'நாயின் வேலை கழுதையிடம்: PCR பரிசோதனை இராணுத்தின் கைகளில், சுகாதாரத்துறை கண்டனம்

breaking



அனுபவம் வாய்ந்த தொழில் நிபுணர்களுக்கு பதிலாக இராணுவத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றுநோயை கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ள விடயத்தை, யானைக் கால் நோய்க்கு மருந்து கட்டுவதைப்போல் சுகாதாரத் துறை புறந்தள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.


பரிசோதனைகளை மேற்கொள்ள போதுமானளவு பயிற்சி பெற்ற வல்லுநர்கள் காணப்படும் நிலையில், பணியை இராணுவத்திடம் ஒப்படைப்பதன் ஊடாக, பிரச்சினை மேலும் சிக்கலானதாக மாறக்கூடாது என இலங்கை அரச வைத்திய ஆய்வக தொழில்நுட்பவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


“யானைக் கால் நோய்க்கு மருந்து கட்டுவது அல்லது நாயின் வேலையை கழுதை செய்வதை போல, இந்தப் பணியை மிகவும் சிக்கலாக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் பி.சி.ஆர் பரிசோதனையில் ஈடுபடுவோர் குறித்து எந்த கேள்வியும் இல்லை.” என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.


இராணுவம் ஏற்கனவே பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ள விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், இலங்கை அரச வைத்திய ஆய்வக தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.


பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்காலத்தில் இராணுவம் தலையீடு செய்யுமென இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா நவம்பர் 5ஆம் திகதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவத்திற்கு பி.சி.ஆர் இயந்திரத்தை வழங்கியதாகவும், இதற்கமைய பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இராணுவ தளபதி கூறியதாகவும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


இலங்கை அரச வைத்திய ஆய்வக தொழில்நுட்பவியலாளர்களால் மாத்திரமே பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அந்த நிபுணர்களுக்கு மாத்திரமே வைத்தியச் சபையில் சட்டப்பூர்வ அனுமதி காணப்படுவதாகவும் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நாட்டில் இத்தகைய தொழில் வல்லுநர்களுக்கு பற்றாக்குறை, அல்லது பிரச்சினை இல்லையென சுட்டிக்காட்டிய தொழிற்சங்கத் தலைவர், தொழில் வல்லுநர்கள் தங்கள் கடமைகளை தாமாக முன்வந்து, எங்கும், எந்த நேரத்திலும், எந்தவிதமான கொடுப்பனவுகளும் சலுகைகளும் இன்றி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையில் எழுந்துள்ள ஒரே பிரச்சினை பி.சி.ஆர் இயந்திரங்கள் மற்றும் வசதிகள் பற்றியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இயந்திரம் மற்றும் உபகரணங்கள் இல்லாததால் இலங்கை தேசிய வைத்தியசாலை, குருநாகல், களுத்துறை, கேகாலை மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளில் ஆய்வகங்களை அமைக்க அமைச்சு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள ரவி குமுதேஷ், உபகரணக் குறைபாடே இதற்குக் காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


அரச வைத்தியசாலைகளில் பற்றாக்குறை உள்ள பி.சி.ஆர் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்குவதற்கு பதிலாக, வைத்திய பரிசோதனைகளை இராணுவத்திடம் ஒப்படைத்தமை குறித்து தொழிற்சங்கத் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


“இராணுவத்திற்கு வழங்க உபகரணங்கள் காணப்படுமாயின் அதனை வழங்குபவர்களிடம் ஒரு நடைமுறை மாத்திரமே காணப்படும். அதனைத் தேடிக் கொண்டிருப்பதைவிட, சுகாதார அமைச்சின் கீழ் உள்ள முடிந்தவரை ஆதார வைத்தியசாலைகள் வரை சென்று, எந்த ஆய்வகத்திலும் பி.சி.ஆர் பரிசோதனைகளை எளிதாக செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். எங்களுக்கு உள்ள பிரச்சினை என்னவென்றால் பி.சி.ஆர் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் இல்லை”


நாட்டில் பி.சி.ஆர் பரிசோதனைகளில் பற்றாக்குறை இருப்பதாகவும், எனினும் அதனை இராணுவத்திடம் ஒப்படைப்பது ”வேறு கதை” எனவும் குறிப்பிட்டுள்ள அவர், கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.


இராணுவத்தில் வைத்திய ஆய்வக நிபுணர்கள் மற்றும் பட்டதாரிகள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள ரவி குமுதேஷ், பி.சி.ஆர் பரிசோதனைகளை இராணுவம் செய்வதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கையில் திடீர்திடீரென ஏற்படும் மரணங்கள்; திணறும் சுகாதார துறையினர்!

கொரோனாவிற்கு முகம் கொடுக்கும் செயற்பாட்டில், ​​சுகாதார நிபுணர்களுக்கு பதிலாக இராணுவத்திற்கு அதிகாரங்களை வழங்கும் அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் சர்வதேசம் அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.