சுமந்திரனும் டக்ளஸும் எந்த வகையறா? - புகழேந்தி தங்கராஜ் .

breaking

தமிழீழத் தாயகத்தில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை இன்னும் உயிர்த்திருப்பதற்கு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தொடர்ச்சியான செயல்பாடுகளே அடிப்படை. நவநீதன் பிள்ளையில் தொடங்கி மிஷேல் பச்லெட் வரை, தமிழ் மக்கள் மீதும், தமிழ்ச் சகோதரிகள் மீதும் உண்மையான அக்கறையுடன் பேசுகிறார்கள் ஒவ்வொருவரும்! சர்வதேச சமூகம் எந்த அளவுக்கு அதற்குச் செவி மடுக்கிறது என்பதுதான், மர்மமாகவே இருக்கிறது. இலங்கை, பல ஆண்டுகளாக, தொடர்ந்து தன் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதைச் சுட்டிக்காட்டி மிஷேல் பச்லெட் அம்மையார் இந்த வாரத் தொடக்கத்தில் எழுதியிருக்கும் கடிதம், மனசாட்சி என்று ஒன்றிருந்தால், சர்வதேசத்தின் இதயத்தைக் கண்டிப்பாக உலுக்கும். கொடும் போர்க்குற்றங்களில் நேரடித் தொடர்புடைய உயர் ராணுவ அதிகாரிகளை ஊக்குவிக்கும் விதத்தில், அதைக்காட்டிலும் உயர் பதவிகளில் அவர்கள் அமர்த்தப்படுகிற அநீதியை மிஷேலின் கடிதம் கோடிட்டுக் காட்டுகிறது. சர்வதேசம் இதை அனுமதிக்கலாமா என்கிற வேதனையை வெளிப்படுத்துகிறது. 

மிஷேலின் கடிதம் வெளிவருவதற்கு இரண்டுநாள் முன்பே, தன்னுடைய சுயரூபத்தைக் காட்டிவிட்டது, ரணில் அரசு. மைத்திரிபால மாதிரி பூனைக்குட்டியை மடியில் மறைத்து வைத்துக் கொண்டிருக்காமல், ‘பாரபட்சமற்ற விசாரணை என்கிற பெயரில் சர்வதேசப் பொறிமுறை எதையும் இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது… அரசியலமைப்பில் அதற்கு இடமில்லை…’ என்று, அரசின் சார்பில் வெளிப்படையாக  அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இது பல்லவி தான். அடுத்ததாக, ‘எங்களை நாங்களே விசாரித்துக் கொள்வோம்’ என்கிற வழக்கமான சரணம். இந்த கபட நாடகத்தை சர்வதேசம் எவ்வளவு காலம்  வேடிக்கை பார்க்கும் என்கிற கேள்வி எழுந்தாலும், இந்த நீதி மறுப்பை நாம் எவ்வளவு நாள் தான் வேடிக்கைப் பார்க்கப் போகிறோம் என்பதுதான் பில்லியன் டாலர் கேள்வி.

பொத்தாம்பொதுவாகப் பேசிக் கொண்டிருக்காமல், போர்க்குற்றங்களில் நேரடித் தொடர்புடைய 58 ராணுவ அதிகாரிகளைக் கைது செய்யும்படி, சென்ற மாதம் மிஷேல் அம்மையார் வலியுறுத்தியதுதான் ரணில் அரசின்  முன்னறிவிப்புக்கான காரணமாக இருக்க வேண்டும் என்று நம்ப வேண்டியிருக்கிறது. வேறொரு காரணமும் இருக்கலாம். அது பத்துநாள் கழித்துத்தான் தெரியவரும்.

தமிழ் மக்களைப் பொறுத்த வரை, ரணில் அரசின் அறிவிப்பு முக்கியமான ஒன்று.  கடைசி நிமிடம் வரை தகிடுதத்தம் செய்துகொண்டிருக்காமல், கடைசி நொடியில் குத்துக்கரணம் அடிக்காமல், குறித்த நேரத்துக்கு முன்பே இலங்கை இப்படி அறிவித்திருப்பது, நமக்கெல்லாம் சூடு சுரணை இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வதற்கான லிட்மஸ் டெஸ்ட்! 


சர்வதேசப் பொறிமுறையை ஏற்க முடியாது - என்கிற இலங்கையின் நிலை  புதிதல்ல. அந்த அறிவிப்பு முன்னதாகவே வெளிவந்திருப்பதுதான் புதிது.  ஜெனிவாவில், சர்வதேசப் பொறிமுறையை முன்மொழிந்த தீர்மானத்தை வழிமொழிந்துவிட்டு, கொழும்பு திரும்பியதும் ‘அதையெல்லாம்  ஏற்க முடியாது’ என்று மறுத்துப் பேசியது மைத்திரிபால அரசு. ‘இலங்கையை வழிக்குக் கொண்டுவந்துவிட்டோம் பார்த்தீர்களா’ என்று ஜெனிவாவில் வாய்கிழியப் பேசிய தங்களது சொந்த ஏஜெண்ட் சுமந்திரனின் முகத்தில்,  தார்ச் சட்டியைக் கவிழ்த்தது. 

ராஜபக்சக்களின் தர்பாரின் போது, ‘சர்வதேச விசாரணை என்று சொல்லிக்கொண்டு யாராவது இலங்கைக்குள் நுழைந்தால் உயிரோடு திரும்ப  முடியாது’ என்றெல்லாம் எச்சரிக்கை விடப்பட்டதை நாம் மறந்துவிட முடியாது. அது முரட்டு வெறியர்களின் காலம். மைத்திரிபால அரசு, ஜெனிவாவுக்கு ஒரு நாக்கு… கொழும்புக்கு ஒரு நாக்கு என்று இரட்டை நாக்கால் பேசியது. அங்கே வாலைச்சுருட்டிக் கொண்டிருந்துவிட்டு, கொழும்பில் வந்து ஆட்டியது. அது கோழைகளின் காலம். 

இப்போது ரணில் என்கிற நரியின் காலம். ஆழம் பார்த்துக் காலை வைக்கத் தெரிந்த இந்த தந்திரமான மிருகம், தனக்கென்று எந்த பலமும் இல்லாவிட்டாலும், மற்றவர்களின் பலவீனத்தையே தனது பலமாக ஆக்கிக் கொண்டுவிடும்.  பெரிய மிருகங்கள் சாப்பிட்டுவிட்டுப் போன மிச்சம் மீதியைத் தின்றே உயிர் வளர்க்கும். இதற்காக அந்த மிருகம் ஒருபோதும் வெட்கப்பட்டதில்லை  என்றாலும், மற்றவற்றைக் காட்டிலும் இதுதான் கொடியது, இதுதான் ஈவிரக்கமற்றது. நரியின் குணத்துக்கும் ரணிலுக்கும் எத்துணை ஒற்றுமை பாருங்கள். சிங்கள மக்கள் இந்த உண்மையைப்  புரிந்துகொண்டிருக்கிறார்கள். நீறுபூத்த நெருப்பு மாதிரி, ரணில் மீதான வெறுப்பு வேரூன்றியிருக்கிறது. தமிழர்களும் இதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். 

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பல லட்சம் தமிழரின் ரத்தத்தால் நனைந்த ஈழ மண்ணில் நின்றுகொண்டு, 2009ல் நடந்த துயர நிகழ்வுகளை மறந்துவிட வேண்டுமென்று போதித்த போதிசத்துவர் ரணில். ராணுவத்தினரைத் தமிழ்மக்கள் மன்னித்துவிட வேண்டுமென்றும், குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நல்லிணக்கம் பாதிக்கப்படுமென்றும், கூசாமல் பேசியவர். 

சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு வழிவகுக்கிற ரோம் சாசனத்தில் இலங்கை கையெழுத்திடாததற்குக் காரணம் தான்தானென்றும், அந்த சாசனத்தில் கையெழுத்திடாததாலேயே சர்வதேசத்தின் விசாரணையிலிருந்தும் மின்சார நாற்காலியிலிருந்தும் ராஜபக்சக்கள் தப்பிக்க முடிந்தது என்றும், சிங்கள மக்களிடம் விலாவாரியாக விவரித்த இந்த மகானுபாவர், அதைப்பற்றித் தமிழ்மக்களிடையே ஒருபோதும் பேசியதில்லை. பேசப் போவதுமில்லை. இதுதான் ரணில். 

இனப்படுகொலைக்குத் திட்டமிட்ட ராஜபக்சக்களையும், அதில் நேரடியாக ஈடுபட்ட ராணுவ வெறியர்களையும் காப்பாற்ற மைத்திரிகளும் ரணில்களும் தலைகீழாக நின்றதற்கும் நிற்பதற்கும் காரணம், ஒன்றே ஒன்றுதான்! அவர்களைப் போலவே இவர்களுக்கும் சிங்கள ரத்தம். சிங்கத்தின் ரத்தம். சிங்க லே! அந்த ரத்தபாசம், குற்றவாளிகளைக் காப்பாற்றத் தூண்டியது. இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது? 

தமிழர்களின் வாக்குகளை வாங்கியே கொழும்புக்குப் போன தமிழ் அரசியல்வாதிகள் சிலர், இனப்படுகொலையில் ஈடுபட்ட படையினரையும் ராஜபக்சக்களையும் காப்பாற்றத் தலைகீழாக நின்றார்களே, அந்தத் துரோகத்தைத்தான் நம்மால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவர்களது பெயர்ப்பட்டியல் சுமந்திரனிலிருந்து ஆரம்பிக்கிறது. 

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு நீதி கேட்க தொடர்ந்து போராடிவருகிற புலம்பெயர் உறவுகளிடம் ‘இன அழிப்பு - என்கிற வார்த்தையை பாவிக்காதீர்கள்… போர்க்குற்றம் என்று குறிப்பிடுங்கள்’ என்று, பறந்து பறந்து பிரச்சாரம் செய்த சட்டத் தரணி அவர். பாம்பைப் பாம்பென்று சொல்லாதீர்கள், பல்லியென்று சொல்லுங்கள் - என்கிற நச்சுப்  போதனைக்காக அவர் வெட்கப்படவேயில்லை.

சுமந்திரன் போன்றவர்களின் அந்த விஷமப் பிரச்சாரத்துக்கான ‘ரோட் மேப்’ ராஜபக்சக்களால் போட்டுத்தரப்பட்டது என்பதை அப்போதே கணிக்க முடிந்தது. அது, ஓர் இன அழிப்பைப் போரென்று சித்தரிப்பதற்கான பம்மாத்து வேலை.  முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த உறவுகளின் உடல்களைத் தோண்டியெடுத்துத் தூக்கில் போட மேற்கொள்ளப்பட்ட மோசடி. சுமந்திரன் போட்ட அதே அழிவுப் பாதையில்தான் இப்போது பயணம் செய்கிறார், சென்னையில் படுகொலை செய்துவிட்டு,சிங்கள அரசியல்வாதிகளின் தயவில்  இலங்கையில் பதுங்கியிருக்கிற  திருவாளர் டக்ளஸ் தேவானந்தா. 
சுமந்திரனும் டக்ளஸும் வேறுவேறல்ல! இரண்டும் சிங்களக் குட்டையில் ஊறிய மட்டைகள். போர்க்குற்றம் என்று சொல்லும்படி போதித்த சுமந்திரனின் தயவில் வண்டி ஓட்டுகிறார் டக்ளஸ். அவர் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும், சுமந்திரன் என்கிற விஷத்தில் தோய்த்தெடுக்கப்பட்டது. 

விடுதலைப் புலிகளுக்குப் பொதுமன்னிப்பு கொடுப்பதைப் போல், ராணுவத்துக்கும் பொது மன்னிப்பு கொடுக்க வேண்டும் - என்பது திருவாளர்  டக்ளஸின் கோரிக்கை. இப்படியெல்லாம் டக்ளஸைப் பேசவைப்பவர் சுமந்திரன் தான் என்பது, தெளிவாகத் தெரிகிறது. அவர்  வசனத்தைத் தான், இவர் பேசுகிறார். தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்த விடுதலைப் புலிகளையும், தமிழின அழிப்பில் வெறி கொண்டிறங்கிய சிங்களப் படைகளையும் ஒரே தட்டில் நிறுத்துப் பார்க்கிற வக்கிர குணம், டக்ளஸ் - சுமந்திரன் கள்ளக் கூட்டணியை அம்பலப் படுத்தியிருக்கிறது. 

சிங்கள எஜமானர்களின் தயவைப் பெறுவதற்காக, மானம் மரியாதையையெல்லாம் தியாகம் செய்தவர்கள் இவர்கள். சொந்த மக்களுக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயங்காத நிகரற்ற  போராளிகளான  விடுதலைப்புலிகளின் பெயரை உச்சரிக்கக் கூட இவர்களுக்குத் தகுதியில்லை. இன்றைய சூழலில், 1987 ஆகஸ்ட் நான்காம் தேதி சுதுமலையில் பிரபாகரன் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை, இந்த மேதாவிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டியது அவசியம். பிரபாகரன் என்கிற அந்தப் போராளித்தலைவன், கையைக் காலையெல்லாம் ஆட்டி உணர்ச்சிபொங்க ஆவேசத்துடன் பேசுகிற மேடைப் பேச்சாளனாக ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால், ஆகஸ்ட் 4 சுதுமலை உரை, ஒரு தலைவன் எப்படிப் பேச வேண்டும் என்பதற்கான இலக்கணமாக இருந்தது. 

‘எமது மக்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் சேகரித்த ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கிற இந்தக் கணத்திலிருந்து, எமது மக்களைப் பாதுகாக்கிற பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்’ என்கிற  வார்த்தைகள், வேலுப்பிள்ளை பிரபாகரனை, ஒரு ஆகச்சிறந்த ராஜதந்திரியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அறிமுகப்படுத்தும். 

அந்த வார்த்தைகள், இளம் வயதிலேயே அரசியல் முதிர்ச்சி பெற்ற ஒரு நேர்மையான மனிதனின் இதயத்திலிருந்து வெளிப்பட்டவை. சொந்த மக்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்ட அவன், சுதுமலை மேடையில் மனம் திறந்து பேசினான். ஒளிவுமறைவில்லாமல் பேசினான். உள்ளதை உள்ளபடி பேசினான். 

அதனால்தான், அந்த மனிதன் கிளிநொச்சியிலிருந்து வெளியேறியபோது லட்சக்கணக்கான மக்களும் அவனுடன் வெளியேறினார்கள். ராமன் இருக்கிற இடம் அயோத்தி - என்கிறது ராமாயணம் என்கிற அழகான கதை. அதை நிஜத்தில் நிரூபித்தவர்கள், லட்சக்கணக்கான தமிழீழ மக்கள்! பிரபாகரன் இருக்கிற இடம்தான் தமிழீழம் என்று அந்தத் தலைவனைப் பின்தொடர்ந்தனர். 

புலிகளிடம் ஆயுதங்கள் இருந்த வரை தமிழீழ மக்கள் பாதுகாப்பாக  இருந்தனர். சிங்கள வெறியர்கள் அவர்களை நெருங்க முடியவில்லை. அதனால்தான், புலிகளை நிராயுதபாணிகளாக ஆக்கத் தலைகீழாய் நின்றது சிங்களப் பேரினவாத அரசு. அவர்களுக்கு ஆயுதம் வருகிற வழிகள்  இந்தியா போன்ற அண்டை நாடுகளால் அடைக்கப்பட்டன. இது, வரலாறு தெரிவிக்கிற உண்மை. 

நிராயுதபாணிகளாய் நின்ற சில ஆயிரம் போராளிகளுக்கும், பேரழிவு ஆயுதங்களுடன் இருந்த லட்சக்கணக்கான படையினருக்கும் நடந்தது போரென்று யாராவது சொன்னால், அவர்கள் மன நலன் குன்றியவர்களாக இருக்கவேண்டும், அல்லது, சுயநலன் கூடியவர்களாக இருக்க வேண்டும். இந்த இரண்டில் சுமந்திரனும் டக்ளஸும் எந்த வகையறா என்பது தெரியவில்லை. ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது…. சுமந்திரன் Agent Number ONE என்றால், டக்ளஸ் தான் Agent Number Two. 

2009-ல், சிங்கள ராணுவத்தின் பேரழிவு ஆயுதத் தாக்குதல்களிலிருந்தும், விமானக் குண்டுவீச்சிலிருந்தும், கொத்துக் குண்டுகளிலிருந்தும் லட்சக்கணக்கான தமிழீழ உறவுகளைக் காப்பாற்றியது, சுமந்திரன்களோ  டக்ளஸ்களோ இல்லை. சொற்ப ஆயுதங்களுடன் முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்ந்துகொண்டிருந்த போராளிகள் தான்,  தங்களை நேசித்துப் பின்தொடர்ந்த லட்சக்கணக்கான உறவுகளைக் காக்க ரிஸ்க் எடுக்க வேண்டியிருந்தது. அதற்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டியிருந்தது.

பெரிய அளவில் ஆயுதங்களும் இல்லை, போதிய அளவு உணவுப் பொருட்களும் இல்லை. அப்படியொரு கையறு நிலையிலும், சொந்த மக்களைப் பாதுகாக்கிற கடமையை நிறைவேற்ற பிரபாகரனின் தோழர்கள்   தவறவில்லை. பதுங்கு குழிகளில் மக்கள் முடங்கிக் கிடந்த அந்த இருண்ட காலத்தில், வயிற்றுக்கு உணவின்றி குழிகளுக்குள் துடித்த மழலைச் செல்வங்களைக் காப்பாற்றக் களமிறங்கினார்கள் அவர்கள்.அது, ஒரு குழியிலிருந்து இன்னொரு குழி என்று, அச்சத்திலும் துயரிலும் பசியிலும் வாழ்க்கை நகர்ந்த   நாட்கள். குழியிலிருந்து ஒரு தலை வெளியே தெரிந்தால் கூட விமானங்கள் குண்டுமழை பொழியும். பதுங்கு குழியே சவக்குழி ஆகிவிடும். அந்த நிலையிலும், விமானக் குண்டுவீச்சுக்கு அஞ்சாமல், குழிகுழியாகத் தேடிச்சென்று, உள்ளேயிருந்த குழந்தைகளுக்குக் கஞ்சி ஊற்றிய ஒரே இயக்கம், உலக வரலாற்றிலேயே விடுதலைப் புலிகள் இயக்கமாகத்தான் இருக்கும். 

ஒரு அரசாங்க ஏஜெண்டின் கடமையை நிறைவேற்றி எஜமானர்களிடம் நல்ல பெயரெடுக்க நாடு நாடாகப் பறந்த சுமந்திரன் போன்றவர்களையும், குழி குழியாகத் தேடிச் சென்று குழந்தைகளுக்குக் கஞ்சி ஊற்றுகிற கடமையில் ஈடுபட்டிருந்தபோது விமானக் குண்டுவீச்சில் உயிரிழந்த எங்கள் விடுதலைப் போராளிகளையும், இந்தத் தருணத்தில்  ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இந்த அற்பப் பதர்களுக்கும், அந்த அற்புதப் பிறவிகளுக்கும் இருக்கிற வித்தியாசத்தை நாம் எந்தக் காலத்திலும் மறந்துவிட முடியாது. இதையெல்லாம் நாம் மறந்திருப்போம் என்று நினைத்து, டக்ளஸ் என்கிற கொலைக் குற்றவாளி ‘புலிகளுக்குப் பொதுமன்னிப்பு’ என்று பிதற்றுவது, சுயநல வெறி ஒரு மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கும் என்பதற்கான நிகழ்காலச் சான்று. 

தாயகத்திலிருக்கும் தமிழ் மக்களோ, புலம்பெயர் உறவுகளோ, தமிழ்நாட்டுத் தமிழர்களோ, போர்க்குற்றம் என்கிற போலி வார்த்தையை எப்போதாவது ஏற்றுக் கொண்டிருக்கிறோமா? ‘புலிகளுக்குப் பொதுமன்னிப்பு தரவேண்டும்’ என்று என்றைக்காவது கேட்டிருக்கிறோமா? 

நாம் கேட்பது, சர்வதேச விசாரணை. இன அழிப்பில் ஈடுபட்ட இலங்கைப் படையினர் மீதும்,  உத்தரவிட்ட அதிகாரிகள் மீதும், பக்கச் சார்பற்ற  விசாரணை தேவை என்பது மட்டும்தான், கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக நமது கோரிக்கையாக இருக்கிறது. ஒரு குற்றவாளி தன்னைத்தானே எப்படி விசாரித்துக் கொள்ள முடியும் என்கிற நியாயமான கேள்வி நம்முடையது. 

‘போர்க்குற்ற விசாரணை சர்வதேசத்தின் கைக்குப் போனால், விடுதலைப் புலிகள் கூட விசாரிக்கப்படக் கூடும்  என்று சுமந்திரன்கள் பீதி கிளப்பியபோதுகூட, நாம் பின்வாங்கவில்லை. சர்வதேச விசாரணை தான் வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தோம், இருக்கிறோம். புலிகளின் அர்ப்பணிப்பை முற்றுமுதலாக அறிந்திருப்பதால், சுமந்திரன்களின் பூச்சாண்டியை நாம்  பொருட்படுத்தவில்லை. மடியில் கனம் இல்லாதவர்களுக்கு, வழியில் எதற்காக பயம்?


முதலில் சுமந்திரனை ‘போர்க்குற்றம்’ என்று பேசவைப்பது, அடுத்து  டக்ளஸை ‘பொதுமன்னிப்பு’ என்று உளற வைப்பது - என்பதெல்லாம் சிங்களப் பேரினவாதத்தின் அஜெண்டா. இந்தத் தகிடுதத்தத்துக்கெல்லாம் தமிழினம் துணைபோகாததால்தான், இப்போது மாற்றிப் பேசுகிறது இலங்கை. ‘சர்வதேசப் பொறிமுறையெல்லாம் இலங்கை அரசியலமைப்புக்குச் சரிப்பட்டு வராது’ என்று வியாக்கியானம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

நீதியும் நீதிமறுப்பும் ஒன்றல்ல. ஆனால், அந்த இரண்டின் விளைவும் ஒரே மாதிரியானது. மனித உரிமைகள் ஆணையரகம் சொல்கிற 58 அதிகாரிகளிலிருந்து  விசாரணையை  ஆரம்பித்தால், மேலதிகமாக யார் யார் குற்றவாளி என்பதை அந்த 58 பேரே போட்டுக் கொடுத்து விடுவார்கள்..

அதன்மூலம் மேலும் பல குற்றவாளிகள் விசாரணை வலயத்துக்குள் வருவார்கள். அவர்கள் மூலம் கூடுதலாக மேலும் பலர்… மேலும் பலர்… என்று அந்த வலயம் பெரிதாகிக் கொண்டே போகும். சிங்கமாவது ரத்தமாவது? அதெல்லாம் எடுபடாது. நான் உள்ளே நீ வெளியேவா…… என்கிற ஆத்திரம், இதுபோன்ற குற்றவாளிகளின் அடிப்படைக் குணம். 

சர்வதேசப் பொறிமுறை மூலம் பாரபட்சமற்ற விசாரணை நடந்தால், ‘நடந்தது போர்க்குற்றம் மட்டுமல்ல…. இன அழிப்பு…..’ என்கிற நிதர்சனம் நிச்சயம் வெளிப்படும். சுமந்திரன்களாலோ டக்ளஸ்களாலோ அதைத் தடுத்து நிறுத்த முடியாது. இன அழிப்பு தான் - என்பது அம்பலமானபிறகு, கொல்லப்பட்ட இனமும் கொன்ற இனமும் ஒரே கூரையின் கீழ் இணைந்து வாழ்கிற  வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.  இரண்டும் தனித்தனி நாடாவதை யாரும் தடுக்க முடியாது. சர்வதேசப் பொறிமுறையுடன் விசாரணைகள் நடந்தால், இதுதான் அதன் அதிமுக்கியப் பின் விளைவாக இருக்கும்.


 - புகழேந்தி தங்கராஜ்


பகுதி இரண்டு தொடரும் ...