இவர்கள் நீள்பயணத்தில் நிலைபேறடைந்தவர்கள் - ஆதிலட்சுமி சிவகுமார்.

breaking

நீள்பயணத்தில் நிலைபேறடைந்தவர்கள். 



“அக்கா... எப்பிடி இருக்கிறீங்களக்கா.... “ 

ஒரு வயலினின் இசையைப்போல அவள் குரல் காதுகளில் மெதுவாக இறங்கி மனதை வருடும். 

திரும்பினால் அவளுடைய நீளமான விழிகளும் உதடுகளும் அளந்து  புன்னகையை உதிர்க்கும். ஒல்லியான உடல்வாகுடையவள் நடந்து வரும்போது காற்றில் மிதந்து வருவதுபோலிருக்கும்.  

சிலவேளைகளில் முதுகில் அவள்சுமந்து வரும் கருவிகளைப் பார்க்கும்போது “ ஐயோ பாவமே... “ என்று மனது துடித்துப்போகும். சுமக்கமுடியாத அந்தச் சுமையைத் தோளிலிருந்து இறக்கிவிட்டு, மிக இயல்பாக, 



“ என்னக்கா.... இதெல்லாம் ஒரு பாரமே இல்லை... “ என்று சொல்லும் அவளின் தோள்வலி என்மனதிலும் வலியாகமாறும். 

எவ்வளவு நிதானமானவளோ அவ்வளவுக்கு அவள் கண்டிப்பானவள் என்பதையும் நான் அறிவேன். 

எந்த நிகழ்வாயிருந்தாலும் எவ்வளவு சனக்கூட்டமாக இருந்தாலும் தன் பணிக்கு நடுவே ஒருமுறையாவது தேடிவந்து கதைத்துவிடுவாள். 

ஒருமுறை செய்துமுடிக்கவேண்டிய பணியில் தனியாகவே இயங்கிக்கொண்டிருந்தவளைப் பார்த்து, 

“ என்ன இன்றைக்கு தனிய வந்திருக்கிறியள்.... “ ஒருமுறை உதவியாளற்று பணிசெய்துகொண்டிருந்த அவளிடம் கேட்டேன் 

“ அதக்கா... என்னோடை நிக்கிற பிள்ளை விடுப்பில வீட்ட போட்டுது.... “

“ அப்ப... நீங்கள் எப்ப விடுப்பில வீட்ட போறது..... “ 

ஒன்றும் சொல்லாமல் சிரித்தவளின் சிரிப்பில் நீண்டகாலம் வீட்டுக்காரர்களை பார்க்க முடியாததன் வலி வழிந்தது. 

அவளுடைய பெற்றோர், சகோதரர்கள் திருகோணமலை நகரில் இருந்து மிகத்தொலைவில் இருந்தார்கள். அவளைப் பார்க்க வருவதென்பது சாத்தியப்பட்டதில்லை. அவளும் பெரும் பணிகளில் ஆழ்ந்திருந்ததால், அவர்களைப் பற்றிச் சிந்தித்திருப்பாளோ என்னவோ....

எங்கள் வீடுதாண்டி மாங்குளப்பக்கமாக அவளுக்கு அடிக்கடி வேலையிருக்கும். தன்னுடைய உந்துருளியில் தொலைவுநோக்கிப் பறக்கும் தேவதையாய் அவள் பறந்து போவாள். அவளுக்கு ஆயிரம் வேலைகள். 

“ அக்கா போறா.... இதிலை ஒருக்கா நிற்பாட்டி... கதைக்காம போறா.... நான் அவ்வோட இனிக் கதைக்கமாட்டன் “ 

ஏமாற்ற உணர்வோடு குறைப்பட்டுக்கொள்வான் எங்கள் மகன். 


ஒருமுறை தொழிற்கருவிகள் ஏதுமின்றி வீட்டுக்கு வந்திருந்தாள். மகனுடன் விளையாடினாள். செல்லமாக அவனுடன் சண்டைபோட்டாள். அவனை உசுப்பிக் கோபமூட்டினாள். அவளுக்கு இளையவர்களை அவ்வளவுக்குப் பிடிக்கும். 

ஒருமுறையும் இல்லாதவாறு ஆற அமர இருந்து பேசினாள். எளிமையாகவும், அமைதியாகவும், சலனமற்றும் நகரும் நீரோடையைப்போல இருந்து, தன்நேரம் வந்ததும் விடைபெற்றுப் போனாள். 

பேச்சுவாக்கில் தன் கும்பத்தினர் பற்றி அவள் சிவற்றைச் சொன்னாள். தன்னை ஒரு மருத்துவராக்கும் எண்ணம்கொண்டிருந்த  அப்பாவின் கனவை சுக்குநூறாக்கிவிட்டு வந்ததை நினைவுபடுத்திச் சொன்னாள். அப்பா பாரிசவாத நோய்க்கு ஆளாகியிருப்பது அவளுக்கு வருத்தமாயிருந்தது. 

அவளுடைய உதவியாக இருந்த பிள்ளை செய்த சிறுதவறுக்கான தண்டனையாக அவள் இரண்டுவாரங்கள் பணியின்றி விடப்பட்டிருந்தாள் என்றும், அந்த இடைவெளியில் தான் ஒருபகல் முழுவதும் என்னுடன் வந்து நின்றாள் என்றும் பின்னர் அறிந்தபோது துடித்துப்போனேன். 

நங்கூரமில்லாத படகைப்போல வாழ்க்கை முழுக்க அலைந்து திரியும் மனிதர்களாகச் சபிக்கப்பட்ட காலத்தை நொந்தபடி இருந்தபோது, 

“ அக்கா.... வீட்டிலையோ நிக்கிறியள்..... உங்களிட்ட ஒரு உதவி எனக்கு  வேணும்.... “ 

பீடிகையோடு வந்தாள். 

“ எனக்குத் தெரியும் ஏதோ கதை இல்லாட்டி கவிதையாக இருக்கும்..... “ என்றேன். 


அன்றும் நிறைய நேரம் இருந்தாள். மனம் விட்டு, பலவற்றை அவள் என்னிடமும் நான் அவளிடமும் பேசினோம். அவள் பேசியவை எல்லாம் மனதில் முட்டிநிற்கின்றன. இடர்கடந்து இடர்கடந்து எழுச்சியுற்ற அவளைப்போன்ற பலரை நான் அறிவேன்.   

அவளுடைய பேச்சில் சிலிர்ப்பும் இருந்தது. பெருமூச்சும் இருந்தது. உறுதியும் இருந்தது. 

இரவிரவாக கண்விழித்து கடமை செய்யும் அவளின் கண்ணகளின் கீழே கருவளையம் உருவாகியிருந்தது. கொஞ்சம் மெலிந்தும் போயிருந்தாள். 

“ எல்லாத்துக்கும் எங்களுக்கு அண்ணை இருக்கிறாரக்கா..... எங்களை மற்றவை எதுகும் பழிக்கவோ இழிக்கவோ விடமாட்டார்...... “ என்றாள், எங்கோ பார்த்தபடி. 

ஒரு நட்சத்திரம் நெருப்புத்தண்டமாகுவதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. 

அப்போது அவளுடைய வயதுடைய சிலருக்கு திருமணம் நடந்து கொண்டிருந்தது.  அங்கேயும் தோளிற் சுமந்த தொழிற் கருவியோடு அவள் கடமையில் நின்றாள். 

“ என்ன உங்களுக்கு இன்னும் இப்பிடி ஒரு எண்ணம் தோன்றேல்லையோ.... “ என்று பலநாள் நினைத்திருந்ததை ஒருவாறு கேட்டுவிட்டேன். 

அவள் சன்னமாகப் புன்னகைத்தாள். அந்தப் புன்னகையில் நிறைந்திருந்த பதில்களோ ஏராளம். 


“ அக்கா வாங்கோவன் அந்த பங்கரடியிலை இருந்து கதைப்போம்...... “ என்று அழைத்தாள். சற்றே தூரத்தில் சிலபனைமரங்களுக்கு நடுவே ஒரு பதுங்குகுழி அமைந்திருந்தது. 

மரக்கட்டைகள் போட்டு, அழகாக மூடப்பட்ட பதுங்கு குழியின் மேல் ஏறி வசதியாக அமர்ந்து கொண்டோம். அங்கேயிருந்து திருமணமண்டபத்தைப் பார்க்க முடிந்தது. ஆனால் அங்கிருந்து பார்த்தால் எங்கள் இருவரையும் தெரியாது. 

“ எனக்கும் ஒரு  காதல் இருந்ததக்கா.... பிறகு நான் தான் திருமணத்துக்கு மறுத்துவிட்டன்...... “ என்றாள். 

“ ஏன்..... திருமணம் உங்கட பணிக்கு தடையாக இராது.... எத்தினைபேர் திருமணத்துக்கு பிறகும் வேலை செய்யினம்....... ஏன் பயப்பிடுறியள்.....“ 

“ இல்லையக்கா.... அவர் என்ர மாமான்ர மகன்... எனக்கு சொந்த மச்சான்... இரண்டுபேரும் விரும்பித்தான் இருந்தனாங்கள்..... சமாதான காலத்தில ஒருக்கா என்னைப்பார்க்க வந்தவை.... அவையள் கேட்ட நிபந்தனை எனக்கு வெறுப்பாகிப் போச்சு....... “ “............................ “ 

“ இயக்கத்தில இருந்து விலத்தினா கலியாணம் செய்யலாம் எண்டினமக்கா.... “ 

தொலைவில் தெரியும் புள்ளிவெளிச்சத்தை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். 


“ போராட்டத்தில இருந்து விலத்தினா தான் காதல் திருமணத்திலை இணையலாம் எண்டால்.... எனக்கு அந்தக் காதலும் தேவையில்லை.... கலியாணமும் தேவையில்லை. இவ்வளவு காலத்திலை என்னோட இருந்து எத்தினை பிள்ளையள் வீரச்சாவடைஞ்சிட்டினம் .... அதுகளின்ர நம்பிக்கையைச் சிதறடிச்சு.... நான் ஒருக்காலும் எனக்கெண்டு சுயநலமாக வாழமாட்டன் அக்கா......  “ என் கையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டு சொன்னாள். 

மஞ்சளான மென் விளக்கின் ஒளியில் மண்டபத்தில் நடமாடும் கரிய மனித உருவங்களை நான் பார்த்துக்கொண்டே அமைதியாக இருந்தேன். 

“ அக்கா... நான் அங்காலை இங்காலை எண்டு எங்கை வேலையில நிண்டாலும் அடிக்கடி உங்களை நினைக்கிறனானக்கா.... ஏனெண்டு எனக்கும் விளங்கிறேல்லை....... “ 



அந்தச் சந்திப்பின் பின்வந்த நாட்களில் போர் உச்சங்கொண்டு, ஊர்ஊராகத் துரத்தத் தொடங்கிவிட்டது. எங்கே செல்கிறோம் என்பது தெரியாமல் எல்லாத்திசைகளிலும் எம்சனங்கள் தலையில் மூட்டைகளைச் சுமந்தபடி நடந்தனர். 

சனங்களின் வாழ்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடவேண்டும் என சாவு சுருக்குக்கயிற்றுடன் அலைந்தது. நான் அவளை ஒருமுறை பார்க்க விரும்பினேன்.  எந்தப் புள்ளியிலும் அவள் தென்படவே இல்லை. எல்லா நட்சத்திரங்களையும் தன்னுள்ளே ஈர்ப்பதுபோல வானம் கவிழ்ந்து கிடந்தது. 

வெள்ளம் வடிந்த வாய்க்காலில் ஆங்காங்கே துருத்தியபடி தெரியும் கற்களைப்போல, எஞ்சியவர்களில் அவளையும் தேடினேன். எவருக்கும் எதுவும் தெரியவில்லை. தடுப்பு முகாமிலிருந்து வந்தவர்களையும் கேட்டுப் பார்த்தாகிவிட்டது. 



“ புதுக்குடியிருப்பில கிபிர் குண்டுகள் போட்டுக்கொண்டிருந்த நேரம் அக்கா அங்க நிண்டவ.... “ என்கிறாள் ஒருபெண். 

“ அவவை எனக்கு நல்லாத் தெரியும்... ஒருக்காலும் ஆமியின்ர இடத்துக்குள்ள அவ போயிருக்கமாட்டா....தன்ர முடிவை எடுத்திருப்பா  “ என்கிறாள் இன்னொருபெண். 

“ இரட்டை வாய்க்காலடியிலை இன்னொரு பிள்ளையோடை அக்கா போய்க்கொண்டிருந்தவ..... எல்லா இடமும் செல் விழுகுது..... கவனம்.... எண்டு சொல்லிப்போட்டுப் போனவ....... “ 

'கடைசிநேரம் வரைக்கும் அக்கா சீருடையோடைதான் நிண்டவ.... பிள்ளைகளை கவனம் கவனம் எண்டு சொன்னவ.... எங்களோடை வாங்கோ அக்கா எண்டு கேட்டனாங்கள்.... அவ வரேல்லை.... பிறகு என்ன நடந்ததெண்டு தெரியாது... ' என்று கண்கலங்கினாள் அவளோடிருந்த இளம்பெண்..


அவளைப்பற்றி தேடி விசாரிக்கும் போதெல்லாம் இப்படியாகத்தான் பதில் கிடைக்கிறது. 

அவள்மட்டுமல்ல.... அவளைப்போல பலநூறுபேரை இன்னமும் தேடியபடிதான் இருக்கிறோம். எல்லோரையும் தொலைத்தவலி என்பது ஆறாத வடுவாகவல்ல வலியாகவே இருக்கிறது. 

தாய்மண்ணுக்காய்.... தாய்மண்ணின் உறவுகளுக்காய்.... தாம் நேசித்த... தம்மை நேசித்த சனங்களின் நிம்மதியான வாழ்வுக்காய் தம்முடைய நலன்கள் அனைத்தையும் துறந்தவர்கள் இவர்கள். 

“ இவர்களுக்காக என்ன செய்துவிடப்போகிறோம்... “ என்கிற ஆதங்கம் அடிக்கடி என் மனதை அலைக்கழிக்கிறது. கண்ணீர் எமக்குப் பள்ளங்களை ஏற்படுத்த முயற்சிக்கிறது. கடந்துபோன நாட்களின் நினைவுகள் திரண்டு பாரமாக அழுத்துகின்றன. 

எங்களுடனிருந்து...... எங்களுக்காகவே வாழ்ந்து...... எங்கேயோ நாம் தொலைத்துவிட்டவர்களின் நினைவுகள் எம்மைப் பிழிந்துருக்குகின்றன.... என்னைப்போல எத்தனையோ ஆயிரமாயிரம் பேர் அவர்களை எப்பொழுதும் நினைந்து உருகுகிறோமே.... இதுதான் அவர்கள் ஈட்டிச்சென்றிருப்பது. இந்த எண்ணம்தான் விடுதலையை நேசிப்பவர்களை வழிநடத்திச் செல்லும். 

இவர்கள் வெற்றுக் கனவுகளுக்கானவர்களில்லை. உயிரும் உற்ற உணர்வுகளுமாய் எங்களுக்குள் நிறைந்திருக்கும் நிலைபேறடைந்தவர்கள். இவர்கள் எம் உள்ளிருந்து ஏற்படுத்தும் உணர்வுதான் எமக்கான பாதையில்  எம்மை இட்டுச்செல்கிறது. 


தாரகம் இணையத்திற்காக  - ஆதிலட்சுமி சிவகுமார்.