தடம் அழியா நினைவுடன் … மே 16 - அ. அபிராமி

breaking

சுற்றியெங்கும் பல்குழல் எறிகணைகள் வீழ்ந்து வெடித்த வண்ணமிருந்தன. எதிரியின் நெருக்கம் மிக அருகில் என்பதை வெடித்துச் சிதறும் இரும்புத் துண்டங்கள் புலப்படுத்திக் கொண்டு இருந்தன. அவளது இருப்பிடம் ஆங்காங்கே எறிகணைகள் பட்டு சிதைந்து கொண்டிருந்தாலும்; பலரைத் தாங்கி நிழல் கொடுக்கும் ஆலமரமாய் அது இருந்தது.  அந்த இறுக்கம் நிறைந்த சூழலிலும் தன்னிடம் இருந்த பொருட்களை வைத்து அங்கு இருந்தவர்களுக்கு அவள் சமைத்து வைத்திருந்தாள்.

''அக்கா நல்லாக் களைச்சுப்போய் வந்திருக்கிறீங்கள் முதல் சாப்பிடுங்க..''

அவள் எனக்காக சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தாள்.எனக்கும் பசிக் களைதான். ~கை காலைக் கழுவி விட்டுச் சாப்பிடுவம்| என நினைத்துக் கொண்டு வெளியில்வந்தேன்.

கிணற்றடிப் பக்கமாய் நின்ற பனை மரமொன்று இந்தா விழுகிறன் பிடி என்ற நிலையில் சிதைந்து தொங்கியது.அதுயாற்ற தலையப் பார்த்துக் கொண்டு இருக்கோ தெரியாது. எண்ணிக் கொண்டே 'பைவர்கானில்'  வெட்டிச் செய்த வாளியை எடுத்தேன்.

அதைக்கூட செல் விட்டுவைக்கவில்லை.

''என்ர குஞ்சுகள் எங்க..,

ஐயோ ..

என்ர குஞ்சுகள் எங்க..,

பசிக்கிது எண்டுதானே கேட்டனீங்கள்..

அம்மா ரொட்டி சுடத்தானே வெளியில வந்தனான்..

என்ர செல்லங்களே..பசியோடையே போயிற்றீங்களா.. ''

பக்கத்தில் கேட்ட அந்தக் கதறல் ஏதோ செய்ய கிணற்றில் விட்ட வாளியை வெளியே போட்டுவிட்டு குரல்வந்த பக்கமாய் ஒடிப்போனேன்.

ஓர் இளம்பெண் இரண்டு சிறுவர்களை மடியில் வைத்துக் கதறிக் கொண்டிருந்தாள். குழந்தைகளின் உடல் இரத்தத்தில் தோய்ந்து கிடந்தது. ஒரு குழந்தையின் முகம் பார்க்கக் கூட முடியாதபடி சிதைந்து கிடந்தது.அந்தப் பிஞ்சுகளின் குருதி அந்தத்தாயின் உடலையும் நனைத்திருந்தது.

அந்த இடத்தின் ஆபத்தை உணர்ந்த மக்கள் பக்கத்துக் கொட்டில்களில் இருந்தும் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு எஞ்சிய உயிர்களையாவது காப்பற்றும் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

அவளோடு இருந்த பெண் குழந்தைகளின் தாயை அந்த இடத்தை விட்டு வரும்படி கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

அது அவளின் உறவுக்காரப் பெண்ணாக இருக்கலாம்..

''நான் வரமாட்டன்..சனமே இல்லாத இந்த இடத்தில என்ர பிள்ளைகள தனிய விட்டிட்டு வரமாட்டன்.. அதுகள் பயப்படுங்கள்..நான் இருக்கிற நம்பிக்கையிலதானே அவர் சண்டையில நிற்கிறார்..அவருக்கு நான் என்ன பதில் சொல்லுவன்..நான் வரமாட்டன்..,இவ்வளவு நாளும் பொத்திப் பொத்தி வைச்திருந்திட்டு ஒருநொடிக்க தவற விட்டிட்டனே..''

அந்தப் பெண்;, பிள்ளைகளைப் பறிகொடுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் துடித்துக் கொண்டிருந்தாள்.

பக்கத்துக் கொட்டகைக்குள் இருந்தவர்களால் அவளை அப்படியே விட்டுவிட்டு செல்ல மனம் வரவில்லை.

''தங்கச்சி நிலமையப் புரிந்து கொள்ளுங்கோ.., பிடிவாதம் பிடிக்காதையுங்கோ..,பிள்ளைகள் இனித் திரும்பி வராயினும்.பிள்ளைகள எங்கட பாதுகாப்பகழிக்க போட்டு மூடுவம்..நிற்க நேரமில்லை தங்கச்சி.. எங்களுக்காக களத்தில நிற்கிற அந்த போராளிக்காக இந்த உதவியக் கூட செய்யாமப் போனா எங்கட மனச்சாட்சியே எங்கள மன்னிக்காது..''

அவர்பேச்சோடு நிற்கவில்லை மளமளவென் செயலில் இறங்கினார்.அதற்கு மிஞ்சி அதில் நிற்க முடியாமல் திரும்பினேன்.அதற்குப் பின் யாரால்தான் சாப்பிடமுடியும்;;...?

எறிகணைகள் பட்டு எங்களுக்குப் பக்கத்தில் இருந்த பனங்கூடலும் பொசுபொசுவென்று பற்றி எரியத் தொடங்கியது.அந்தப் பனங்கூடலுக்குள் அடைக்கலம் தேடி இருந்தவர்களின கூக்குரல்களும்,அமளிப்பட்டு மக்கள் வெளியேறும் சரசரப்பும் நெஞ்சை உலுக்கியது.

''நாசமாப் போவாங்கள்.. எங்கள உயிரோட கொளுத்திறாங்களே..இந்த நீரோசையைக் கேட்க யாரும் இல்லையா...'' ஒரு வயதான பெண்மணி தன் இயலாமையை திட்டித் தீர்த்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

எதிரியின் குண்டுமழையையும் மீறி, ஆங்காங்கே கேட்கும் நெஞ்சை உருக்கும் அந்த வெடியதிர்வுகள் என்றென்றும் எம்தேசத்துக்காக,உயிரைவிட மேலாய் நாம் நேசிக்கும் எம் மக்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்பதை சொல்வது போல் இருந்தது. பகை நெஞ்சில் தீயை மூட்டிச் செல்லும் அந்த அக்கினிக் குஞ்சுகள் யாராக இருக்கும்? வெடிசுமந்த பலபேரின் முகங்கள் மனக்கண்ணில் வந்துபோனது.

உள்மனம் பதைபதைத்தது. உட்பகுதிகளுக்குள் இருந்த மக்களெல்லாம் எறிகணை மழையையும் பொருட்படுத்தாது சாரை சாரையாக பிரதான சாலைப் பக்கமாக நகர்ந்து கொண்டிருப்பது,தீயின் பிரவாகத்திலும், பரா ஒளியிலும்; தெளிவாகவே தெரிந்தது.

அங்கிருந்த இன்னுமொரு தோழி அரைப்பாவாடை சட்டை ஒன்றைத் கொண்டு வந்தாள்.

''இதப் கவனமா வைச்சிருங்கோ..''

அவளே எனது உடமைப் பையிலும் வைத்துவிட்டாள். நான் எதுவுமே பேசாது அமைதியாக இருந்தேன். நொடிக்கு நொடி நிலமை மாறிக் கொண்டிருந்தது.கடல் பக்கம் இருந்தும் அடிவரத் தொடங்கியது.

'கலீர்' என்ற சத்தத்தோடு தகரத்தில்பட்டுத் தெறித்தது எறிகணைத் துண்டொன்று.

''அம்மா..,என்ர கையெரியுது..நான் காயப்பட்டிட்டன்...''

அவளின் சகோதரியின் குரல். ஓடிப்போய் பார்த்தபோது அவளது கையில் இருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது.அந்தநொடி அவள் துடிதுடித்துப் போனாள்.அவளது குருதியைத் தடுத்து கட்டுப்போட மட்டுமே அப்போதைக்கு முடிந்தது. தனது சகோதரியை பாதுகாப்பாக நம்பிக்கையான ஒருவரோடு அனுப்புவது என முடிவெடுத்தாள்.

அந்த இடமும் பாதுகாப்பற்றதாகவே மாறிக் கொண்டிருந்தது.இராணுவம் மிக அருகில் என்பதை துப்பாக்கி ரவைகள் உறுதிப்படுத்தின. அவளது இடத்தில் இருந்தவர்களும் வெளியேறத் தொடங்கினார்கள்.அதற்கு பிறகு அங்கு இருப்பது நல்லதல்ல என்பதைப் புரிந்து கொண்டு நாங்களும் நகரத் தொடங்கியிருந்தோம்.

அந்த இடத்தை விட்டுப்பிரதான வீதிக்கு ஏறினோம். தெருவெங்கும் மக்கள் நிறைந்திருந்தார்கள். அவர்களுக்கு அடுத்தகட்டம் செல்வதற்கான இடமில்லை. ..

விழுப்புண் தாங்கியவர்கள் அனைவரும் அந்த வீதியின் முன்பக்கமாக கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள். அவர்களின் வேதனை ஒலி ..

விழுப்புண்களில் இருந்து வரும் வாடை ..இறந்தஉடலங்களில் இருந்து வரும் நாற்றம்..

புதைக்கவும் முடியாமல் விட்டுவரவும் மனமின்றி தவிக்கும் அந்த உறவுகளின் தவிப்பு..எல்லாவற்றையும் இரத்தம் சொட்டும் என் விழிகள் பதிவாக்கிக் கொண்டு வந்தன.

நாங்கள் அந்த வீதியைக்கடந்து நந்திக்கடல் பக்கமாக இறங்கினோம். வழமைக்கு மாறாகஇரத்தச் சகதியில் எம் இனம் நனைந்து கொண்டிருப்பதைப் பார்த்துப் பொறுக்காத வானமகள் கண்ணீர் விட்டழுதாள். வீதிகளிலும,; வெட்டவெளிகளிலும், தரப்பால் கொட்டகைகளிலும்,திறந்த காப்பகழிகளிலும் எல்லாம் இழந்து உயிர்கூடுகளை மட்டும் சுமந்து திரிந்தவர்களை இயற்கையும் வஞ்சித்தது.

பொழுது வெளுக்கத் தொடங்கியிருந்தது. சீருடையணிந்த போராளிகள் அணியாக நந்திக்கடல் பக்கமாக நகர்ந்து கொண்டிருந்தனர். விழுப்புண்தாங்கியவர்களை செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக எடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அரசல் புரசலாக செய்திகள் பரவத் தொடங்கியிருந்தன. அதனால் விழுப்புண் தாங்கியவர்கள் அனைவருமே வட்டுவாகல் வீதியடிக்கு கொண்டுவரப்பட்டிருந்தார்கள்.அங்குதான் அவளும் தனது சகோதரியைப் பாதுகாப்பாகக் விட்டு விட்டு வந்திருந்தாள்.

இப்போதுநந்திக்கடற்கரை பக்கமாக நாங்கள் வந்துகொண்ருந்தோம்;.அந்தப்பகுதியிலும் பெரும் திரளான மக்கள் இருந்தனர். கடற்கரைக்குச் செல்லும் வீதி அருகில் யாரோ இருந்து விட்டுப்போன தடயங்களோடு ஒரு காப்பகழி வெறுமையாகக் கிடந்தது.அதுவே எங்களின்; பாதுகாப்பிடமாக இருந்தது. நாங்கள் நாலுபேர் அதற்குள் இருந்தோம். அதிலிருந்து பார்த்தால் ஓரளவுக்கு எல்லா இடத்தையும் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஆங்காங்கே சிறியசிறிய படகுகள் மரங்களின் கீழ் மறைப்பாக விடப்பட்டிருந்தன.

தெரிந்த பல போராளி குடும்பங்களும் அந்தப்பகுதியில்தான் இருந்தார்கள். வானத்தில் வண்டு ஓயாது சுற்றிக் கொண்டே இருந்தது.எறிகணைகளும் சரமாரியாக வீழ்ந்து கொண்டே இருந்ததன. வண்டைப் பார்த்துக் கொண்டிருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதுவும் செய்யமுடியாது.வண்டுக்கு உருமறைப்புகள் செய்தபடி சிலர் நடமாடினர்.

எனது தொலைத்தொடர்புக் கருவி அழைத்தது.நேற்றில் இருந்து அந்த அழைப்புக்காகவே காத்திருந்த நான் கொஞ்சம் உற்காகமாகவே புறப்பட்டேன்.இனி எனது பணிக்குத் தேவை ஏற்படாது.என்னிடம் இருக்கும் விபரங்களையெல்லாம் கொடுத்துவிட்டு நான் எங்களணிகளோடு இணைந்து கொள்ளலாம்.

ஆனால்,அன்று எனது பொறுப்பாளர் அதிக நேரம் பேசவில்லை. எனக்கான அடுத்த கட்ட பணி என்ன என்பதை அவர் என்னிடம் கூறியபோது நான் அதிர்ந்து போயிருந்தேன்.

சொஞ்சம் கூட அதை நான் எதிபார்க்கவில்லை. எல்லாப்போராளிகளுக்கும் இருக்கும் சராசரிக் கனவுதான் என்னிடமும் இருந்தது.'இறுதிவரை நின்று போராடுவது முடியாது என்ற நிலை வரும்போது இயக்க மரபு காப்பது.'

அந்த நிலைப்பாட்டில்தான் நானும் உறுதியாக இருந்தேன்.

ஆனால் நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத இன்னுமொரு பணியை அன்று அவர் என்னிடம் தந்திருந்தார்.

''இந்த மண்ணும் எங்கட மக்களும் தாங்கிற வலிகள,எங்கட விடுதலைப் போராட்ட வரலாறுகள, மாவீரர்களின்ர அர்ப்பணிப்புக்கள நீங்க பதிவு செய்யவேணும்..உங்களால அதச் செய்ய முடியும்..நீங்க செய்யுங்க..,இது அடுத்த தலைமுறைக்கான கடமை..''

மறுத்துப் பேசக்கூட இடமில்லாமல் நான்விரும்பியோ விரும்பாமலோ அந்தக் கட்டளைக்குக் கட்டுப்பட்டிருந்தேன்.என்னிடம் இருந்த துப்பாக்கி,தொலைத்தொடர்புக்கருவி இரண்டையும் அங்கேயே ஒப்படைத்துவிட்டு இறுகிப்போன முகத்தோடு வெளியேறினேன்.இனி யாரும் தொலைத் தொடர்புக் கருவியில் என்னை அழைக்க மாட்டார்கள். நினைத்துப் பார்க்கவே முடியாமலிருந்தது.

நாளை தொடரும்… தடம் அழியா நினைவுடன் … மே-13 – பகுதி 1 தடம் அழியா நினைவுடன் … மே-13 – பகுதி 2 தடம் அழியா நினைவுடன் … மே-13 – பகுதி 3 தடம் அழியா நினைவுடன் … மே-14 – பகுதி 1 தடம் அழியா நினைவுடன் … மே-15 – பகுதி 1 தடம் அழியா நினைவுடன் … மே-15 – பகுதி 2 தடம் அழியா நினைவுடன் … மே-15 – பகுதி 3
 தாரகம் இணையத்திற்காக அ. அபிராமி