமாதான ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டு ஏ9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டதன் பின்னர் தமிழீழ காவல்துறையினருக்கான பணிகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. அந்தவகையில் இலங்கை அரசின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருகின்ற வாகனங்களையும் பயணிகளையும் பதிவிடுதல் மற்றும் சோதனையிடுதல் போன்ற பணிகளையும் சூனியப் பிரதேசங்களிலே புலிகள் பகுதிகளிலுள்ள போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் செயற்திட்டங்களிலும் போக்குவரத்துக் கண்காணிப்பிலும் அரசு-விடுதலைப்புலிகளுக்கிடையினால சமாதான தூதுவர்களின் சந்திப்புகளிலும் அனர்த்த காலங்களில் பணியாற்றுகின்ற செயற்திட்டங்களிலும் மாணவர்கள் பெண்கள் அவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகளை முன்னெடுத்தல் போன்ற பணிகளிலும் இவர்களது சேவை விரிவுபடுத்தப்பட்ட தோடு தலைவரின் சிந்தனைக்கமைவாக தமிழர் பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்குள் அன்றாடம் கையேந்தி வாழ்க்கை நடத்துகின்ற நபர்களையும் தன்னிலையற்ற மனநலன் பாதிக்கப்பட்ட நபர்களையும் இனங்காண்டால் அவர்களுக்கென தலைவரின் சிந்தனையில் உருவாக்கப்பட்ட இல்லங்களில் (வெற்றிமனை, மூதியோர் பேணலகம், சிறுவர் பராமரிப்பு இல்லங்கள், பெண்கள் புனர்வாழ்வு நிலையங்கள், வலுவிழந்தோர் காப்பகங்கள்) அவர்களை சேர்ப்பித்து அவர்களுக்கான மறுவாழ்வு அளிக்கும் செயற்திட்டங்களை முன்னெடுப்பதுடன் அவர்கள் பாதுகாப்பான முறையில் வாழக்கூடிய இடங்களுக்கு அனுப்பிவைக்கும் பணியை தமிழீழ காவல்துறை மேற்கொண்டு வந்தது.யுத்த காலங்களில் இராணுவத்தாலும் விடுதலைப் புலிகளாலும் கைது செய்யப்பட்டவர்களை புளியங்குளம் பகுதியில் கைதிப் பரிமாற்றங்கள் செய்யப்பட்ட நேரங்களில் பாரிய கடமைகளை காவல்துறையினர் செய்தனர்.

மக்களின் தேவைப்பாடுகளுக்காகவும் அரச சார்பற்ற நிறுவனங்களான   I.C.R.C ,U.N.H.C.R ,UNICEFஆகிய நிறுவனங்கள் காவல்துறையுடன் சிறுவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏற்படும் பொதுப் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடல்கள், பயிற்சிப் பட்டறைகள் வைத்து எங்களின் கடமைகளுக்கு ஒத்துழைப்புடன் செயற்பட்டார்கள்.

காவல்துறையின் வேலைகளில் மக்களின் இடம் பிரதேசங்களுக்கு ஏற்றபடி விரிவாக்கம் பெற காவல்துறையின் பணிமனைகளும் விரிவாக்கமும் மேலதிக பணிமனைகளும் நிறுவப்பட்டன.

எமது உறவுகளுக்கு ஏற்படும் பிரச்சினைபற்றி கிராமங்களுக்கும், பிரதேசங்களுக்கும் சென்று சிறுவர்கள் கல்வி மேம்பாட்டிற்கும் தொற்று நோய்கள் வந்தால் அதில் இருந்து பாதுகாப்பது, விமானத் தாக்குதலில் இருந்து எப்படி எம்மையும் சுற்றத்தார்களையும் பாதுகாப்பது, வீதி விபத்துக்களில் இருந்து, எப்படி பாதுகாத்துக்கொள்வது பற்றியான கருத்தூட்டல் விழிப்புணர்வுகளை வழங்குதல். 

இயற்கை அனர்த்தம், மழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலங்களில் மக்களின் உயிரைக் காப்பாற்றல், உடமைகளைக் காப்பாற்றல், போக்குவரத்துகளுக்கு இடையூறு இல்லாமல் செய்யும் கடமையைச் செய்தும் அப்பணிகளில் உறுப்பினர்கள் தமது உயிர்களையும் தியாகம் செய்துள்ளார்கள்.

விசேடமாக மடுப் பெருநாள் விசேட திருநாட்களிலும் வற்றாப்பளை, புத்தூர் நாகதம்பிரான், புளியம் பொக்கனை கோயில்களின் விசேடமான திருவிழாக் காலங்களில் தமிழீழப் பிரதேசங்கள் தவிர்ந்த மற்றைய பிரதேசங்களில் இருந்து வரும் மக்களான சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாதபடி ஒழுங்குசெய்து கடமையாற்றினர்கள்.

ஆனையிறவு, கிளிநொச்சிப் பிரதேசங்களில் இருந்து இராணுவ நடவடிக்கையில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவர்கள் 2000 ஆம் ஆண்டுப் பகுதியின் பின்னர் தமது பகுதிகளுக்குத் திரும்பி குடியிருப்பதற்கு சென்று தமது இடங்களை துப்புரவுசெய்யும்போது மலக்குழிகளிலும் இடிந்திருந்த வீடுகளிலும் புதையுண்டு எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டு, அதனை இனங்காணும் பொருட்டு சிதையுண்டு இருந்த மனித எலும்புக்கூடுகளில் அடையாளம் காணக்கூடியதான உடுபுடைவைகள் வெற்றிலை பாக்கு வைத்திருக்கும் லஸ்பிறே பைக்கற்றுகள், முறிந்த கால்களின் எலும்புகளில் இருந்து எடுக்கப்பட்ட இணைக்கப்பட்ட உலோகத் தகடுகள், கிறிஸ்தவர்கள் வைத்திருக்கும் செபமாலை ஆகியவற்றில் இருந்து இனங்காணக்கூடியதாக இருந்தது. இந்த எலும்புக்கூடுகளை  I.C.R.C மனித உரிமை நிறுவனம், வந்து பார்வையிட்டனர். இனங்காணப்பட்ட எலும்புக்கூடுகளின் உறவினரிடம் இருந்து விசாரணைகளையும் மேற்கொண்டனர்.


எமது காவல் துறையின் விடுதலைப் புலிகளின் நிர்வாகம் நடைபெற்ற காலங்களில் மக்கள் எதுவிதமான அச்சங்களும் அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை. பெண்கள் எந்த இடங்களுக்கும் இரவு வேளைகளிலும் தனியாக சென்று வருவதற்கு எந்தப் பிரச்சினைகளும் ஏற்பட்டதில்லை.

இவ்வாறு மக்கள் மத்தியில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2005 ஆம் ஆண்டு முறிக்கப்பட்ட உடன்படிக்கையின் பின்னர் தமிழின அழிப்பு தமிழர் தாயகப்பகுதிகளில் சூழ்ந்து கொண்ட வேளைகளிலும் சர்வதேச தனியார் தொண்டு நிறுவனங்களை யுத்தம் நடைபெறும் பகுதிகளை விட்டு அவசரமாக வெளியேறுமாறு பணித்தபோதும் தங்கள் குடும்பங்களை விட்டு பந்த பாசங்களை துறந்து இரவுபகல் பாராது உயிரைப் பணயம் வைத்து தேச நாயகனின் விடுதலையை மூச்சாகக் கொண்டு தம் உயிர்களையும் விடுதலை வேள்வியில் ஆகுதி ஆக்கி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலப் பகுதிகள் உலக நாடுகளின் ஒத்துழைப்போடு இலங்கை இராணுவத்தினரால் கடல், தரை, ஆகாயம் வழியாக ஆக்கிரமிக்கப்பட அவ்வேளையிலும் மும்முனை தாக்குதலிலும் சிக்குண்டு காயப்பட்ட மக்களை வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லவும் பிரிந்துபோன உறவுகளை அவர்களினுடைய குடும்பங்களுடன் இணைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் காயமடைந்து ஆபத்தானவர்களாக இருக்கும் மக்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல்களில் ஏற்றி அனுப்பும் மனிதாபிமானப் பணிகளை முன்னெடுப்பது வரையும் 1991ஆம் ஆண்டு எமது தலைவரினால் உருவாக்கப்பட்ட தமிழீழ காவல்துறையானது களமுனையிலும் மக்கள் மத்தியிலும் விடுதலை ஒன்றே எம் மக்களுக்கான நிரந்தர தீர்வாக அமையும் என்ற நோக்கோடு போராடிய ஆண், பெண் விடுதலைப் புலிகளின் படையணிகளோடு தாமும் ஒரு படையணியாக இணைந்து தமது உயிர்களையும் தேச விடுதலைக்காக அர்ப்பணித்து கல்லறைக்குள்ளே துயில்கொள்ளும் தமிழீழ காவல்துறையின் காவிய நாயகர்களையும் ஏனைய அனைத்து மாவீரர்களையும் பணியாளர்களையும் நாட்டுப்பற்றாளர் அவர்தம் உறவினர்களையும் தேசிய துணைப்படை மாவீரர்களையும் போராட்டத்தில் உயிர்நீர்த்த எமது உறவுகளையும் தமிழீழ காவல்துறையின் 30 ஆவது ஆண்டு நிறைவிலே வணக்கம் செலுத்தி நினைவுகூறுவதோடு வரும்கால எம்சந்ததிக்கு இவ்விடயங்கள் பற்றி ஆவணப்படுத்துவதில் புலம்பெயர்ந்தும் ஈழத்திலும் வாழும் தமிழீழ காவல்துறையினரின் சார்பாகவும் இந்நாளை நினைவுகூர்ந்து கொள்கின்றேன்.


“நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல், நாடு பெரிது என்று வாழுங்கள்” என்னும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையைச் சிரமேற்று தமிழீழ காவல்துறை முதன்மை ஆய்வாளர் -       

-  அ. விஜயகுமார்