

தென் தமிழீழம் , மட்டக்களப்பு – கிரான் புணாணை மேற்கு கிராம அதிகாரிக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான சாளம்பஞ்சேனை கிராமத்தில் வாழும் மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இங்கு வாழும் மக்கள் 1961ம் ஆண்டு குடியேறினர். பின்னர் நாட்டின் அவ்வப்போது ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்று மீண்டும் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னர் மக்கள் மீள குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த சாளம்பஞ்சேனை கிராமமானது மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடியில் இருந்து சுமார் 16 கிலோமீற்றர் தூரம் சென்று இடப்பக்கமாக 02 கிலோமீற்றர் தூரத்தில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி மிகவும் கஸ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தினமும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு காணப்படுகின்றனர்.
இங்கு வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகளாக குடி நீர் பிரச்சனை பாரிய பிரச்சனையாக காணப்படுகின்றது. இங்கு காணப்படும் பொதுக் கிணறுகள் வற்றிய நிலையில் காணப்படுகின்றது. அத்தோடு ஒருவரின் வீட்டின் மாத்திரமுள்ள கிணற்றில் ஓரளவு நீர் காணப்படுகின்றது. குறித்த நீரையே இங்கு வாழும் மக்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பெற்றுக் கொள்வதுடன், மிஞ்சும் நீரைக் கொண்டு தோட்டப் பயிர்களுக்கு ஊற்றி தோட்டங்களை பராமரித்து வருகின்றனர். இங்கு வாழ்பவர்களின் ஜீவனோபாய தொழிலாக வீட்டுத் தோட்டம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்பன முக்கியத்துவம் பெறுகின்றது.
கிராம மக்கள் தங்களது வீடுகளின் தோட்டங்கள் அமைத்து தங்களது அன்றாட தேவைகளுக்கும், வியாபார நடவடிக்கைகளுக்குமாக மேற்காண்டு வரும் நிலையில் தண்ணீர் பிரச்சனையானது பாரிய பிரச்சனையாக இவர்களின் மத்தியில் எழுந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் எவரும் கரிசணை கொள்வதில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அத்தோடு தண்ணீர் பிரச்சனை தொடர்பாக தேர்தல் காலங்களில் மாத்திரம் வரும் அரசியல்வாதிகளிடம் மற்றும் அரச திணைக்களங்களுக்கு சென்று அரச அதிகாரிகளிடம் குடி நீர் பிரச்சனையை தீர்த்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் இதுவரை எந்த நடவடிக்கையும் இடம்பெற்றவில்லை.
அத்தோடு எமது சாளம்பஞ்சேனை கிராமத்தினுள் இரவு வேளைகளில் யானைகளினால் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகின்றது. இதன்காரணமாக சில வீடுகள் முற்றுமுழுதாக சேதமாக்கப்பட்டதுடன், உடமைகள் அனைத்தையும் சேதமாக்குகின்றது. அத்தோடு வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்ட கச்சான், கத்தரி, வெண்டி, மிளகாய் என்பவற்றையும் அழித்து துவம்சம் செய்கின்றது.
எமது சாளம்பஞ்சேனை கிராமத்திற்கு தேர்தல் காலங்களில் மாத்திரம் அரசியல்வாதிகளுக்கு எங்களது கிராமம் ஞாபகத்திற்கு வருகின்றது. ஆனால் தேர்தல் முடிந்ததும் எங்களது கிராமங்களை மறந்து விடுகின்றனர். தேர்தல் காலங்களில் வரும் போது அதனை செய்வோம், இதனை நிறைவேற்றுவோம் என்பார்கள் ஆனால் எதுவும் செய்து தருவதில்லை.
ஆனால் மீண்டும் அடுத்த தேர்தல் வரும் போது முன்னையவர்கள் செய்யவில்லை. நாங்கள் செய்து தருவோம் என்று எங்களை ஏமாற்றி செல்வார்கள். அவர்களால் எதுவும் இடம்பெறுவதில்லை. தற்போது வந்துள்ள அரசாங்கமாவது எங்களது நிலைமையை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே சாளம்பஞ்சேனை கிராம மக்கள் நிலைமையினை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தி யானை வேலி அமைத்து தருமாறும்இ எமது பகுதியை அண்டியுள்ள பகுதியில் கட்டப்படும் மாடுகளை வேறு பகுதிகளில் கட்டுவதற்கும் ஏற்பாடுகளை செய்து தருமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அத்தோடு குறித்த கிராமத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் குடி நீர் பிரச்சனைக்கு தீர்வு பெறும் வகையில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் பிரச்சனையை தீர்க்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் சா.வியாளேந்திரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரன், இரா.சாணக்கியன், நசீர் அஹமட் ஆகியோர் சாளம்பஞ்சேனை கிராம மக்களின் நலனில் அக்கறை கொண்டு உரிய கிராமத்திற்கு வருகை தந்து மக்களின் நிலைமைகளை பார்வையிட்டு இவர்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்குமாறு மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.