எமது விடுதலைப் போராட்டம் ஓய்ந்து போகப்போவதில்லை! தடம் அழியா நினைவுடன் … மே 16 - பகுதி 2 அ. அபிராமி

breaking

வட்டுவாகல் வீதிக்கு ஏறினேன்.ரவைகள் சீறிச்சீறி வந்து கொண்டிருந்தன. வீதியின் மருங்கில் உழவு இயந்திரப் பெட்டிகளில் சாவடைந்தவர்களின் உடலங்கள்.அந்தப் பெட்டிகளின் கீழே விழுப்புண் தாங்கியவர்களுமாய்ப் பலர் கிடந்தனர். நெஞ்சே பற்றி எரிந்தது.

''தண்ணி...தண்ணி..''

ஈனக்குரலில் யாரோ தண்ணீர் கேட்டுக் கொண்டிருந்தார்கள். திரும்பிப் பார்த்தேன்.

உழவு இயந்திரப் பெட்டிக்குக் கீழே இருந்துதான் அந்தக் குரல் வந்தது. ஒருதம்பி கைகளை நீட்ட முயற்சி செய்து கொண்டிருந்தான்..

அது கொஞ்ச உயரத்துக்கு மேலே உயரவில்லை. திரும்பவும் கீழே விழுந்தது. அவன்தான் தண்ணீர் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை புரிந்துகொண்டேன்.அவனுக்குப் பக்கத்தில் இறந்த உடலங்கள் கிடந்தன.

விழுப்புண் தாங்கியவர்களும் இருந்தார்கள். ஓவென்று கதறி அழவேண்டும் போலிருந்தது.பக்கத்தில் யாரிடமாவது தண்ணீர் இருக்குமா என்று விசாரித்துப் பார்த்தேன் ஒருவரிடமும் இல்லை.

கிட்டத்தில் கிணறு கூட இல்லை தண்ணீர் எடுத்துவரக்கூடிய இடமும் இல்லை. எல்லாரையும் போலவே பார்த்துவிட்டு உதவமுடியாதவளாய், அவனைத் திரும்பிக்கூட பார்க்கச் சக்தியற்று வந்துகொண்டிருந்தேன். உள்ளம் நெருப்பாய் கொதித்தது.எப்படி வந்தேன் என்று தெரியாமலே நந்திக்கடற்கரையடியில் நாங்கள் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டேன்;.

எறிகணைகள் ஓய்ந்தபாடில்லை.நானும் அவளும் இருந்த பக்கமாக ஒரு 60 எம்.எம் மோட்டார் எறிகணை ஒன்று வந்து குத்தியது. அந்த இடத்திலேயே எல்லாம் முடிந்து விட்டது என்றுதான் நினைத்தோம். ஆனால் வந்து குத்திய எறிகணை வெடிக்காமல் கிடந்தது.

எனது உடமைப் பையையில்; இருந்த அறிக்கைகள் எல்லாவற்றையும் எரிக்கத் தொடங்கினேன். உடமைப்பையில் ஒவ்வொரு இடமாகக் குறைத்துக்குறைத்து இப்போது எஞ்சியது இதுவரை நாளும் பத்திரமாய் கட்டிக்காத்து வந்த சில புகைப்படங்கள்,எனது நீண்ட நாள் உழைப்பின் அறுவடையாய் இருந்த கரும்புலிகளது வரலாற்றைத்தாங்கிய நூல்.

அந்த நூலை வடிவமைத்துத் தந்த போராளி எனது கையில் தந்த தரவுகளைச் சேமிக்கும் கருவி (மெமறிஸ்ரிக்),எப்போதும் என்னோடு இருக்கும் கொப்பி,பேனை, இதைத்தவிர எனது தனிப்பட்;ட தேவைக்கான அத்தியாவசிய பொருட்கள,; அதை மிஞ்சி வேறு எதுவும் அந்தப்பையில் இல்லை. சொல்லப்போனால் தோழி தந்த அரைப்பாவாடை சட்டையைத் தவிர வேறு மாற்றுடை கூட என்னிடம் இல்லை.

என்னிடம் என்று சொல்வதை விட அனைவரது நிலையும் அதுவாகத்தான் இருந்தது. அந்தப் புகைப்படங்களை எடுத்துப்பார்த்தேன்.

'அண்ணையோட நின்று படமெடுக்க வேண்டும் என்பது எல்லோருடைய கனவு. அந்தக்கனவு பலருக்குக் கிடைக்கும் சிலருக்கு கிடைக்காமலே போய்விடும்.'

ஆனால் எனக்கு பலதடவை வாய்ப்புக் கிடைத்திருந்தது.இப்போது அதைக்கூட வைத்திருக்க முடியாத சூழலில் நான் இருந்தேன.; அந்தப்படங்களை எரிக்க மனம் இடங்கொடுக்கவில்லை. அண்ணாவின் படத்தைக் கிழிக்கவும் என்னால் முடியவில்லை.

நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு எனது படத்தை மட்டும் கிழித்து எரிகின்ற நெருப்பில் போட்டுவிட்டு அண்ணாவின் படத்தை நாங்கள் இருக்கிற பங்கருக்குள்ளே வைத்தேன்.

அடுத்து நான் எழுதிய புத்தகம். அட்டைப் படத்திலிருந்து ஒவ்வொரு தாளாகக் கிழித்துக்கிழித்து எரிகின்ற தீயில் போடுகின்றபோது இதுநாள்வரை ஒவ்வொரு செங்கல்லாய்ச் சேர்த்துச்சேர்த்து நான்கட்டிய கோபுரத்தை ஒரே நாளில் என் கையாலே தகர்த்தெறிவது போலிருந்தது. கையில் இருந்த தரவுகளைச் சேமிக்கும் கருவியை பக்கத்தில் கிடந்த கல்லால் குற்றி தூர வீசினேன்.

எந்தநேரம் என்ன நடக்கும் என்பதை சொல்லமுடியவில்லை. பாதுகாப்பகழிக்குள் இருந்தபடியே நான் அணிந்திருந்த எனது உடையை மாற்;றினேன். என்ஆளுமை, என்நிமிர்வு, என்அடையாளம் எல்லாமே என்னைவிட்டுப் போவதைப்போலிருந்தது. ஆனாலும் விடுதலைப் போராட்டத்தின் பாதித்தூரத்திலிருந்து பயணித்த நான் இந்தக் கணம் வரை எனது கடமையை சரிவரச் செய்திருக்கிறேன் என்ற திருப்தி மட்டும் முழுமையாக இருந்தது.

பொழுதும் சாயத் தொடங்கியது. எம் இனத்தை அழிப்பதற்காக உலக நாடுகள் எல்லாம் அள்ளிக் கொடுத்த ஆயுதங்களால் பெருமெடுப்பலான தாக்குதல்களை, நாலா பக்கமிருந்தும் எதிரி தொடுத்தவண்ணமிருந்தான். இப்போதும் எதிரியை நோக்கி சரமாரியான எதிர்த் தாக்குதல்கள் நடந்து கொண்டே இருந்தது.

எத்தனை துணிச்சல், எத்தனைவீரம் தாம் சண்டை செய்வது அரச படைகளோடு மட்டுமல்ல, ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கும் பெரும் வல்லரசுப் படைத்திட்டமிடல்களோடும், படைவளத்தோடும் என்பதைத் தெரிந்திருந்தும,; வருடங்களைக் கடந்தும் நீண்ட போரில் நிமிடங்கள் கூட ஓயாது களமாடும் ஒவ்வொரு படையணிகளையும் சேர்ந்த எங்கள் சகோதர சகோதரிகள் இந்தத் தேசத்தின் எல்லைச்சாமிகளாய்த் தெரிந்தார்கள்.அவர்களை என்றும் இந்த மண் நன்றியுடன் தலைவணங்கவேண்டும் என எனக்குள் எண்ணிக்கொண்டேன்.

ஒவ்வொரு கணங்களும் நீண்ட யுகங்களாகமாறிக் கொண்டிருந்தன. வானத்தில் பராவெளிச்சம் பரவத் தொடங்கியிருந்தது. நாங்கள் இருந்த இடமும் பாதுகாப்பற்றதாய் உணர, சொஞ்சம் நகர்ந்து இன்னுமொரு காப்பரணுக்குச் சென்றோம்.

இரவிரவாய் நந்திக் கடல் அதிர்ந்து கொண்டிருந்தது. வெளியில் என்ன நடக்கிறது என்பதை எங்களால் உணர்ந்து கொள்ளமுடியவில்லை. எல்லோர் முகங்களும் பாறைகள் போல் இறுகிக் கிடந்தன.

அழகே உருவான அவளது முகம் கூட சோபை இழந்து கிடப்பதாக எனக்குத் தோன்றியது. ஊடகப்பிரிவுக்கு நான் சென்றதிலிருந்து அவளது வளர்ச்சியை திறனை கூடவே இருந்து பார்த்திருக்கின்றேன். ஊடகத்துறை சார்ந்து அவளுக்கு தெரியாதது என்று எதுவுமே இல்லை. தனது குரல் ஆளுமையால்,தனது நடிப்புத் திறனால்,தனது படைப்புகளால், தனது தொகுப்பாற்றலால், தனது படப்பிடிப்பு வல்லமையால் எனப் பல்துறை ஆளுமையை தனக்குள்ளே தாங்கி நிற்கும்;; அவள், கணவனிடம் இருந்து இன்னும் எந்தத் தகவலும் வராத குழப்பத்தில் இருந்தாள்.குழப்பத்தோடே நேரங்கள் உருண்டோடின.

அவளது கணவனிடம் இருந்து அழைப்பு வந்தது. அவன்தான் நந்திக்கடலூடாக ஊடறுத்து இறங்கும் கடலணிகளுக்குப் பொறுப்பாக இருந்தான்.

''என்னைப் பார்க்க வேண்டாம். நீ அக்காக்களோடு வெளிக்கிட்டு போ..''ஆனால் அவள் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அவனோடு நின்றால் அவனையும் பாதுகாக்கலாம் என்பது அவள் எண்ணமாக இருந்தது.

அவனைத் தனியே விட்டுவிட்டு வெளியேறுவதற்கு அவள் மனது ஒருதுளியும் இடங்கொடுக்கவில்லை. ஏற்கனவே இந்தப் போர்ச்சூழலிற்குள்தான் அவள் போதிய மருத்துவ வசதி இன்றி தனது பிஞ்சுக் குழந்தையை இழந்திருந்தாள். இப்போது அவனுக்கும் ஏதும் நடந்துவிடுமோ என்ற அச்சம் அவளுக்குள் இருந்தது.அதனால்; அவன் நிற்கும் இடத்துக்கே தானும் வரப்போவதாக சொன்னாள்.

அவனும் அவளை அழைத்து வர ஆட்கள் வருவார்கள் என்றும் எங்களை வெளியேறிக் கொண்டு இருக்கும் மக்களோடு சேர்ந்து வெளியேறும்படியும் சொன்னான்.

நாங்களும் அவளை எங்களோடு வரும்படி அழைத்தோம்.

''நான் தனிய வந்து என்ன செய்யிறது எப்படியும் அவரையும் அழைத்துக் கொண்டு வரப்பார்க்கிறன்.இல்லையென்றால் ஏதோ நடக்கிறது வாழ்வதாக இருந்தாலேன்ன சாவதாக இருந்தாலேன்ன அது இரண்டு பேருக்குமே ஒன்றாகவே இருக்கட்டும்.. '''

அவள் தனது பிடிவாதத்தில் உறுதியாக இருந்தாள்.எங்களையும் வெளியே செல்வதற்கு தொடர்புகளை எற்படுத்தித் தந்துவிட்டு வெளியேறினாள்.நாங்களும் அவளும் செல்லும் பாதைஒன்றாக இருந்தது.அவள் நந்திக் கடல் பக்கமாகச் செல்ல நாங்கள் வட்டுவாகல் பக்கமாக நடக்கத் தொடங்கினோம்.

எல்லோர் மனங்களுக்குள்ளும் இனம்புரியாத அச்சமும் பதற்றமும் இருந்தது. எப்படிப்போகப்போகிறோம்? யாரோடு போகப்போகிறோம்? போனபின் என்ன நடக்கப்போகிறது? எல்லோருக்குள்ளும் விடைதெரியாத பல கேள்விகள் இருந்தன. ஆனாலும் அமைதியாய் நகர்ந்து கொண்டிருந்தோம்.

நாங்கள் வெளிக்கிடும் போதும், இறுதிவரை நின்று போராடுவது என்ற ஓர்மத்தோடு நின்ற போராளிகள் ~கவனமாக போங்கள் இது முடிவல்ல..பெரும் பொறுப்புகளை சுமந்து செல்கிறீர்கள் உங்களை நம்பித்தான் இங்கு நாங்கள் நிற்கிறோம்...'

என்று எங்களை வழியனுப்பி வைத்த போராளிகளை நினைத்தபடியே நடந்து கொண்டிருந்தேன். எதிரியின் மனிதப்பேரவலத்தை சுமந்த மக்கள் தம் உயிர்க்கூடுகளைச் சுமந்தபடி நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து நாங்களும் நடக்கத் தொடங்கினோம்.

17 ஆம் நாள் காலை மெல்ல மெல்ல புலரத் தொடங்கியது. ஒருவரை ஒருவர் முகம்பார்க்கக் கூடிய அளவுக்கு வெளிச்சம் பரவியிருந்தது. அப்போதுதான் என் நெருங்கிய தோழியைக் கண்டுவிட்டேன்.சோர்ந்து போயிருந்த மனதுக்குப் பெரும் தெம்பு கிடைத்ததுபோலிருந்தது. அவளினுடைய அம்மா ஏற்கனவே மூன்று போராளிகளைக் கூட்டிச் செல்ல வேண்டும். அனாலும் கொஞ்சம் கூட அச்சமின்றி எல்லாப்போராளிகளையும் தான் அழைத்துச் செல்வதாகச் சொன்னார்.

''பயப்படததையுங்கோ பிள்ளைகள் எல்லாரையும் நான் கூட்டீற்றுப் போறன்..எனக்குப் பின்னால வாங்கோ...''

அந்த ஒற்றைச் சொல் தந்த நம்பிக்கையில் அம்மாவுக்குப் பின்னாலே சென்று கொண்டிருந்தோம்.வட்டுவாகல் பிரதானசாலையில் இருந்து கொஞ்சம் இறங்கி ஒரு தொடர் அணியாக நாங்கள் நடந்து கொண்டிருந்தோம்.அவ்வளவு நெரிசலுக்குள்ளும் எங்களணி தனது தொடரைக் கைவிடவில்லை.

கால்களில் எல்லாம் மக்கள் பாவித்து விட்டுச் சென்ற பொருட்கள் மிதிபட்டன. தரப்பால் கொட்டில்களை இழுத்துக்கட்டிய கட்டைகள் இடித்தன,மக்கள் சேர்த்துச்சேர்த்து வைத்திருந்த பொக்கிசங்கள் எல்லாம் கால்களில் மிதிபட்டன. அந்த நேரத்தில் கூட எதிரியின் தாக்குதல்கள் தொடர்ந்தபடியே இருந்தன.

தாக்குதலுக்கு காப்பாக மக்கள் இருந்து விட்டுச் சென்ற காப்பகழிகளிகளில் இறங்கியிருந்தோம். அப்போதுதான் காதணி எதுவும் அணியவில்லை என்பதை தோழி நினைவுபடுத்தினாள். என்னிடம் காதணி எதுவும் இல்லை.

பக்கத்தில் இருந்த இன்னுமொரு தோழி ஒரு 'இமிற்றெசன்' தோடொன்றைத் தந்தாள். அந்த அமளிக்குள் எனக்கு காதுகுத்து நடந்தது. காதிலிருந்து இரத்தம் வந்தது. உணர்வுகள் மரத்துப்போயிருந்ததால் அந்தவலிகூடத் தெரியவில்லை.

மீண்டும் எழுந்து நடக்கத் தொடங்கினோம்.வீதி நிறைந்த மக்கள் வெள்ளம்.ஆங்காங்கே ஆதரவற்றுக் கிடந்த உடலங்கள்.

'காட்டுக்க ஆமிகாரன் நிக்கிறான்' குசுகுசுப்புகள் எங்கள் காதிலும் எட்டியது. அப்போதுதான் கழுத்தில் கிடந்த குப்பிதகடு நினைவுக்கு வந்தது. கழுத்தில் கிடந்ததைக் கழற்றி கையில் வைத்திருந்தேன்.

இப்போது வட்டுவாகல் பக்கமாக காடுகளோடு காடுகளாய் நின்ற இராணுவத்தினரை நாங்களும் கண்டு விட்டோம். வீதிகளில் தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் எவரும் ஒருத்தரை ஒருத்தர் அறிந்தவர்களாகக் காட்டிக் கொள்ளாது சென்று கொண்டிருந்தார்கள்.

இன்னும் சிலர் தங்கள் பிள்ளைகளைத் தேடித்தேடி காண்பவர்களிடம் எல்லாம் விசாரித்துக் கொண்டு திரிந்தார்கள்.எப்படியாவது தங்கள் பிள்ளைகளை கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற ஏக்கம்,தவிப்பு அவர்களின் முகங்களில் தெரிந்தது.

வீதியில், உழவு இயந்திரப் பெட்டிகளில் விழுப்புண் தாங்கியவர்களை ஏற்றிக் கொண்டு சென்றார்கள்.பாதை திறந்துவிட்டான் என்பதைப் புரிந்து கொண்டோம். கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வட்டுவாகல் ஆலமரத்தடிக்கு வந்து விட்டோம். இப்போது இராணுவத்தினரை நேருக்கு நேர் மிக அருகில் பார்க்கிறோம். இராணுவத்தினர் போராளிகளாக இருந்தவர்களை சரணடையும்படி அறிவித்தல் செய்து கொண்டிருந்தார்கள்.

அவர்களின் முகங்கள் எல்லாம் கோரமும் குரோதமும் நிறைந்திருப்பதாக தெரிந்தது. நாங்கள் வெளியேறிக் கொண்டிருப்பவர்களையே பார்த்துக் கொண்டு மணிக்கணக்கிலே நின்றோம்.இனி நாங்களும் உள்ளே சென்றுதானே ஆகவேண்டும்...கையில் வைத்திருந்த குப்பிதகடுகளை பனைமரப் பொந்தில் போட்டேன்.

அது என்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது. அது என்னைக் கோழை என்று எண்ணியிருக்கக் கூடும்..

ஆனால் எனது உயிர் இருந்தால் இன்னும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இப்போது எனக்குள் அதிகம் இருந்தது. அதே நம்பிக்கை எல்லோருக்குள்ளும் இருந்தது. எதிர்கால சந்ததிகளைப் பக்குவமாகத் தீட்டுகின்ற பெரும் கடமையும் பொறுப்பும் இருந்தது. நாம் தோற்றுப் போனவர்கள் அல்ல..,தோற்கடிக்கப்பட்டவர்களும் அல்ல..,

எத்தனை நாடுகள் எம்மைக் கூட்டுச்சேர்ந்து அழிப்பது தெரிந்தும் அந்த வல்லாதிக்க சக்திகளை எல்லாம் எதிர்த்து நின்று களமாடும் வீரத்தைக் கொண்டவர்கள். சாம்பல்மேடுகளில் இருந்துதானே பல சரித்திரங்கள் பிறப்பெடுக்கின்றன.

இதோடு எமது விடுதலைப் போராட்டம் ஓய்ந்து போகப்போவதில்லை. போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. எந்த மக்களின் விடுதலைக்காக ஆயுதங்கள் ஏந்தினோமோ அந்தமக்களின் விடுதலையைப் பெற்றுக் கொடுக்கும்வரை தொடர்ந்து உழைக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பையும் கடமையும் தாங்கியவர்களாய் எங்கள் மண்ணிலேயே திறந்தவெளிச் சிறைக் கைதிகளாய் ஒவ்வொரு அடியாய் நகர்ந்து வட்டுவாகல் பாலம் கடக்க கால்களை எடுத்து வைத்தோம்.

மீண்டும் சந்திப்போம்..

  தடம் அழியா நினைவுடன் … மே-13 – பகுதி 1 தடம் அழியா நினைவுடன் … மே-13 – பகுதி 2 தடம் அழியா நினைவுடன் … மே-13 – பகுதி 3 தடம் அழியா நினைவுடன் … மே-14 – பகுதி 1 தடம் அழியா நினைவுடன் … மே-15 – பகுதி 1 தடம் அழியா நினைவுடன் … மே-15 – பகுதி 2 தடம் அழியா நினைவுடன் … மே-15 – பகுதி 3 தடம் அழியா நினைவுடன் … மே-16 – பகுதி1
 தாரகம் இணையத்திற்காக அ. அபிராமி